ஆதார் எண் இணைப்பு: இருப்பதையும் இழக்கின்றனரா ஏழைகள்?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மாதத்தில் ஆறு முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட முனியா தேவியின் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், Ronny Sen
31 வயதாகும் அவர் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் அவரது கணவர் பூஷன் நாளொன்றுக்கு 130 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் குடும்பத்துக்கு நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. காரணம், அவர்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் என் இணைக்கப்படவில்லை.
இவ்வாறு பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது பிபிசி நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
'ஆதார்' என்றால் இந்தியில் 'அடிப்படை' என்று பொருள். நூறு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஆதார் எண் உள்ளது. ஊழல் நடப்பதைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட, விருப்பத்தின்பேரில் மட்டுமே மக்கள் பதிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்ட ஆதார் திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது. பணப் பரிமாற்றங்கள் மற்றும் சமூக நல உதவிகளைப் பெற தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்துக்கு சென்று தங்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆவணங்களைப் பெற பயணித்தார் முனியா தேவி. அங்கு அவர் அதற்காக 400 ரூபாய் லஞ்சம் வேண்டியிருந்தது. அது அவரது குடும்பத்திற்கு சுமார் நான்கு நாள் வருமானம்.
"இணையதளம் வேலை செய்யவில்லை, கணினி பழுது என்று எப்போதும் எதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்," என்கிறார் முனியா தேவி.
அவர் வசிக்கும் விஷ்ணுபந்த் கிராமத்தில் வசிக்கும் 282 குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் நிலமற்றவர்கள்தான். நல்ல நாடுகளில் அவர்களுக்கு உணவாக அரிசியுடன் உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் கிடைக்கும். மோசமான நாட்களில் எதுவும் கிடைக்காது. பட்டினி அவர்களுக்கு நீண்டகால நண்பன்.

பட மூலாதாரம், Ronny Sen
பட்டினி கிடப்பதில் முனியா தேவிக்கு அவரது கிராமத்தை சேர்ந்த சிலரே துணையாக இருக்கிறார்கள். ஆதார் எண் இணைக்கப்படாததால் அங்குள்ள சுமார் 60 குடும்பங்களுக்கு நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
அவர்களில் பலரும் அரசு அலுவலகங்களுக்கு பயனற்ற பயணங்கள் மேற்கொண்டதையும், லஞ்சம் வழங்கியதையும் பற்றிக் கூறுகிறார்கள்.
குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டாயமாக்கியபோது, பொருளாதார வல்லுனரும் சமூக செயல்பாட்டாளருமான ஜீன் டிரேஸ் அதை 'மிரட்டுவது மற்றும் ஏழைகளுக்கு எதிரானது' என்றார்.
'பட்டினிச் சாவு'
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிம்தெகா மாவட்டத்தில், ஆதார் எண் இணைக்கப்படாததைத் தொடர்ந்து நியாய விலைக்கடையில் பொருட்கள் மாதக்கணக்கில் மறுக்கப்பட்டதால் 11 வயதான சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சந்தோஷ் குமாரி எனும் அச்சிறுமி நான்கு நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்ததால் உயிரிழந்தார். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவருக்கு கொஞ்சம் தேநீரும் உப்புமே கிடைத்தன. ஆனால், அவற்றால் அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவர் பட்டினியால்தான் இறந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
"இவாறு சுமார் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் பட்டினியால் இறந்தார்களா இல்லையா என்பதில் நாம் கருத்து வேறுபடலாம். ஆனால், இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்திலும் ஆதார் இணைக்கப்படாததால் பிரச்சனை இருந்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Ronny Sen
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்டில் சுமார் 7,60,000 குடும்ப அட்டைகள் போலியானவை என்று கூறி ரத்து செய்யப்பட்டது. ஆதார் இணைக்கப்படாததால்தான் அவை ரத்து செய்யப்பட்டன என்று கூறும் ஜீன், அதனால் பல்லாயிரம் குடும்பங்களுக்கு நியாய விலைக் கடை மூலம் உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்கிறார்.
அந்த குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண் இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மறுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. அந்த மாநிலத்தில் 25,000க்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் மூலம் இரண்டு கோடி டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
எனினும் கள நிலவரம் வேறாக உள்ளது. உணவுப் பொருட்கள் விநியோகம் பல பயனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது.
