சேலம் 8 வழி சாலை: நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலத்தை அளவு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருத்து கேட்புப் பணிகள் முடியும் முன்னரே அதிகாரிகள் அளவீடு செய்வதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சேலம் முதல் சென்னை வரை 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் மட்டும் 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு 26 கிராமங்களில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது ஆட்சேபனையை கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சாலை அமையவுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி கருத்து கேட்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் வருவாய் துறையினர், நில அளவை துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அடிமலை புதூர் பகுதியில் நிலம் அளவீடு செய்தனர். கடந்த வாரம் நடைபெற்ற நில அளவையின்போது பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் தங்களது பணியை பாதியிலேயே கைவிட்டனர்.

இன்றைய தினம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும் என்பதால் ஏராளமான போலீசார் குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், அடிமைலை புதூர் பகுதியில் தோட்டத்தில் நில அளவை செய்ய முயன்றபோது, அந்த தோட்டத்தின் உரிமையாளர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் நிலம் அளவை செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் 10ம் தேதி ஆச்சாங்குட்டப்பட்டி பகுதி மக்களிடம் கருத்து கேட்பு நடைபெறவுள்ள நிலையில் அதிகாரிகள் முன்கூட்டியே இந்த திட்டத்திற்காக அவசர, அவசரமாக நிலம் அளவை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :