You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாழ்வாதாரம், உறவுகள் அழிந்து 8 வழிச் சாலை எதற்கு? குமுறும் நிலவரம்பட்டி குடும்பம் #GroundReport
வாழ்வாதாரம் போய், உறவுகளும் போய் , 8 வழிச் சாலை எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர் சேலத்தை சேர்ந்த மைலியம்மாள் குடும்பத்தினர்.
சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த சாலை செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ள ஊர்களில் ஒன்று நிலவரம்பட்டி.
சேலம் மாவட்டத்திலிருந்து ராசிபுரம் போகும் வழியில் சேலத்திற்கு மிக அருகில் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள அமைதியான ஊர் இது.
இந்த ஊரில் வசிக்கிறது மைலியம்மாளின் குடும்பம். 4 தலைமுறைகளாக தாங்கள் விவசாயம் செய்து வரும் விளை நிலத்தைப் பிளந்தவாறு நடுவில் செல்கிறது 8 வழி சாலைக்கு குறிக்கப்பட்ட பாதை என்று ஆற்றாமையோடு கூறுகிறார் மைலியம்மாள்.
ஜருகுமலை, ஊத்துமலை இவைகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஊரில் பாடுபட்டு திருத்தி பண்படுத்தி உழும் நிலம், இப்போது கைவிட்டுப் போனால் உயிரை விட்டு விடவேண்டியது தான் என்று கூறுகிறார் இவர். இவரது குடும்பத்தினரும் நிலத்தை விட்டுத்தர சம்மதிக்கமாட்டோம் என்கின்றனர்.
தங்கள் குடும்பத்தின் 8 ஏக்கர் நிலம் சாலைக்காக எடுக்கப்படும் என்பதோடு சுற்றிலுமுள்ள மலைகளும் அழிக்கப்படும். இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்கிறார் இவரது மகன் வெங்கடாசலம்.
தொழிற்சாலைகளை, சாலைகளை எங்கு வேண்டுமானாலும் அமைக்க முடியும். பண்படுத்திய நிலங்களின் நிலை என்னவாகும்? ஆனால் தரைமட்டமாக்கிய மலைகளை ஒருபோதும் உருவாக்க இயலாது. அதுபோல விவசாய நிலங்களை உருவாக்க முடியாது என்று மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
உலகின் பல நாடுகளும் இயற்கைக்கும்,வேளாண்மைக்கும் முக்கியத்துவம் தரும் வேளையில் இயற்கை சார்ந்து வாழும் நாம் விவசாயத்தை தொலைத்தால் எதிர்கால சந்ததியின் நிலை என்னாவது என கேள்வி எழுப்புகின்றார் மைலியம்மாள்.
"சலுகை தரவிடாலும் பரவாயில்லை. எங்கள் காலத்திலேயே விவசாயத்தை அழிப்பதால் எங்கள் சந்ததிகளின் நிலை என்னாகும்?" என்கிறார் அவர்.
"பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?" (காணொளி)
ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்த நினைப்பதை விட்டுவிட்டு மலைகளை விவசாய நிலங்களை அழிப்பது நியாமா? என்று கேட்கிறார் அவர்.
வெங்கடாசலத்தின் மனைவி கோமதியோ "உறவுகளோடு சேர்ந்து நிம்மதியாக வாழும் எங்களை இந்த சாலை பிரித்து அகதிகளாக்கிவிடும்," என்கிறார் .
"குடும்பமாக உறவுகளோடு வாழவிட்டால் போதும். மாடு, கன்று, விவசாய பூமியை பிரிவதற்கு உயிரைவிடுவது மேல்" என்கிறார் அவர்.
கணவனை இழந்து தாய் வீட்டில் இருக்கும் மையிலம்மாளின் மகள் பழனியம்மாள் கூறுகையில் "சகோதரன், தாய் ஆதரவில் உள்ளேன். குடும்பத்தினர் நிலையே இது என்றால், என் நிலை என்னவாகும்?" என்று கண்ணீர் மல்க கேட்கிறார்.
அரசு மக்களிடம் முழுமையான விவரங்களை தர மறுக்கின்றது , பணம் மட்டும் போதுமா எதிர்காலத்திற்கு? இவ்வளவு குறுகிய கால பயணம் யாருக்கு லாபம் என்று கேட்கிறார் வெற்றி. இவரும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினரே.
கூட்டுக் குடும்பம் உடைபடுமோ, வாழ்வாதாரம் நசுக்கப்படுமோ என்ற பயத்தில் உள்ள இந்தக் குடும்பம், வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்த மண்ணை விட்டுப் போக இயலாது என்று உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது.
பசுமைவழி சாலைத் திட்டம் - சேலம் மக்கள் கடும் எதிர்ப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்