இலங்கை: கொள்ளையரை சுட்டுக்கொன்ற போலீஸ்

இலங்கையின் தென்பகுதியின் மாத்தறை மாவட்டத்தின் உனுகொடுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத குழுவை சேர்ந்த ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இலங்கையின் தென்பகுதியின் மாத்தறை மாவட்டத்தின் உனுகொடுவ பிரதேசத்தில், நகைக் கடையில் திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட போலீசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். அத்தோடு சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இதில் நேற்று மாத்தறை உனுகொடுவ சந்தியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டவரான சாமர இந்திரஜித் என்ற 34 வயது மதிக்கத்தக்க நபர் கம்பஹா வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இன்று காலை தான் ஒரு பொதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக கூறியிருக்கின்றார்.

அதன் பின்னர் இன்று காலை மாத்தறை போலீசார் இவரை மாத்தறை கிருலேகெலே பிரதேசத்திற்கு அழைத்துசென்றுள்ளனர்.

அங்கு அவர் தான் மறைத்து வைத்திருந்த பையில் இருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்து போலீசார் மீது வீச முற்பட்ட போது போலீசார் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக மாத்தறை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதில் சட்டவிரோதக் குழுவை சேர்ந்த சாமர இந்ரஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :