வயிறே இல்லையென்றாலும் மற்றவர்களின் பசியாற்றும் 'அன்னபூரணி'

பட மூலாதாரம், NATASHA DIDDEE/VARUN KHANNA
- எழுதியவர், சிந்துவாசினி
- பதவி, பிபிசி செய்தியாளர்
இரைப்பையே (வயிறு) இல்லாத நதாஷா, முழு மனதுடன் வகைவகையான உணவுகளை தயாரிக்கிறார், தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக.
நதாஷாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் உணவு புகைப்படங்களைத் தவிர வேறு எந்த புகைப்படத்தையும் பார்க்க முடியாது. பார்த்தால் பார்த்தபடியே இருக்கத்தூண்டும், வாயில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகள்!
சமைப்பதில் அதீத விருப்பம் கொண்ட இந்த பெண், தனக்கு விரும்பியதை சாப்பிட முடியாது. அவர் உண்ணும் உணவுகள் அனைத்தும் மருத்துவரின் கண்காணிப்புக்கு உட்பட்டது. இருந்தாலும், விருப்பத்துடன் மற்றவர்களுக்காக தினசரி சமைக்கும் அந்த அதிசய பெண் நதாஷா திதீ.
பிரபலமான பல உணவகங்களுக்கு ஆலோசகராக பணிபுரியும் நதாஷா, உணவுகளின் மணங்களுக்கு இடையில் பிறர் மனம் கோணாமல் உணவு சமைத்து பரிமாறுகிறார்.
உண்ணவும், அருந்தவும் விரும்பும் ஒருவருக்கு வயிறு இல்லை என்ற பொருள் தரும் 'கட்லெஸ் ஃபூடி' என தன்னைத்தானே அழைத்துக் கொள்கிறார் புனேவில் வசிக்கும் நதாஷா திதீ.
வயிறு அகற்றப்பட்ட கதை
2010ஆம் ஆண்டு நதாஷாவின் இடது தோளில் கடும்வலி ஏற்பட்டது. ஏதாவது சாப்பிட்டால், உடனே வலி அதிகரித்துவிடும். தோள்பட்டையில் வலி இருந்ததால், அவர் எலும்பு மருத்துவரை சென்று பார்த்தார்.

பட மூலாதாரம், @thegutlessfoodie/instagram
எக்ஸ்ரே உட்பட பல சோதனைகளுக்கு பிறகு, தோள்பட்டையில் அவருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு கடுமையான உடற்பயிற்சியும், பிசியோதெரபி சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. ஆனால் நதாஷாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
வலியில் துடிக்கும் அவர் வலி நிவாரணிகளை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிகிச்சைகளுக்கு பிறகும் அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மோசமாகிக் கொண்டே போனது. 88 கிலோவாக இருந்த அவரின் எடை 38 கிலோவாக குறைந்துவிட்டது.
எந்த மருந்தும் வேலை செய்யவில்லை, பிசியோதெரஃபி சிகிச்சையோ,அல்ட்ராசவுண்ட், சோனோகிராஃபி போன்ற மருத்துவ பரிசோதனைகளோ அவரது வலிக்கான காரணத்தை கண்டுபிடிக்கவில்லை.
திறமையான மருத்துவரின் சிகிச்சை
பல பிரச்சனைகளை சந்தித்து, வலியை தாங்கி, மருத்துவ ரீதியாக ஏமாற்றங்களை சந்தித்த நதாஷா இறுதியாக புணேயின் கே.ஈ.எம் மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.எஸ் பாலேராவை சந்தித்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் சரியான இடத்தில் திறமையான மருத்துவரை சந்தித்ததால் உயிர் பிழைத்தார் நதாஷா.

பட மூலாதாரம், NATASHA DIDDEE
"மருத்துவமனை படுக்கையில் முழங்கால்களை மடித்து உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்தால்தான், வலி குறைவாக இருக்கும். அப்போது அந்த அறைக்கு வந்தவர்தான் எனக்கு சிகிச்சை அளிக்கவிருக்கும் மருத்துவர் என்று அப்பா சொன்னார். என்னால் எதையும் சரியாக கவனிக்க முடியாத அளவு வலியால் துடித்துக் கொண்டிருந்தேன்."
"என்னை உற்றுப் பார்த்த டாக்டர் பாலேராவ், என் வயிற்றில் இருக்கும் அல்சர் புண்களில் இருந்து கசியும் ரத்தம்தான் தாங்கமுடியாத வலிக்கு காரணம் என்று ஒரு நிமிடத்திலேயே சொல்லிவிட்டார்" என்கிறார் நதாஷா.
பிறகு எடுக்கப்பட்ட லேபராஸ்கோபி சோதனையும் மருத்துவரின் கணிப்பை உறுதிசெய்தது.
பிபிசியிடம் பேசிய டாக்டர் பாலேராவ்: "நதாஷாவின் வயிற்றில் இரண்டு விதமான அல்சர்கள் இருந்த்து. அவற்றில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கிவிட்டது. அவர் மிக அதிகமாக சாப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகளால் அவரது உள்ளுறுப்புகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. வலி நிவாரன மாத்திரைகள் மிகவும் ஆபத்தானவை, அதிலும் குறிப்பாக குடல்களுக்கு மிகவும் ஆபத்தானவை."

