You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் பலி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
சிரியா: 'துருக்கியின் தாக்குதலில் குழந்தைகள் பொதுமக்கள் பலி'
சிரியாவின் அஃப்ரின் பகுதியில் துருக்கி படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அப்பகுதியில் கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 21 ஆகிய நாட்களில் துருக்கி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 93 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று குர்து செஞ்சிலுவைச் சங்கமும் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியா: சூரியனுக்கு முந்தைய விண்மீன் கூட்டம்
அண்டத்தில் முதன் முதலாக உருவான விண்மீன்கள் கூட்டம் ஒளிர்ந்த இடம் எங்குள்ளது என்பது பற்றிய அறிகுறிகளை ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு ரேடியோ தொலைநோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர்.
சூரியன் உருவாகும் முன்பு உருவான அந்த விண்மீன் கூட்டம் சுமார் 13,800 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.
நீல நிறத்தில் ஒளிர்ந்த அந்த விண்மீன்கள், குளிர்நிலையில் இருந்த ஹைட்ரஜன் வாயுவால் உருவானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா: துப்பாக்கி விற்பனையில் கட்டுப்பாடு
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் துப்பாக்கி விற்பனைக்கு சுய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
டிக்ஸ் ஸ்போர்ட்டிங் கூட்ஸ் நிறுவனம் தாக்குதலுக்கு பயன்படும் ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகளை விற்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளது. துப்பாக்கி வாங்க குறைந்தபட்ச வயதாக 21 இருக்க வேண்டும் என்று வால்மார்ட் நிர்ணயம் செய்துள்ளது.
ஜெர்மனி: அரசு இணையதளங்கள் ஊடுருவல்
தங்கள் நாட்டின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் வலைத்தளங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை ஜெர்மன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
'ஃபேன்சி பியர்' அல்லது ஏ.பி.டி28 என்று அழைக்கப்படும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் குழுவே இதற்கு காரணம் என்று ஜெர்மனி ஊடகங்கள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்