இந்துத்துவா அரசியலுக்கு உதவியா? - சர்ச்சையில் `பேடிஎம்`

    • எழுதியவர், டெவினா குப்தா
    • பதவி, பிபிசி

இணையதளத்தில் தேடுவதற்கு 'கூகுள்' செய்வது என்றும், அச்சுப் பிரதி எடுப்பதற்கு 'ஜெராக்ஸ்' எடுப்பது என்றும் அந்த நிறுவனங்களின் பெயரே வினைச்சொல்லாகிப் போனதைப்போல இணையதள பணப்பரிமாற்றங்களுக்கு 'பேடிஎம்' பயன்படுத்துவது என்ற சொல்லே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கத்துடனேயே விஜய் சேகர் சர்மா பேடிஎம் நிறுவனத்தை நிறுவியபோது 'பேடிஎம் கரோ' (பேடிஎம் பயன்படுத்துங்கள்) எனும் சொல்லை அதன் விளம்பரத் வாசகமாக பயன்படுத்தினார்.

பேடிஎம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விஜய் சேகர் சர்மா

ஆனால், பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல் கசிவு குறித்த சர்ச்சை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரகசியப் புலனாய்வில் கசிந்த உண்மை

சமீபத்தில் கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய ரகசியப் புலனாய்வில் விஜய் சேகர் சர்மாவின் சகோதரரும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவருமான அஜய் சேகர் சர்மா, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தமக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்தும், காஷ்மீரில் காவல் படைகள் மீதான கல்லெறி சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து பயன்பாட்டாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு வந்த விண்ணப்பம் குறித்தும், தாம் பேசுவது ஒளிப்பதிவு செய்யப்படுகிறது என்பது தெரியாமல் பெருமையாக கூறினார்.

சட்டபூர்வமான காரணங்களைத் தவிர தங்கள் நிறுவனம் பயனாளிகளின் தரவுகளை பகிர்ந்துகொள்வதில்லை என்று அந்தக் காணொளி வெளியானபின் பேடிஎம் நிறுவனம் கூறியது. எனினும், அஜய் சேகர் சர்மா பேசியது குறித்த விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. அது குறித்து பிபிசி கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் தரப்படவில்லை.

தங்களுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முறையற்ற சலுகைகளை வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பேடிஎம் நிறுவனத்தின் முதல் வெற்றி

நவம்பர் 2016இல் அதிக மதிப்புடைய ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டபின் பேடிஎம் நிறுவனத்தின் பயனாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 2010இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியர்கள் அதிகமாக பணப் பரிமாற்றத்திற்கு ரூபாய்த் தாள்களையே பயன்படுத்துவது வளர்ச்சிக்கான தடையாக இருந்தது. ஆறாவது ஆண்டில் அதன் பயனாளிகள் எண்ணிக்கை 12.5 கோடியானது.

பேடிஎம்

பட மூலாதாரம், Getty Images

ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 30 லட்சம் இணையதள பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததை அந்நிறுவனம் கொண்டாடியது.

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களில் அதன் பயனாளிகள் எண்ணிக்கை 50% அதிகரித்தது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாததால், நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர வர்க்கங்களை சேர்ந்த சுமார் 19 கோடி பேர் பேடிஎம் பயன்படுத்தத் தொடங்கினர்.

பேடிஎம் எப்படி வளர்ந்தது?

பணமதிப்பு நீக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தனது தாய் நிறுவனமான 'ஒன்97'இன் 1% பங்குகளை 325 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பேடிஎம் பேமெண்ட் வங்கியைத் தொடங்கினார்.

பின்னர் அலிபாபா, எஸ்.ஏ.ஐ.எப் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் முதலீட்டால் அடுத்த ஆறு மாதங்களில் தனது நிறுவனத்தின் மதிப்பில் 200 மில்லியன் டாலர்களை சேர்த்தார்.

பின்னர் ஜப்பானிய நிறுவனமான சாஃப்ட் பேங்க் நிறுவனத்தையும் தனது வசம் இழுத்து 140 கோடி டாலர் முதலீடு செய்யவைத்தார்.

பேடிஎம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி

வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகைகளால் பேடிஎம் இணையப் பணபரிமாற்றச் சந்தையில் முதன்மையான நிறுவனமானது. 2015இல் 336 கோடி ரூபாய் வருவாய் இருந்த இந்த நிறுவனம் 2016-17ஆம் நிதியாண்டில் 828.6 கோடியானது.

தற்போது 30 கோடி பயனாளிகளால், 940 கோடி ரூபாய் மதிப்பில், தினமும் சராசரியாக 7 லட்சம் பணபரிமாற்றங்கள் பேடிஎம் செயலி மூலம் செய்யப்படுகின்றன.

அரசியல் சர்ச்சையில் பேடிஎம்

பிரதமர் நரேந்திர மோதி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' நூலை தங்கள் செயலியின் முகப்பு பக்க விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தியதை அஜய் சேகர் சர்மா அந்தப் புலனாய்வின் ஒளிப்பதிவில் கூறியுள்ளார். தங்கள் செயலியை பயன்படுத்தி வலதுசாரி அரசியலை வளர்ப்பதாக எதிர்க்கட்சிகள் பேடிஎம் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளன.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபின், 'சுதந்திர இந்தியாவில் நிதித்துறை வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகவும் துணிச்சலான முடிவு' என்று பிரதமர் மோதியின் படத்துடன் பேடிஎம் விளம்பரம் செய்தது.

பேடிஎம் நிறுவனது ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார். பிரதமர் நரேந்திர மோதியை 'பேடிஎம்வாலா' என்று மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜீ கூறினார். 'PAYTM = PAY TO PM' என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

உடனே சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு பேடிஎம் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியது. பிரதமரின் படத்தை பயன்படுத்தியதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் பேடிஎம் மன்னிப்பு கோரியது.

டெல்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் ஜனவரி 2017இல் டெல்லியில் ஒரு குடியிருப்பில் தனது பேடிஎம் செயலியை காட்டிப் பேசும் காணொளியை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. சீன முதலீட்டாளர்கள் உள்ள நிறுவனத்துக்கு பாரதிய ஜனதா விளம்பரம் தேடித் தருவதாக குற்றம்சாட்டியது. இதை பாரதிய ஜனதா மறுத்தது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி

இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் ஊழலை ஒழித்ததாக பிரதமர் மோதியை புகழ்ந்து விஜய் சேகர் சர்மா பேசியுள்ளார். உண்மை என்னவெனில், உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. ட்ரேன்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பின் 2017க்கான ஊழலற்ற நாடுகள் பட்டியலில் 79வது இடத்திலிருந்து 81வது இடத்துக்கு சரிந்தது.

அலிகார்க்கில் ஒரு சாதாரண ஆசிரியரின் மகனான விஜய் சேகர் சர்மா, 2017இல் ஃபோர்ப்ஸ் இதழின் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், 1.72 பில்லியன் டாலர் மதிப்புடன் மிகவும் இளம் வயதானவராக இருந்தார்.

தனிப்பட்ட தரவுகள் கசிவது பெரும் பிரச்சனையாக உள்ள சூழலில், இந்தியாவின் மைய நீரோட்ட ஊடகங்களும் இந்த ரகசிய புலனாய்வு குறித்த செய்திக்கு அதிக முக்க்கியத்துவம் கொடுக்கவில்லை.

பிபிசி அணுகியபோது அலிபாபா கருத்து கூறவில்லை. தாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து தங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்று சாஃப்ட் பேங்க் செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: