வாராக்கடன்: 17,000 கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவு
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - 17,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவு

பட மூலாதாரம், Getty Images
வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு அவற்றைத் திரும்பச் செலுத்தாதவர்களின் சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கு வழிவகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் நீரவ் மோதிக்கு சொந்தமான சுமார் 7,000 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆகியவை ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - சர்ச்சையில் சிக்கிய சல்மான் குர்ஷித்

பட மூலாதாரம், Getty Images
அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மதக்கலவரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு மாணவரிடம், "நானும் காங்கிரசின் ஓர் அங்கம்தான். எங்கள் கைகளில் ரத்தம் உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியது சர்சையைக் கிளப்பியுள்ளது.
ஊடகங்கள் தனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளதாக சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். அவர் கூறியதை தாங்கள் முற்றிலும் ஒப்புக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகச் சீர்த்திருத்தம் தேவை

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை, மாநிலங்களைவைத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து அக்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தலைமை நீதிபதியே தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்ற அமர்வுகளை அமைக்கும் விதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐதராபாத்தில் உள்ள நால்சார் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் ஃபைசன் முஸ்தஃபா எழுதியுள்ள நடுப்பக்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளை அமைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமே இருக்கும் நிலையில், அதற்கான முழு அதிகாரமும் ஒரே நபரிடம் குவிந்திருக்கக் கூடாது என்று அக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி - உள்ளாட்சித் தேர்தலில் கமல் கட்சி

தமிழக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
செவ்வாயன்று அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












