உத்தரப்பிரதேசம்: ஓராண்டை நிறைவு செய்த யோகி - வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?

    • எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
    • பதவி, பிபிசி

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகியின் கோட்டையை ஆட்டம் காணச் செய்வது அவரது ஆதரவாளர்களா?

யோகி

பட மூலாதாரம், Getty Images

உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டது.

ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பதவியேற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற காலக்கெடுவை நிர்ணயித்தது.

அரசு நிர்வாகத்தை ஏற்ற 100 நாட்களில் தனது செயல்பாடுகளை பிரதிபலிக்கும் 'மதிப்பெண் அறிக்கையை' மக்களின் முன்வைப்பதாகவும், அதற்கு அவர்களே மதிப்பெண் கொடுக்கலாம் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால் வாக்குறுதிகள் ஓராண்டுக்கு பிறகும் செயல்பாடுகளாக மாறாமல் காத்துக் கொண்டிருப்பதால், மக்களும் இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சட்டம்-ஒழுங்கு

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாழாகிவிட்டது என்று முந்தைய அரசாங்கத்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை குறைகூறிக் கொண்டிருந்த்து. தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றி குறிப்பிட்ட பா.ஜ.க ஆட்சி ஏற்றதும், சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது.

யோகி

பட மூலாதாரம், AFP

ஆனால் பதவியேற்ற கடந்த ஓராண்டில், சட்டம்-ஒழுங்கு பற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, இந்த விஷயத்தில் சட்டமன்றத்தில் அரசு பல சந்தர்ப்பங்களில் சங்கடங்களையும் எதிர்கொண்டுள்ளது.

இருந்தபோதிலும், மாநில அரசு நூற்றுக்கணக்கான புள்ளிவிவரங்களை அளித்து தன்னுடைய குறையை சமாளித்து வந்தது. குற்றவாளிகள் இப்போது மாநிலத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் அல்லது சிறைக்கு செல்கிறார்கள் என்று முதல்வர் கூறினார். ஆனால் போலி என்கவுண்டர்கள், கொள்ளை, கற்பழிப்பு, போன்ற குற்றங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்கின்றன.

ரோமியோ எதிர்ப்புப் படை

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரோமியோ எதிர்ப்பு படை உருவாக்கப்படும் என்பதை அரசு அறிவிப்பதற்கு முன்னரே அதிகாரிகள் அமல்படுத்திவிட்டார்கள். சில நாட்களில் இது விவாதப்பொருளாகிவிட்டது.

யோகி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ரோமியோ எதிர்ப்புப் படை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் இளைஞர்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வது அம்பலமானது. அதன்பிறகு அந்தப் படை என்னவானது என்றும் யாருக்கும் தெரியவில்லை.

எனினும், ரோமியோ எதிர்ப்புப் படை, புதிய திட்டங்களுடனும் புதிய கோணத்தில் செயல்படும் என்று கூறப்பட்டது, ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை. லக்னோவில் உள்ள பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு வெளியே பல மாணவிகளுடன் பேசியபோது ரோமியோ எதிர்ப்புப் படை போன்ற எந்த படையினரையும் இதுவரை பார்த்த்தேயில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

விவசாயக் கடன் ரத்து

யோகி

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மட்டும் வெளியாகவில்லை. "பதவியேற்றவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோதி உத்தரப்பிரதேசத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களிலும் முழக்கமிட்டார்.

மாநில அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியது என்னமோ உண்மைதான். 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக யோகியின் அரசு அறிவித்தது.

ஆனால், கடன் தள்ளுபடி என்ற பெயரில் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், எண்பது ரூபாய், ஒன்றரை ரூபாய் போன்ற சொற்பத் தொகையை தள்ளுபடி செய்தது குறித்துதான் சர்ச்சைகள் எழுந்தன.

சட்டவிரோத கசாப்புக் கூடங்கள் மீது அதிரடி நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கசாப்புக் கூடங்கள் மூடப்படும் என்பதும் பா.ஜ.க.வின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அரசு அமைந்ததுமே, லக்னோ நகரில் உள்ள கசாப்புக் கூடங்கள் சூறையாடப்பட்டன.

சட்ட விரோதமாக இயங்கிய இறைச்சிக்கூடங்கள், கசாப்புக்கூடங்கள், விற்பனைக்கடைகள் மூடப்பட்டன. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கசாப்புக்கூடங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளை அடுத்து இறைச்சி வியாபாரிகளின் வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால் கசாப்புக்கூடங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறும் முடிவுகளே அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெளிவாக கூறிவிட்டது.

யோகி

பட மூலாதாரம், Getty Images

24 மணிநேர மின்சாரம்; பள்ளம் இல்லாத சாலைகள்

மாநிலத்தில் 24 மணிநேர மின்சாரம் விநியோகம் என்பது பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமான ஒன்று. யோகி ஆதித்யநாத் பதவியேற்றவுடன் நிர்வாகம் அதற்கான முயற்சியை மேற்கொண்டது.