"சில இடங்களில் பிரச்சனை உள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆதார் இல்லை என்றால் உணவே இல்லை என்று பொருள்படாது எனும் செய்தி மக்களிடையே சென்று சேரவில்லை," என்கிறார் ஜார்கண்ட் மாநில உணவுப் பொருள் வழங்கல் துறையின் தலைமை அதிகாரி அமிதாப் கௌஷல்.
ஆனால் அரசு இரட்டை நாக்குடன் பேசுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆதார் இல்லையென்றால் குடும்ப அட்டைகள் மூலம் உணவுப் பொருட்களைப் பெற முடியாது என்று உயர் அதிகாரி ஒருவர் கிராம மக்களிடையே பேசிய காணொளி தம்மிடம் இருப்பதாக ஜீன் டிரேஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Ronny Sen
ஆனால், உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்கிறார் கௌஷல். "மாநிலத்தில் உள்ள மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான 2.6 கோடி பேரில் 80% பேர் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். 99% குடும்பங்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டன. அதாவது குடும்பத்தில் ஒரு நபருக்காவது மானிய விலையில் உணவுப் பொருள் கிடைக்கிறது," என்கிறார் அவர்.
பல குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளதால் ஆதார் எண் இணைக்கப்பட்டது குறித்த அதிக அளவிலான எண்ணிக்கை ஒன்றும் ஆச்சரியம் அல்ல என்கிறார் ஜீன்.
கருவிகள் பயனாளிகளின் கை ரேகையை கண்டுபிடிக்காதது, இணைய வேகத்தில் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்டவற்றால் உணவுப் பொருட்கள் மறுக்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டையும் மறுக்கிறார் கௌஷல்.
ஜனவரி மாதத்தில் மட்டும் 47 லட்சம் உணவுப் பொருள் விநியோகங்களில் எட்டு லட்சம் இணையம் மூலம் அல்லாமலேயே வழங்கப்பட்டன என்கிறார் அவர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 12 லட்சம் பேர் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுகின்றனர். அவர்களுக்கு மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வழங்கபடுகிறது.
அவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாததால் போலி கணக்குகள் என்று கூறி சுமார் மூன்று லட்சம் பேருக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Ronny Sen
ரிஷப் மல்கோத்ரா மற்றும் அன்மோல் சோமாஞ்சி ஆகிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டவர்களில் மிகவும் சொற்பமானவர்களே போலிகள் என்று தெரியவந்துள்ளது.
தவறான இணைப்புகள்
இத்தகைய இணைப்புகள் மிகவும் நகைப்புக்குரிய மற்றும் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளன. பிறப்பு சான்றிதழ் இல்லாதது, தரவுகளைப் பதிந்தவர்கள் செய்த பிழைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரு கிராமத்தில் அனைவருக்கும் அவர்கள் பதிந்த ஆண்டுகளின் புத்தாண்டு தினமே பிறந்தநாளாக உள்ளது.
சத்வாதி எனும் கிராமத்தை சேர்ந்த 102 வயதாகும் விவசாயியான ஜமா சிங் அந்த உதவித் தொகையை பெற முடியவில்லை. காரணம் மூன்று இலக்க எண்ணை ஆதார் பதிவு செய்யும் மென்பொருள் ஏற்றுக்கொள்ளாததே. அவரை 80 வயதானவர் என்று கூறி புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அவரது அண்டை வெட்டுக்காரரான பச்சத்தி சிங் கூறுகிறார்.
"என் வயது என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால், என்னை விடவும் இளையவர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்," என்கிறார் ஜமா சிங்.
விஷ்ணுபந்த் கிராமத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குந்தி பகுதியில் தவறான வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதால் சுமார் 20,000 பேரின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். 84 வயதாகும் ராஜ்குமாரி தேவி இந்த பிரச்சனையை சீர் செய்ய அருகில் உள்ள வங்கிக்கு பயணிக்க செலவு செய்த தொகையே அவரது ஒரு மாத உதவித்தொகைக்கு நிகராகும்.
தற்போது அவரது சேமிப்புக் கணக்கில் இருப்பது 73 ரூபாய் மட்டுமே. அவரது கண்ணியம் தற்போது சிதைந்துள்ளது.
அவரது மகன் அவரை கவனித்துக் கொள்வதாகக் கூறினாலும், 'என் பணம் இருக்கும்போது நான் ஏன் உன் தயவில் இருக்க வேண்டும்' என்று தன் மகனிடம் கேள்வி எழுப்புகிறார் ராஜ்குமாரி தேவி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












