இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் அந்தரங்க உரிமை அறுதியானதல்ல: இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்ற கேள்விக்கான விடையை காண்பதற்காக ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது.
`அந்தரங்க உரிமை விவகாரத்தில் தேசத்தின் கருத்து தெளிவுக்காக இந்த அமர்வு, நிரந்தரமான ஒரு முடிவை எடுக்கும்.` என அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஜே.நாரிமன் தெரிவித்துள்ளார். இதில் ஒரு முக்கிய திருப்பமாக, பல மாநில அரசுகள் இந்த வழக்கில் தங்களை ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, இந்தியாவில் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று வாதிட்டுள்ளன.
முதலில் இந்த வழக்கு குறித்த முன் கதை சுருக்கத்தை பார்த்துவிடலாம். கடந்த வாரம், அந்தரங்க உரிமை ஒரு அடிப்படை உரிமை என அனுபவம் வாய்ந்த பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர். சோலி சோரப்ஜி, ஆனந்த் குரோவர், அரவிந்த் தாதர் மற்றும் மீனாக்ஷி அரோரா மற்றும் எஸ்.பூவையா ஆகியோரும் இதில் அடங்குவர்.
பான் -ஆதார் எண் வழக்கில் ஆஜராகி, ஆதார் மக்களின் கழுத்தை நெரிக்கும் `மிண்ணனு வார்` போன்றது என வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவரும், மனுதாரர்கள் தரப்பில் ஆஜரானார்.
அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளின் ஒன்றா என கேள்வி எழுப்பிய நீதிபதி கரக் சிங்கின் தீர்ப்பை முன் வைத்த மத்திய அரசின் வாதம், நீதிபதிகளின் அமர்வை சமாதானப்படுத்த முடியவில்லை. இதற்கு பின்னர் தனியுரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 40 தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.
உண்மையில், மத்திய அரசு கூட ஆதார் விவகாரம் குறித்த முந்தைய வாதங்களில், அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை எதிர்க்கவில்லை. நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் நாடாளுமன்றத்திலும் அதே கருத்தை தெரிவித்தார். மேலும், வாட்ஸ் ஆப் வழக்கில், இந்த வாரம் அந்தரங்க உரிமைக்காக மத்திய அரசு வாதிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த புதன்கிழமை, மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கர்நாடகா,மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி ஆகியவற்றுக்காக வாதிட்டார். `அந்தரங்க உரிமை என்பது உண்மையில் அடிப்படை உரிமைதான். ஆனால் இதனை அறுதியிட்டு கூற முடியாது` என்ற அவர் உரிமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்ற நீதிபதி செலமேஷ்வர் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் 21-வது சரத்தை சுட்டிக் காட்டிய கபில் சிபில், இது அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய ஒரு மாற்றித்தர இயலாத இயற்கை உரிமை என தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஜே.எஸ்.அட்ரி, அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைதான் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுருக்கமான வாதத்தை முன் வைத்தார்.மேலும் இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கக் கூடிய தனிமனித சுதந்திரத்தின் ஒரு பகுதி என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் மத்திய அரசுக்கான தனது வாதத்தை அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தொடங்கினார். தனது வாதத்தின் முதல் கட்டமாக, அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை இல்லை என தெரிவித்த அவர், தனியுரிமையை அடிப்படை உரிமை என வரையறுக்கும் அளவுக்கு அது தெளிவானதாக இல்லை என தெரிவித்தார். `ஒருவேளை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அந்தரங்க உரிமையை அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்ற அளவிற்கு அதற்கு தகுதியாக இருக்க வேண்டும்.தனியுரிமையின் சில அம்சங்கள் மட்டுமே அடிப்படையானவை, எல்லாம் அல்ல என்பதை நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்` என அவர் கூறினார்.
`குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒன்றை அடிப்படை உரிமையாக எடுத்துக் கொள்வதை விட, மக்களின் அத்தியாவசிய தேவையான உணவு,உடை,உறைவிடம் போன்ற தேவைகள்தான் அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை` என அட்டர்னி ஜெனரல் தனது அதிர்ச்சியூட்டும் வாதத்தை முன் வைத்தார்.
நாளை வியாழக்கிழமை, அரசு தனது தரப்பு வாதத்தை தொடரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












