You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாழ்ப்பாணம் கோயில் முன்பாக துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
இலங்கையின் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள சகாயமாதா கோயிலுக்கு முன்பாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சகாய மாதா கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடந்த ஆராதனை நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த மல்லாகம் குழமன்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்:-மல்லாகம் சந்தியில் அமைந்துள்ள சகாய மாதா கோவிலில் நேற்று மாலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்று கொண்டிருந்தபோது வேறு இடத்தில் இருந்த வந்த இளைஞர் குழு குறித்த இளைஞன் ஒருவரை தாக்குவதற்காக துரத்தி வந்துள்ளனர். குறித்த குழுவினால் துரத்தி வரப்பட்ட இளைஞன் கோவில் திருவிழா கூட்டத்தினில் புகுந்துள்ளார். இதனால் அந்த இளைஞனை தாக்குவதற்காக வந்த இளைஞர் குழுவினர் வாள்களுடன் கோவிலின் முற்பகுதியில் நின்றிந்தனர்.
இந்நிலையில், கோவில் திருவிழாவில் பங்கேற்ற இளைஞன் ஒருவன் வீதிக்கு வந்த நேரம் வாள்களுடன் காத்திருந்த இளைஞர் குழு குறிந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞன் குறித்த குழுவின் தாக்குதலில் இருந்து மேற்படி இளைஞனை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அப்போது காங்கேசன்துறை வீதி ஊடக முச்சக்கர வண்டியில் வந்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து வாள்களுடன் வந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.
விசாரணை ஒன்றிற்காக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது தம்மை குறித்த பகுதியில் வைத்து குழுவொன்று தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்தே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ளனர்.குழு மோதலில் ஈடுபட்டவர்களை எதுவும் செய்யாமல், மோதலில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை காப்பாற்ற முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இச்சம்பவத்தை சோடித்துள்ளதாகவும், துப்பாக்கிசூட்டினை மேற்கொண்ட போலீஸ் உத்தியோகத்தரை மோட்டார் சைக்கிளில் சிவில் உடை தரித்த நபர் ஒருவர் அழைத்து சென்றதாகவும் அப்பகுதி பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி எங்கும் விஷேட அதிரடிப்படையினரும் கலகமடுக்கும் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அவ்வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து பதட்டமான சூழல் நிலவியது .இரவு 9.30 மணியளவில் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிடுமாறும் மக்களிடம் கோரியதையடுத்து மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4 இளைஞர்கள் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இரண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி வடமராட்சி கிழக்கில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் துன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்துள்ளார்
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் உள்ளிட்ட குழுவினர் இவ்விசாரணையை நடத்தியுள்ளனர். மேலும் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை சேகரித்த ஆணைக்குழுவினர் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5பேரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்