முதல்கட்டமாக நகரங்களில் 24 மணி நேரமும், கிராமங்களில் 18 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மின்சக்தி பகிர்வு முறைமையை வலுப்படுத்த வேறுபல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், மின்வெட்டுகள் மக்களை பதம் பார்த்தன. இன்றும் உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத பல மாவட்டங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் மின்மாற்றிகள் பழுதாகும்போது, அங்கிருக்கும் மக்களுக்கு மின்சார விநியோகம் தடைபடுகிறது. அதாவது அடிப்படையான மின்விநியோக கட்டமைப்புகள் இன்னமும் சீர்படுத்தப்படவில்லை.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மாநிலத்தின் அனைத்து சாலைகளும் பள்ளங்களும் சரி செய்யப்படும் என்று பா.ஜ.க இலக்கு நிர்ணயித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் பள்ளங்களும் நிரப்பப்பட்டன. ஆனால் சீராக்கப்பட்ட பள்ளங்கள் ஓராண்டுக்குள் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தன.

எனினும், ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்கள், அடுத்த ஆறு மாதங்கள் மற்றும் அதிலிருந்து முதலாண்டு முடியும் வரை என்று பல்வேறு நிலைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக யோகி அரசு கூறுகிறது.

யோகி

பட மூலாதாரம், Twitter

மாநில அமைச்சர் மற்றும் அரசின் செய்தி தொடர்பாளர் மற்றும் ஸ்ரீகாந்த் சர்மா, பிபிசி உடனான நேர்காணலில் இவ்வாறு கூறுகிறார்,

"முதல் தடவையாக அரசின் முதல் நூறு நாள் வேலை கணக்கை பொதுமக்களின் முன்னால் வைத்திருப்பதற்கான இலக்கை அமைத்ததே எங்கள் அரசின் மிகப்பெரிய சாதனை. எங்கள் லட்சியகளில் பெரும்பாலானவற்றை நிறைவு செய்திருக்கிறோம். மீதமிருப்பவற்றையும் விரைவீல் பூர்த்தி செய்வோம்."

நகரங்களில் 24 மணி நேரமும், கிராமங்களில் 18 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அமலில் இருப்பதாக உறுதியாக கூறுகிறார் மாநில மின்சாரத் துறை அமைச்சரான ஸ்ரீகாந்த் ஷர்மா.

ஆனால் எதிர்கட்சிகள் மட்டுமல்ல பொதுமக்களும் இந்த கூற்றை மறுக்கின்றனர். ஆனால், கிராமப்பகுதிகளில் மின் வசதியை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதை மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

லக்னோவில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான் கூறுகையில், "முந்தைய அரசை குறை சொல்வதில் பயனில்லை என்றும் சாதித்து காட்டவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு முதலில் தோன்றவேண்டும். எதாவது செய்வது என்பது அடுத்தபட்சம், முந்தைய அரசின் செயல்பாடுகள் விசாரணை செய்யப்படும் என்ற உறுதிமொழி என்னவாயிற்று? கோமதி நதி பிரச்சனை முதல் சட்டவிரோத மண் சுரண்டல் வரை பல தீவிரமான பிரச்சனைகளில் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை."

"விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக மாநில அரசு அறிவித்துவிட்டாலும், மத்திய அரசின் உதவி கிடைக்காததால், அது அமல்படுத்தப்படும் வழிமுறை தெரியாமல் திகைத்து நிற்கிறது. ஏனெனில் இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது சுலபமானதல்ல என்று சொல்கிறார் ஷரத் பிரதான்.

அதேநேரத்தில், யோகியின் அரசு மும்முனைத் தோல்வி அடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் உதய்வீர் சிங் இப்படி கேள்வி எழுப்புகிறார்: "சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பது முதல், விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பு என எல்லாத் துறையிலும் யோகி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது. ஆனால் வெற்று வாய்ச்சவடால் மட்டுமே எஞ்சியிருக்கிறது".

யோகி

பட மூலாதாரம், Getty Images

பாரதிய ஜனதா கட்சி இந்த ஓராண்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், கோரக்பூரிலும் புல்பூரிலும் அவர் அத்தகைய தோல்வியை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பாக படித்தேன் என்று சொல்லிக்கொள்ளும் மாணவன் ஆண்டுத்தேர்வில் முதலாவது இடத்தை பெறாவிட்டாலும், தேர்ச்சிக்கு தேவையான மதிப்பெண்ணைக் கூட பெறாமல் தோல்வியடைந்தது ஏன்?"

அதாவது அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் முடிவானது யோகி ஆதித்யநாத்தின் அரசின் 'மதிப்பெண் அறிக்கையாக' பார்க்கப்பட்டு, அவரது ஓராண்டு ஆட்சி விமர்சிக்கப்படுகிறது.

ஆனால், நன்றாக படிக்கும் மாணவனுக்கு, தேர்வு நேரத்தில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டால் அது முடிவில் எதிரொலிக்கும் என்பதுபோல, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்களே அவரது வலுவான கோட்டை ஆட்டம் காண அடித்தளம் அமைத்துவிட்டார்களா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: