You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை
- எழுதியவர், பங்கஜ் பிரியதர்ஷி
- பதவி, பிபிசி
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை.
அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றுமே மனதை விட்டு நீங்காத போட்டி என்றால் அது மிகையாகாது.
பிரபல நட்சத்திர வீரர்கள் பலர் விளையாடிய இந்த போட்டி மிகவும் கடுமையானதாக மட்டுமல்ல, சுவாரசியமானதாகவும் இருந்தது. ஆனால் போட்டி 3-3 என்ற சமநிலையில் முடிவடைந்தது.
இந்த போட்டிக்கு பிறகு மிக அதிக அளவில் பேசப்பட்டவர் போர்ச்சுகல் அணியின் தலைவரும், கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவருமான ரொனால்டோ. அவர் அடித்த ஹேட்ரிக் கோல்களால் போர்ச்சுகல் அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
வில்லனாக இருந்து ஹீரோவாக மாறினார்
ஆனால், நாம் இன்று பேசப்போவது, ஆட்டத்தின் முதல் நான்கு நிமிடங்களில் அணியின் வில்லனைப் போல விளையாடிய ஒரு வீரரைப் பற்றித்தான்.
ஆனால், ஆட்டம் முடிவடைந்தபோது, அவர் ஒரு ஹீரோவாக போற்றப்பட்டார் என்றால் அது மிகையாகாது. அவர்தான் கால்பந்து உலகில் நாச்சோ என்று அறியப்படும் ஜோஸே இக்னைஸியோ ஃபெர்னாண்டஸ்.
28 வயதான நாசோ, உலகிலேயே மிகப் பிரபலமான ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப்பின் தடுப்பு ஆட்டக்காரர்.
நாச்சோ ஃபவுல் செய்ததால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கேப்டன் ரொனால்டோ, ஸ்பெயின் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் போட்டியின் அந்த குறிப்பிட்ட கணத்தை நாச்சோ எப்போதும் மறக்கவே மாட்டார். கோஸ்டா அடித்த கோல், ஸ்பெயின் அணி கணக்கை சமன் செய்ய உதவியது. ஆனால் அடுத்து ரொனால்டோ அடித்த கோலால் போர்ச்சுகல் மீண்டும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பகுதியில் மீண்டும் ஸ்பெயின் மற்றொரு கோல் அடிக்க, கணக்கு சமன் ஆனது.
இப்போது ஸ்பெயினின் முகாமில் உற்சாகம் கரைபுரண்டது. நாச்சோவின் கோல் அவரது ரசிகர்களை நடனம் ஆட வைத்தது.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாச்சோ
ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தியது. போர்ச்சுகலின் வலைக்குள் சென்ற பந்து திரும்பி நாச்சோவை வந்தடைந்தது.
அணியின் இடப்புறம் இருந்த நாச்சோவுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார். காற்றில் சுழன்ற பந்து போர்ச்சுகலுக்கு கோலாக மாறியது.
தன்னுடைய நாட்டிற்காக அவர் அடித்த முதல் சர்வதேச கோல் அது. போர்ச்சுகலின் கேப்டன் ரொனால்டோ தனது அணிக்காக கோல் அடித்து சமன் செய்தார். அவர் ஹாட்ரிக் கோல்களை அடித்தார், ஆட்டநாயகன் விருதும் பெற்றார். ஆனாலும், உண்மையில் நாச்சோவின் கோல், கால்பந்து ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்கா இடம்பெறும்.
கனவை நனவாக்கிய நாசோ
பல கால்பந்து நிபுணர்களின் கருத்துப்படி, ஸ்பெயினின் இந்த கோல், 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் மிகச்சிறந்த கோலாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நாச்சோ மற்றும் அவரது இளைய சகோதரர் அலெக்ஸ் இருவரும் ஸ்பெயினில் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்கள். ஆனால், இந்த இடத்தை அடைவதற்கு நாச்சோ பல தடைகளை தாண்டி வந்தார்.
தனது 12ஆம் வயதில் இருந்தே நீரிழிவு நோயின் முதல் வகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக 2016ஆம் ஆண்டு நாச்சோ அறிவித்தார். வாழ்க்கை முழுவதும் தொடரும் இதுபோன்ற ஒரு நோய் அவரது கால்பந்தாட்ட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கும் சாத்தியங்களே அதிகமாக இருந்தது. அந்நேரத்தில் அவர் ரியல் மாட்ரிட் அணியில் இளைஞர் பிரிவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்.
அவர் ஒருபோதும் கால்பந்து விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும், நாச்சோ மன உறுதியை இழக்கவில்லை. அவர் நோயுடன் போராடினார். மீண்டும் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகள் கேட்டார். பல பரிசோதனைகளுக்கு பிறகு நாச்சோ கால்பந்து விளையாட்டை தொடரலாம் என்று பச்சைக் கொடி காட்டினார்கள்.
தனது கனவை நனவாக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டார் நாச்சோ. நீண்ட காலம் வரை இன்சுலின் கிட்டுடன்தான் மைதானத்திற்கு செல்வார், பயிற்சிகளை மேற்கொள்வார். இடையில் இன்சுலினை ஊசியாக போட்டுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுவார்.
2002 ஆம் ஆண்டில் ரியல் மேட்ரிட் அணியின் சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைத்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சிறுவனாக இருந்தபோது அவர் கண்ட கனவு நனவானது.
கனவுகள் இருந்தால், அதை நிறைவேற்றும் மனதிடமும் இருந்தால், தடைகளை தகர்த்தெறிந்து வெற்றியடையலாம் என்பதற்கான நிதர்சனமான உதாரணம் நாச்சோ.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்