காலா: ”திரைப்படத்தில் அரசியல் கலப்பது தவறு இல்லை”
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டால் 'காலா' திரைப்படத்தை புறக்கணிக்க சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் திரைப்படத்தை புறக்கணிப்பது தீர்வைத் தருமா? அரசியலையும் திரைப்படத்தையும் கலப்பது முறையா? என்று கேட்டிருந்தோம்.

பட மூலாதாரம், காலா
அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

"அதென்ன அரசியலையும் திரைப்படத்தையும் கலக்கலாமா என கேள்வி? இரண்டையும் கலந்ததால்தானே, ரஜினி என்னும் பிம்பம் அரசியலுக்கு வர துடிக்கிறது.. திரைபப்படத்தைத்தாண்டி ரஜனிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!" என்கிறார் பிபிசி தமிழ் நேயர் லது ஜனன்.

"திரையில் கிடைத்த புகழை அரசியலில் பயன்படுத்த முயற்சிப்பவர்களின் திரைப்படங்களை அரசியலுடன் கலப்பது சரியே. இந்திய சுதந்திரத்திற்காக பரங்கியரின் பொருள்களை புறக்கணித்தது சரி என்றால் காலாவை புறக்கணிப்பதும் சரியே." என்பது கோமான் முகம்மதுவின் வாதம்.

சரோஜா பாலசுப்ரணியன்: "தீர்வைத் தராது, ஆனால் ரஜினி தான் பேசிய பேச்சின் தீவிரத்தை உணர்த்தும். இனி வரும் காலத்தில் இன்னும் ஜாக்கிரதையாக பேசுவார். ஒரு வேளை அரசியலை விட்டே விலகுவார்" என்கிறார்.

"திரையுலகும் அரசியல் உலகும் ஒன்றுக்கொன்று பிண்ணி பிணைந்தது போல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த கால மக்கள் அரசியல் வேறு சினிமா வேறு என்று நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். அரசியலும் சினிமாவும் கலந்ததால் கெட்டு போனது அரசியல் தான். ரஜினியை நடிகர் என்ற இடத்தில் எப்போதும் தமிழக மக்கள் வைக்க வேண்டும். சினிமா துறையினரின் பணி இனிமேல் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ,முத்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவது என்ற எல்லைக்குள் நிற்க வேண்டும் . மக்களும் சினிமா துறை மட்டும் தமிழ்நாட்டில் இல்லை எத்தனையோ துறைகள் இருக்கின்றன அந்த துறைகளிலும் உச்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் இனி அவர்களையும் சற்று நோக்கினால் தான் தமிழகம் வளம் பெறும் என்ற எண்ணத்தை வளர்த்து எடுக்க வேண்டும்." என்கிறார் நெல்லை டி முத்துசெல்வம்.

"அனைத்து எதிர் கட்சிகளும் ஒரு சார்பு நிலை எடுத்த போது துப்பாக்கிச்சூட்டையும் கண்டித்து அதே சமயம் காவலர்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து தைரியமாக பேசியதை பாராட்ட வேண்டும். காவலர்களும் மனிதர்கள் தானே?அவர்களும் அந்த ஊரை சார்ந்தவர்கள் தானே? காலா திரைப்படத்தை பார்க்கக்கூடாது என்று கூறுவது வெறுப்பு அரசியல். ரஜினி என்ற தனி மனிதன் மீதுள்ள வன்மத்தின் வெளிப்பாடு" என்கிறார் ஸ்ரீதரன் கேசவன்.
"அரசியல் வேறு சினிமா வேறு என்பதை தற்போதுள்ள தமிழ் சமூகம் நன்று உணர்ந்துள்ளது ஆகவே ஒரு திரைபடத்தை எதிர்ப்பதால் எந்த வித நன்மையும் கிடைக்க போவதில்லை மாறாக அது அந்த துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும் இனியும் தலைவர்களை திரையில் தேடும் சமூகமாக நாங்கள் இருக்க மாட்டோம்" என்கிறார் வினோத் ஞானபிரகாசம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












