"5 அடி கனமான சுவருக்குள் பாதுகாப்பாக உள்ளது ஆதார் தகவல்கள்"
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து - "5 அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளது ஆதார்"

பட மூலாதாரம், Getty Images
ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஐந்து அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது.
தினமலர் - "14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி"

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY
போலி ஆவணங்களை தாக்கல் செய்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கனிஷ்க் நகைக்கடை மீது சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் 824.15 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. நீரவ் மோதி, விக்ரம் கோதாரி ஆகியோர் செய்த முறைகேடுகளால் வங்கி ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இச்செய்தி விவரிக்கிறது.
தினமலரில் வெளியான கார்டூன்

பட மூலாதாரம், DINAMALAR
தினமணி - "தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்: ஈ.பி.எஸ்"
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி மேலான்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக பேசியது தலைப்புச் செய்தியாக தினமணியில் இடம் பிடித்துள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
பா.ஜ.கவுக்கு எதிராக ஆந்திரா முதல்வர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்ட துரைமுருகனுக்கு பதில் கூறிய முதல்வர் பழனிசாமி, ஆந்திர மாநிலத்தவரின் பிரச்சனைக்காக அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும், அவர்கள் பிரச்சனை வேறு, நமது கோரிக்கை வேறு என்று குறிப்பிட்டதாக அச்செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












