You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றில் கலந்தார் கனவு தேவதை: ஸ்ரீதேவி இறுதிச் சடங்கின் கடைசி நிமிடங்கள்
தமிழின் திரைவானில் தோன்றி, தெலுங்கில் ஒளி வீசி பிறகு இந்தி திரைப்பட உலகில் ஆதிக்கம் செலுத்திய, பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.
மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ரீதேவி உடலின் இறுதி ஊர்வலம் சுமார் ஐந்தரை கி.மீ. தூரத்தைக் கடந்து சென்று வில்லே பார்லே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
பத்மஸ்ரீ விருது பெற்றவரான ஸ்ரீதேவியின் உடலுக்கு மஹராஷ்டிர மாநில அரசு மரியாதை வழங்கப்பட்டது.
நடிகர்கள் ஷாரூக் கான், அமிதாப் பச்சன், பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் ஆகியோர் சுடுகாட்டுக்கு வந்திருந்தனர்.
எரிமேடை வரை செல்ல ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அனுமதி இல்லை. தங்கள் கனவு தேவதையின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கவும், இறுதி ஊர்வலத்துக்கு வரும் நடிகர்களைப் பார்க்கவும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். எனினும், அவர்கள் சுடுகாட்டுக்கு சில நூறு மீட்டர்கள் முன்பாகவே நிறுத்தப்பட்டனர்.
அமிதாப்பச்சன், காரை விட்டு இறங்காமலேயே சுடுகாட்டுக்கு உள்ளே வரை சென்றுவிட்டதால் அவரை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
சுமார் ஐந்தரை கி.மீ. தூரமுள்ள இறுதி ஊர்வலப் பாதையில்தான் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்தப் பாதையில் உள்ள ஃபோர் பங்களா பகுதியில் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஊர்வலம் தொடங்கும் முன்பாகவே மூடப்பட்டதாகக் கூறுகிறார் பிபிசி தமிழின் சிவக்குமார் உலகநாதன்.
முன்னதாக, ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது உடல் மூடப்பட்டிருந்ததால் அவரது முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய ரசிகர்கள் தெரிவித்தனர்.
உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் இருந்து பார்க்க தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
துபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.35 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர், போனி கபூரின் இளைய சகோதரர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் ஸ்ரீதேவி உடலுடன் இந்தியா திரும்பினர்.
மும்பை விமான நிலையத்துக்கு உடல் வந்து சேர்ந்தபோது போனி கபூரின் இன்னொரு தம்பியான நடிகர் அனில் கபூர், அவரது மகள் சோனம் கபூர், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.
ஊடகங்கள், திரைத் துறையினர் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஆகியோருக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மற்றும் பிராத்தனைக்காக அவரது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதிச் சடங்குகளுக்காக உடல் மும்பை அந்தேரியில் உள்ள கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஸ்ரீதேவி - போனி கபூரின் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நள்ளிரவில் வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
எம்பாமிங்
செவ்வாய்கிழமை மாலை , நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்ய அந்நாட்டு போலீஸ் அனுமதி வழங்கியது. இத்தகவலை துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், நடிகை ஸ்ரீதேவியின் இறந்த உடலை எம்பாமிங் செய்ய ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடமும், இந்திய தூதரகத்திடமும் துபாய் போலீஸ் அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகை ஸ்ரீதேவி ஹோட்டலிலிருந்த குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கூறும் தடயவியல் துறையின் அறிக்கை திங்கள்கிழமை வெளியானது.
மேலும், அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின் முடிவு:
மரணம் நிகழ்ந்த சூழலை அறியவும், சட்ட விதிகளைப் பின்பற்றி உண்மையை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம், அவரது உடலை ஒப்படைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக துபாய் காவல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எஸ்.வி சாலையில் உள்ள விலே பார்லே சேவா சமாஜ் சுடுகாட்டில் 5 மணிக்கு மேல் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்