பட மூலாதாரம், NATASHA DIDDEE
இதற்கு பதிலளிக்கும் டாக்டர் பாலேராவ், "மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியை பிரிக்கும் சவ்வுப்பகுதியில் நதாஷாவுக்கு அல்சர் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து தோள்பட்டையை இணைக்கும் ஒரு நரம்பின் மூலம் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தோள்பட்டைக்கும் பரவியது. அல்சர் உருவாகியிருக்கும் இடத்தைப் பொறுத்து வலி ஏற்படும் இடமும் மாறுபடும். இதற்கு மருத்துவத்தில் 'ரெஃபர்ட் பெயின்' (Referred Pain) என்று சொல்வோம்.
9 மணி நேரம் நீடித்த அறுவைசிகிச்சை
வலி நிவாரண மருந்துகளும், அல்சர் புண்களும் இணைந்து நதாஷாவின் வயிற்றை சிதைந்திருந்ததால் அறுவை சிகிச்சை மட்டுமே மருத்துவரின் முன் நதாஷாவை குணப்படுத்துவதற்கான ஒரே தெரிவாக இருந்தது. காஸ்ட்ரொட்டோமி (Total gastrectomy) என்று மருத்துவ வழக்கில் கூறப்படும் அந்த அறுவை சிகிச்சையை டாக்டர் பாலேராவ் செய்தார். அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நீடித்தது என்பதில் இருந்து நதாஷாவின் உள் உறுப்புகள் எந்த அளவு சிதைந்திருந்தது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
"அறுவை சிகிச்சை செய்வது என்ற முடிவு கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை அறையில் நான் மயக்கத்தில் இருந்தேன். லேபராஸ்கோபி மூலம் என் வயிற்றை பரிசோதித்த டாக்டர் பாலேராவ் என் பெற்றோர் மற்றும் கணவரிடம் நிலைமையை சொன்னார்."

பட மூலாதாரம், NATASHA DIDDEE
இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அது மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்றும் நதாஷாவின் பெற்றோரிடமும், கணவரிடமும் பாலேராவ் விளக்கினார். நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொன்ன மருத்துவர், அறுவை சிகிச்சையின் விளைவு மரணமாகவும் இருக்கலாம் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்தார்.
குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும், இத்தனை ஆண்டுகாலமாக நதாஷா அனுபவித்த வேதனையையும் அவர்கள் பார்த்திருந்தார்கள். எனவே நிலைமையின் தீவிரமும் அவர்களுக்கு புரிந்த்து. வாழ்வா சாவா என்ற நிலையில் அறியாத நிலையில் நதாஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். ஒன்பது மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இறுதியில் முற்றிலும் சிதைந்திருந்த நதாஷாவின் இரைப்பை அகற்றப்பட்டது.
வயிறு நீக்கப்பட்டதை நதாஷாவால் ஜீரணிக்க முடிந்ததா?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நதாஷா, "ஒரு வாரம் கழித்துதான் அறுவை சிகிச்சையில் என் இரைப்பை அகற்றப்பட்டது பற்றி என்னிடம் சொன்னார்கள். இதை எப்படி என்னிடம் சொல்வது, அதை நான் எப்படி எடுத்துக்கொள்வேன் என்று குடும்பமே அச்சப்பட்டது. வேறு வழி, என் உடலில் இரைப்பை இல்லாததை மறைக்க முடியாதே?" என்று சொல்கிறார்.
மருத்துவமனையின் படுக்கையில் அமர்ந்திருந்த நதாஷா, விஷயம் தெரியாமல் அங்கிருந்த உணவை சாப்பிட முயல்கையில் வேறு வழியில்லாமல் நதாஷாவின் அம்மா விஷயத்தை கூறியிருக்கிறார்.
"சாப்பிடாதே நதாஷா, நீ சாப்பிடக்கூடாது. டாக்டரிடம் பேச வேண்டும். உனக்கு வயிறே இல்லை...."

