பாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை
2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளஜோத்பூர் நீதிமன்றம்.

பட மூலாதாரம், Getty Images
2013ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆசாராம் மீ்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஆசாராம் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டிருந்த ஷில்பி மற்றும் சரத் சந்திரா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் மற்றும் சிவா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆசாராம் சாமியாருக்கு உலகெங்கும் ஆசிரமங்களும் லட்சக் கணக்கான பக்தர்களும் உண்டு. அவருக்கு 40 லட்சம் பக்தர்கள் இருப்பதாக அவரது வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு 400 ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்களில் யோகாசனம், தியானம் முதலியவை கற்பிக்கப்படுகின்றன.
சாமியார் ஆசாராம், குஜராத் மாநிலத்திலும் ஒரு வன்புணர்வு வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இன்று தீர்ப்பு வெளியாகும்போது பெரும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், ஆசாராம் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையிலேயே நீதிபதி தீர்ப்பை வழங்கினார். அவருக்கு தண்டனை விதிப்பதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆசாராமுக்கு எதிராக சாட்சி கூறிய ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் தாக்கப்பட்டனர்.
ஜோத்பூர் வழக்கு
ஆகஸ்ட் 2013இல், சாஜகான்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் ஆசாரமுக்கு எதிராக பாலியல் வல்லுறவு புகார் பதிவு செய்தனர். அந்தப் பெண்ணின் தந்தை அந்த சம்பவத்துக்கு முன்பு அவரது சொந்த செலவில் ஆசாராம் பாபுவுக்கு ஆசிரமம் ஒன்றைக் கட்டியிருந்தார்.

அவரது 16 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆகஸ்ட் 7, 2013 அன்று சிந்வாரா குருகுலத்தில் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்தது. அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை ஆசாராம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
அடுத்தநாள் அந்தக் குடும்பம் கிளம்பி ஆசிரமத்துக்கு சென்றது. ஆகஸ்ட் 15 அன்று பேயை விரட்டுவதாகக் கூறி ஆசாராம் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
லஞ்சம் , மிரட்டல் என அனைத்தையும் கடந்து தங்களைவிடவும் பல மடங்கு செல்வாக்கு நிறைந்த ஆசாராம் பாபுவுக்கு எதிராக அந்தக் குடும்பம் போராடியது.
ரிஷி மூலம்...
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பெராணி கிராமத்தில் ஏப்ரல் 1941இல் பிறந்த ஆசாரமின் இயற்பெயர் அசுமால் ஹர்பலனி.
வணிக சமூகமான சிந்தி சமூகத்தில் பிறந்தவர் அவர். அவரது குடும்பம் 1947 தேசப் பிரிவினைக்கு பிறகு அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்தது. அவர் 60களில் லீலாஷா எனும் சாமியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். லீலாஷாதான் அசுமாலுக்கு ஆசாராம் என்று பெயர் சூட்டினார்.
1972இல் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சபர்மதி நதிக்கரையில் அமைத்தார். குஜராத்தின் பிற நகரங்கள் வாயிலாக அவர் வேறு மாநிலங்களுக்கும் மெதுவாக விரிவடைந்தார்.
ஆரம்பத்தில் ஏழைகள், பின்தங்கிய மற்றும் பழங்குடியின மக்களை கவர்ந்த ஆசாராம், குஜராத்தின் நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்க மக்களிடையேவும் பிரபலமாகத் தொடங்கினார்.
அரசியல் பின்னணி
1999-2000 ஆண்டுகளில் பாஜக-வின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, நிதின் கட்கரி ஆகியோர் அவரது பக்தர்கள் ஆயினர். காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், கமல்நாத், மோதிலால் வோரா ஆகியோரும் இவரது பக்தர் பட்டியலில்அடக்கம்.
பாரதிய ஜனதாவின் முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்களாக உள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், உமா பாரதி, ரமன் சிங், பிரேம் குமார் துமால், வசுந்தரா ராஜே ஆகியோரும் அவரது பக்தர்கள்தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












