"தமிழகத்தில்தான் நீட் பிரச்சனை; ஆனால், ரஷ்யாவில் மருத்துவம் படிப்பது எளிது"

ரஷ்யா வாய்ப்புகளுக்கான பூமி - மாஸ்கோ தமிழர்கள்

"படிக்கனும்னு நினைச்சா எங்க வேணும்னாலும் படிக்கலாம். ஆனா, தமிழ்நாட்டுல நீட் பிரச்சனைய பாக்கும்போது இங்கு இலவசமாகவே படிக்கலாம்" என்று பிபிசியிடம் கூறுகிறார் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் மாணவி.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சிலரிடம் பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவத்ஸவா பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் கலந்துரையாடினார்.

ரஷ்யாவில் இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் படித்துவரும் மாணவி பிபிசியிடம் பேசியபோது, இங்கு வழங்கப்படும் மருத்துவ பயிற்சி, எதிர்காலத்தில் தன்னை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ரஷ்ய கலாசாரம் நன்றாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், படித்துக் கொண்டே வாழ்க்கையையும் நன்கு அனுபவிப்பதாக கூறினார்.

"ஆனா, தமிழ்நாட்டு சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்றேன்" என்கிறார் அவர்.

ரஷ்யாவில் மருத்துவம் படிப்பது எளிது

மேலும், இது குறித்து பேசிய மற்றொரு மருத்துவ மாணவர், முதலில் குளிர் காலநிலை மிகப் பெரிய பிரச்சனையாக இருந்ததாக குறிப்பிடுகிறார். இங்கு பல தமிழர்கள் இருப்பதால் தாய்நாட்டை போல உணர்வதாக அவர் தெரிவித்தார்.

பல புதிய மொழிகளை கற்றுக்கொள்ளலாம். நிறைய தெரிந்து கொள்ளலாம். இங்கு சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் 17 ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும், தமிழகத்தின் மீதான காதல் எப்போதும் குறையாது என்கிறார் மாஸ்கோவில் வாழ்ந்து வரும் தயாபாலன்.

ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்தபோது அங்கு சென்றார் தயாபாலன்.

"சோவியத் ஒன்றியமாக இருந்தபோது, ஒவ்வொரு நாடாக சென்று மக்களை இங்கு கொண்டு வந்தார்கள், பிறகு ரஷ்யாவாக இது மாறியபோது, வணிகமயமாக்கப்பட்டது. நாங்கள் வரும்போது படிப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மாணவர்களைவிட தொழில் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் மருத்துவம் படிப்பது எளிது

ஏனென்றால், ரஷ்யாவில் மருத்துவம் படித்தால் இந்தியாவுக்கு சென்று வேறு ஒரு தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும் என்பதையும் தயாபாலன் குறிப்பிடுகிறார்.

"அதிக வாய்ப்புகள் உள்ள நாடு ரஷ்யா" என்று கூறுகிறார் ரஷ்யாவில் பி எச் டி பயின்று வரும் திவ்ய பிரசாந்த்.

அதே போல, 1984ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமாக இருந்தபோது அங்கு படிக்க சென்று தற்போது அங்கேயே தொழில் செய்து வரும் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, "இப்பொழுது இந்திய உணவகங்கள் எல்லாம் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது, இந்திய பொருட்களே கிடையாது" என்கிறார்.

சோவியத் ஒன்றியம் ரஷ்யாவாக மாறிய காலகட்டத்தில் வர்த்தகம் ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்தது. தொழில் செய்வது குறித்த விதிகள் பற்றி சரியாக தெரியவில்லை. ரஷ்யா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் அது புதிதாக இருந்தது. அப்போது வங்கி முறை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: