காணாமல் போன எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறுத்தம்
காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச் 370-ஐ தேடும் பணியை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் முறைப்படி நிறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் ஓசியன் இன்ஃபினிட்டி என்ற அந்த நிறுவனம், தனது 90 நாள் தேடலில் ஆழ்கடல் கலன்களைப் பயன்படுத்தி வந்தது.
எனினும், அந்த நிறுவனத்தால் எதையும் கண்டறிய முடியவில்லை. மாயமான விமானத்தைப் புதிதாக தேடும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய அரசும் கூறியுள்ளது.
கடந்த 2014 மார்ச் மாதத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குப் பறந்து கொண்டிருந்தபோது, 239 பயணிகளுடன் சென்ற இந்த போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது.
ஒரு மிகவும் விரிவான தேடலுக்குப் பிறகும், இந்த விமானத்தின் மத்தியப் பகுதிகளின் தடயங்கள் எதுவும் தென்படவில்லை.
அந்த விமானம் கட்டுப்பாடற்ற வகையில் இந்திய பெருங்கடலுக்குள் இறங்கியிருக்கலாம் என்று 2016இல் வெளியான ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மீட்கப்பட்ட இரண்டு விமான இறக்கை மடல்களை ஆய்வு செய்ததில், அந்த விமானம் இந்திய பெருங்கடலுக்குள் இறங்கிய போது அவை தரையிறங்கும் நிலையில் இருக்கவில்லை என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வாரியம் (ஏ.டி.எஸ்.பி) தெரிவித்திருந்தது.

எம்.எச் 370 விமானம் குறித்த கடைசிகட்ட அறிக்கையை 2017இல் சமர்ப்பித்த ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது, சிந்திக்கக்கூட முடியாத விஷயம் என்று தெரிவித்தனர்.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில், எம்.எச் 370 விமானத்தின் பாகங்கள் என சந்தேகப்படக்கூடிய பாகங்கள், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும், ஆப்பிரிக்க கடலின் கிழக்கு பகுதியிலும் கரை ஒதுங்கின.
எம்.எச் 370 தேடுதலில் ஈடுபட்ட ஒரு சீன கப்பலும் 2016 இறுதியில் முயற்சியைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












