You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கை கூறுகிறது.
அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது கடந்த சனிக்கிழமை இரவு அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
இந்நிலையில், துபாய் போலீஸ் வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவி உடலின் தடயவியல் அறிக்கையானது அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தூதரகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி தெரிவித்துள்ளது.
இதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
உடற்கூறாய்வு முடிவடைந்து, மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக துபாய் அரசின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதலில் மாரடைப்பு என்று கூறப்பட்டதற்கும், தற்போது தவறி மூழ்கியதில் இறந்துள்ளார் என்று தடயவியல் அறிக்கை கூறுவதற்குமான தொடர்பையும் இறுதி அறிக்கைகள் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள துபாய் காவல்துறை, ஸ்ரீதேவி தங்கியிருந்த அறையின் குளியலறையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளது.
மேலும், இவரது மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் ஸ்ரீதேவியின் நிதி நிர்வாகத்தை கவனித்து கொண்டிருந்த அமீர், துபாய் போலீஸ் வழங்கியுள்ள தடயவியல் அறிக்கை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீதேவியின் செய்தி தொடர்பாளர் சமிக்ஷா, அவரது உடல் திங்கட்கிழமை இரவு இந்தியா கொண்டுவரப்படும் என்றும் செவ்வாயன்று இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல்
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
"என்னுடைய சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு மிகச் சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டது" என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டார்.
"மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்" என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
"அவரிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன், அவரது இழப்பை இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று நடிகை கஜோல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ஸ்ரீதேவியின் அகால மரணத்தைப் பற்றி அறிந்தவுடன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அதிர்ச்சியடைந்தேன்" என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, "இந்த செய்தியை கேட்டு மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
திரையில் மின்னிய ஸ்ரீதேவி
கடந்த 1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் 'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.
பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான 'ஜூடாய்' எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :