ராஜிவ் காந்தியின் தோல்வியை ஈடுகட்டுவாரா ராகுல்?
- எழுதியவர், ரஷீத் கித்வய்
- பதவி, மூத்த பத்திரிக்கையாளர்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

பட மூலாதாரம், Getty Images
அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் அமைப்பு மற்றும் அரசியலில், மாற்றம் கொண்டு வருவதாக உறுதியளித்த ராஜிவ் காந்தியை நினைவு படுத்தினார் ராகுல் காந்தி. ராஜிவ் செய்ய தவறியதை, ராகுல் செய்வாரா என்பது இங்குள்ள ஒரு பெரிய கேள்வி. காங்கிரஸ் மேலிடத்திற்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் உள்ள சுவரை தகர்பாரா? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நீக்குவாரா?
ராகுல் காந்தி விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்பது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால்தான் தெரியவரும். அதற்கு இன்னும் சில காலம் உள்ளது.
இதற்கு முன், மூத்த அரசியல்வாதிகளுக்கு வருத்தமளிக்காமல், தன் கட்சியிலும், காரிய கமிட்டியிலும் இளைஞர்களுக்கு எதிர்காலம் உள்ளது என்பதை ராகுல் நிரூபிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இதனை சொல்வது எளிது, ஆனால் செய்வது கடினம்.
உட்கட்சி ஜனநாயகத்தை குறித்து அடிக்கடி பேசும் ராகுல், காங்கிரஸ் காரிய கமிட்டியில் 24 பேரையும் இவரே தேர்ந்தெடுத்தார்.
அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாட்டில் உயர்வாக பார்க்கப்படுவது என்னவென்றால், சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் 2019ஆம் ஆண்டு வரை இணைந்து பணி புரிவார்கள் என்பதே. காங்கிரசில் உள்ள அனைத்து தலைமுறையினருக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அல்லாத மற்ற எதிர்கட்சிகளுக்கும் இது நற்செய்தி ஆகும்.
அரசியலில் இருந்து சோனியா விலகி இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தன் முடிவை அவர் மறுபரீசிலனை செய்துள்ளார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஒன்று, ஒரு தாயாக ராகுல் வெற்றி பெற வேண்டும் என்பதை பார்க்க நினைக்கிறார். மற்றொன்று, சோனியா காந்தி என்ற ஒற்றை நபர் இருந்தால் திமுக, ராஷ்ரிய ஜனதா தளம், திரிணாமுல், பிஎஸ்பி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மம்தா பேனர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஷரத் பவாருக்கிடையே ஈகோ இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மையாகும்.
1975-77ல் இருந்த ஜெய்பிரகாஷ் நாராயண் அல்லது வி.பி.சிங் மற்றும் ஹர்கிஷன் கிங் சுர்ஜீத் போல, சோனியா காந்தி மீது போதிய மரியாதை இருப்பது, இந்தக் கட்சிகளை ஒன்று கொண்டுவர உதவும்.
ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அரசியலை நடத்துபவர்களாக இல்லாமல் அதிகாரத்தில் மட்டுமே இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகிக்காமலே, மிகப்பெரிய அதிகாரத்துடன் இருந்தவர் சோனியா. மன்மோகன் தலைமையிலான அரசில், அமைச்சர் பதவியையும் ராகுல் புறக்கணித்தார். தற்போது 48 வயதிலும், பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் ராகுல் எந்த அவசரமும் காட்டவில்லை.
மறுபுறம், நரேந்திர மோதிக்கு எதிரான கூட்டணியை தலைமை தாங்குவதில் ராகுல் தயக்கம் காட்டுவது ஒரு தடையாக பார்க்கப்படுகிறது.
1951-52ல் இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் இருந்து ஆளுமைகள் மற்றும் நன்கு தெரிந்த முகங்களை வைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது.
1951-52, 1957 மற்றும் 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு நேரு முக்கியமான பங்காற்றினார். 1984 வரை இந்திரா காந்தி அரசியலை ஆண்டு வந்தார்.

பட மூலாதாரம், STF
பின்னர், ராஜிவ் காந்தி, சோனியா காந்தி என்று பல ஆளுமைகள் இருந்தனர். ஆனால், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் நிழல்களாகவே இருந்தனர்.
ஆனால் தற்போது மோதியின் ஆளுமையை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு முடியாமல் போவது 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் சிக்கலாக இருக்கும். இந்திரா காந்தியை போல, மோதி Vs மீதமுள்ள அரசியல்வாதிகள் என்று பிரதிபலிக்கும் ஆளுமையை கொண்டுள்ளார் மோதி.
இந்நிலையில், அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாட்டில், அக்கட்சியின் வரலாறுகளை விளக்கும்படியான எந்த பேனர்களும் இல்லை. மகாத்மா காந்தியில் இருந்து, ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், மவுலானா அசாத், இந்திரா காந்தி வரை எந்த படங்களும் இடம்பெறவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