பட மூலாதாரம், NATASHA DIDDEE
வயிறு இல்லையா!!!
தாயின் வார்த்தைகள் நதாஷாவுக்கு புரியவில்லை. உடனடியாக தன் வயிறை நதாஷா பார்த்தார். வயிறு இருக்கிறதே? அம்மா ஏன் இப்படி சொல்கிறார் என்று குழப்பமானது. அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவரின் அறிவுறுத்தலுக்கு பிறகே சாப்பிட வேண்டும் என்பதைத்தான் அம்மா அப்படி சொல்கிறார் என்று நதாஷாவுக்கு தோன்றியது.
உண்மையில் வயிறு என்பது நாம் தொட்டுப்பார்த்து உணரும் உடல் பாகம் என்பதே நமது எண்ணமாக இருக்கிறது. உண்மையில் வயிற்றின் உட்பகுதியில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. அவை அனைத்தையும் சேர்த்துதான் வயிறு என்று பொதுவாக சொல்கிறோம். நதாஷாவின் வயிற்றின் பிரதான பகுதியான இரைப்பை அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டதைத்தான் அவரது அம்மா அப்படிச் சொன்னார்.
அறுவை சிகிச்சைக்கு பின் நதாஷாவின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. அவர் ஒன்றுமே சாப்பிட முடியாது என்று சொல்லிவிட முடியாது. வழக்கமாக மற்றவர்கள் சாப்பிடுவதுபோல் அவரால் சாப்பிட முடியாது.
நதாஷா என்ன சாப்பிடுகிறார்?
அறுவை சிகிச்சைக்கு பிறகு நதாஷாவின் உணவு பழக்கங்கள் மாறிவிட்டன. தற்போது தினசரி ஏழு முதல் எட்டு முறை சாப்பிடுகிறார்.
பொதுவாக திரவ உணவுகளையே சாப்பிடுகிறார். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது போன்றே, குறைவாக ஆனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணவு முறையை இவர் பின்பற்றுகிறார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.

பட மூலாதாரம், NATASHA DIDDEE/VARUN KHANNA
நதாஷாவின் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
• இரைப்பை இல்லாத்தால் நதாஷாவின் உடலில் உணவு சேமிக்கப்படாது. அவர் உண்ணும் உணவு நேரடியாக சிறு குடலில் செல்கிறது. இதனால் பல பிரச்சனைகளை அவர் சந்திக்கிறார்.
• மற்றவர்களை போல் நதாஷாவால் சாப்பிட முடியாது. உதாரணமாக, ஒரே நேரத்தில் அதிக உணவு சாப்பிட முடியாது, அடிக்கடி சாப்பிட வேண்டும்.
• வழக்கமாக ஒருவரின் வயிற்றில் உருவாகும் வைட்டமின் பி, நதாஷாவுக்கு உருவாவதில்லை. எனவே விட்டமின் பி ஊசியை தொடர்ந்து போட்டுக்கொள்வது அவசியம்.
• இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. சர்க்கரை கலந்த உணவு வகைகள், உதாரணமாக ஐஸ்க்ரீம், ரச மலாய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. ஏனென்றால், இனிப்புச் சத்து அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். இதனை டம்பிங் சிண்ட்ரோம் (dumping syndrome) என்று சொல்வார்கள். இரைப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் உணவு உண்ட பின் பலவீனம், வயிற்றில் அசௌகரியம், சாப்பிட்ட அனைத்தும் உடனடியாக குடல் வழியாக வெளியேறுவதை டம்பிங் சிண்ட்ரோம் என்று சொல்கிறோம்.
நிதர்சனத்தை எப்படி எதிர்கொண்டார்?
நதாஷா கூறுகிறார், "முதலில் இந்த உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆனால் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எத்தனை நாள் இருப்பது? நீண்ட சிந்தனைக்கு பிறகு என் முன் இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதை புரிந்துக்கொண்டேன். அவநம்பிக்கையில் வாழ்வை சுமையாக்கிக் கொள்வது அல்லது புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது. எனக்கும், மற்றவர்களுக்கும் நிம்மதியை கொடுக்கும் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். "

பட மூலாதாரம், @thegutlessfoodie/Instagram
தற்போது, தனது உணவு வலைத்தளத்திலும் இண்ஸ்ட்ராகாமிலும் அவர் செயல்படுகிறார். சில ஹோட்டல்களில் ஆலோசகராக வேலை செய்கிறார். சமீபத்தில் எழுத்துப்பணியிலும் ஈடுபட்டு, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ந்தாஷா.
உலக உணவுகளில் சிறந்த உணவுகள் எது? இந்த கேள்விக்கு பல்வேறு வகைகளை கொண்ட இந்திய உணவுகளே உலகில் சிறந்த உணவுகள் என்று சொல்கிறார் நதாஷா. 'ஆரோக்கியமான உணவு' என்று சொல்லப்படுவதற்கான அனைத்து தொன்மங்களையும் அலசி ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்ர முயற்சிக்கிறார் ந்தாஷா.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவு பற்றி கூறும் நதாஷா, "எண்ணெய் மற்றும் கொழுப்புச்சத்து இல்லாத, வேக வைத்த காய்கறிகளே உடலுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், எண்ணெயைவிட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக ஆபத்தானவை என்பதே உண்மை."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












