பிரிட்டன் அரச குடும்ப திருமணத்தில் கலந்து கொண்ட மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் 2018, மே 19ஆம் தேதியன்று (இன்று) நடைபெறவுள்ளதை அடுத்து, வின்சர் கோட்டையில் உலகத்தின் கவனம் குவிந்திருக்கிறது. மும்பையின் புகழ்பெற்ற டப்பாவலாக்களும் (மும்பை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மதிய உணவு எடுத்துச்செல்லும் பணி செய்பவர்கள்) அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள் (காணொளி)

பிரிட்டன் அரச குடும்பத்தோடு, டப்பாவலாக்களுக்கு சிறப்பு தொடர்பு இருக்கிறது. வேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2005 ஆம் ஆண்டில் கேமில்லா பார்க்கரை திருமணம் செய்து கொண்டபோது மும்பை டப்பாவலாக்கள் இருவர் சிறப்பு விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்ற அவர்கள் இருவரில் ஒருவர் சோபன் லக்ஷ்மண் மேரே.

முதல்முறை விமானப் பயணம்

அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, சோபன் மகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். திருமண அழைப்பு கிடைத்தபோது அவர்களிடம் பாஸ்போர்ட் கூட இல்லையாம்!

"இந்திய அரசு எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கியது. விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்த அனுபவமும் உற்சாகமாக இருந்தது. தரையில் இருந்து விமானம் எப்படி மேலெழும்பும் என்று பார்க்க விரும்பினோம். ஒரு கனவு போல தோன்றிய அந்த பயணத்தின் முடிவில் லண்டன் சென்றடைந்தோம்."

பிரிட்டன்

பட மூலாதாரம், BBC / RAHUL RANSUBHE

படக்குறிப்பு, சோபன் லக்ஷ்மண் மேரே

"நாங்கள் லண்டனில் தரையிறங்கியபோது, மிகவும் குளிராக இருந்தது. திருமண வரவேற்பு குழுவினர் எங்களை சிறப்பான முறையில் வரவேற்றார்கள். கோட்டுகளை எங்களுக்கு அளித்தார்கள், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரில் இருந்த தாஜ் ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள்."

சோபன் லக்ஷ்மண் மற்றும் அவரது சகா ரகுநாத் மெட்கே அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்ததை சொல்லி ஆச்சரியப்படுகிறார் சோபன்.

டாப்பாவாலாவுக்கு மொழிபெயர்ப்பாளரான ஜெய்ப்பூர் ராணி

அரச குடும்பத்தினரின் விருந்தினர்களாக, தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும், கவனத்தையும் அவர்கள் உண்மையிலேயே அனுபவித்தார்கள். விரைவிலேயே அரச குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

"இளவரசர் சார்லஸையும், அவருடைய தாயான ராணி எலிசபெத்தையும் சந்தித்தபோது அவர்களிடம் பேச முடியாமல் தடுமாறினோம். எங்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அங்கிருந்த ஜெய்ப்பூர் ராணி பத்மினி தேவி எங்களுக்கு உதவினார். இந்தியில் நாங்கள் பேசியதை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார், அதற்கு ஆங்கிலத்தில் அவர்கள் அளிக்கும் பதிலை எங்களுக்கு இந்தியில் சொல்வார்."

தங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் சோபன். "அரச குடும்பத்தினரில் ஒருவரைப் போன்றே நாங்கள் நடத்தப்பட்டோம். அரண்மனையை சுற்றிக் காட்டினார்கள். அரண்மனை எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு நுழைவாயிலில் இருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு செல்வதற்குள் மூச்சு வாங்கிவிடும்" என்று சொல்லி நினைவுகளில் பூரித்து போகிறார் சோபன்.

டாப்பாவாலா

"ஒவ்வொரு மாடியிலும் பெரிய அரங்குகளும், கலைப்பொருட்களையும் பார்க்கவே மலைப்பாக இருந்தது. அரண்மனைகளைப் பற்றி கதைகளில்தான் படித்திருந்தோம், ஆனால் அதை நேரடியாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற அதிர்ஷ்டம் என் வாழ்க்கையில் எப்போதும் இருந்ததேயில்லை" என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமை கொள்கிறார் சோபன்.

லண்டன் சுற்றுலா

லண்டனில் இருந்த மூன்று நாட்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு, மீதமுள்ள நான்கு நாட்களும் நகரத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

"காலை ஏழு மணிக்கு கிளம்பினால் இரவு 8 மணிவரை ஊரை சுற்றிப் பார்ப்போம். அரச குடும்பத்தில் இருந்து எங்களுக்காக ஒரு கார் கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமா? நாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இரண்டு பாதுகாப்பு வாகனங்களும் எங்கள் காரை பின்தொடரும்."

இளவரசர் ஹேரி மற்றும் மெகன்

பட மூலாதாரம், Getty Images

"லண்டன் அண்டர்கிரவுண்டில் 40-50 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்தோம். இந்தியர்கள் வசிக்கும் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். இந்தியாவில் இருந்ததைப் போலவே உணர்ந்தோம். எங்களுக்கு எல்லாவிதமான உணவும் கொடுக்கப்பட்டது, அதில் இந்திய உணவும் இருந்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்."

அரச குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தவர் கொடுத்த பரிசு

புதிதாக திருமணம் செய்து கொண்ட அரச தம்பதியருக்கு டப்பாவாலாக்கள் சிறப்பு பரிசுகளை கொடுத்தார்கள். மணமகனுக்கு புகழ்பெற்ற கோலாபூர் காலணிகள் மற்றும் புணேயில் இருந்து அலங்காரமான தலைப்பாகை பரிசாக கொடுத்தார்கள். மணமகளுக்கு பைத்தான் பட்டுப்புடவை மற்றும் கண்ணாடி வளையல்களை திருமண பரிசாக கொடுத்தார்கள்.

"நாங்கள் இந்தியாவில் இருந்து திருமணத்திற்கு புறப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பரிசுகளை அவர்களுக்கு அனுப்பிவிட்டோம். லண்டனுக்குச் சென்றபோது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த திருமண பரிசுப்பொருட்களில் எங்கள் பரிசுகளும் இடம்பெற்றிருந்ததை பார்த்தபோது, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சாதாரணமான எங்கள் அன்பளிப்புகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மனதை நெகிழ்த்திவிட்டது" என்கிறார் சோபன்.

"இந்த திருமணத்தில் கலந்து கொண்டபோது, நாங்கள் சொர்க்கத்தில் இருப்பதைபோல் உணர்ந்தோம். இந்திரனின் தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமா? என்று அயர்ந்து போனோம். நாங்கள் படித்தவர்களோ, பணக்காரர்களோ இல்லை, ஆனால் பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எங்களுக்கு கிடைத்த மரியாதையை எங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத சுகானுபவம், யாருக்கும் சுலபமாக கிடைக்காத பெரும் பேறு" என்று புன்னகையுடன் சொல்கிறார் சோபன் லக்ஷ்மண் மேரே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: