பிபிசி பெண் செய்தியாளர்கள் நேரடியாக மதுபானம் வாங்கிய அனுபவம்

    • எழுதியவர், கிருத்திகா கண்ணன் - அனகா பாட்டக்
    • பதவி, பிபிசி

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறுசேன, பெண்களுக்கு மது விற்க அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்தார். இதன்மூலம், இலங்கையில் உள்ள மதுபானக்கடைகளில் பெண்களுக்கு மது விற்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

நாங்கள் மதுபானம் வாங்க சென்ற கதை

இந்த செய்தி இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து மற்ற பெண்களுடன் பேச முற்பட்டபோதுதான், "எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது" என்பதை வாய்திறந்து கூறும் நிலையில் இந்திய பெண்கள் இல்லை என்பது தெளிவானது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஐந்து சதவிகிதம் பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று உலக சுகாதார மைய அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியென்றால், இவர்கள் எவ்வாறு மதுபானத்தை வாங்குகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது

ஏனெனில், பொதுவாக பெண்கள் கடைகளுக்கு சென்று அலசி ஆராய்ந்து, பாதிக்கடையைப் புரட்டிப்போட்டு பொருளை்களை வாங்குவதுபோல இவற்றை வாங்க முடியாது. பெரும்பான்மையான இடங்களில் இவற்றை வாங்க பெண்களுக்கு ஆணின் உதவி தேவைப்படுகிறது. அதையும் மீறி, கடைகளுக்கு வாங்கச் சென்றாலும், நீங்கள் போன வேகத்தில் வெளியேற வேண்டும்.

மது அருந்துதல் உடல்நலனுக்கு கேடு என்ற பொதுவான வார்த்தைகளையும் தாண்டி, பெண்கள் மது அருந்துவது மரபு ரீதியாக கேடு என்ற கோணத்திலேயே சமூகம் பார்க்கிறது.

நாங்கள் மதுபானம் வாங்க சென்ற கதை

ஆக, பெண்கள் மதுபானம் அருந்துவது என்பது இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் எவ்வாறு பார்க்கப்படுகிறது? உண்மையில் ஒரு மதுபான கடைக்குச் சென்று பெண்கள் மதுவாங்கும் அந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய விரும்பினோம்.

இரு பெண்கள் இணைந்து, முதன்முறையாக ஒரு மதுபான கடைக்கு சென்றோம்.

நாங்கள் சென்ற மதுபானக்கடை, ஒரு பெரிய அடுக்குமாடி அங்காடியில் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் இரு பக்கமும் கடைகளாக இருந்தன. அவற்றின் இடையே சில மதுபான கடைகளும் இருந்தன. ஒதுக்கப்பட்ட வித்தியாசமான வாசம் வீசும் கடை என இல்லாமல், இவை சாதாரண வரிசையாக அமைந்திருந்தன.

அன்று ஏதோ, மாலில் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது.

உள்ளே சென்றவுடன் நாங்கள் முதலில் சென்றது பொதுக்கடை ஒன்றிற்குதான். அங்கு பணியாற்றுபவர்கள், `பெண்களுக்கான கடை` அங்குள்ளது என்று பக்கத்துக்கடையை நோக்கி கையை நீட்டினார்கள்.

நாங்கள் அந்தப் பணியாளர்களிடம் பேசினோம். `பெண்கள் இங்கு வந்து மதுபானம் வாங்கக்கூடாதா?` என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த பணியாளர், `அப்படி இல்லீங்க... இரண்டு கடைகளிலும் ஒரே மாதிரியான சரக்குதான் இருக்கு.. பெண்களுக்கு வசதியாக இருக்கவே இந்த பிரத்யேக கடை உள்ளது, பிறகு எதற்காக அவர்கள் இங்கு ஆண்கள் கூட்டத்தில் நசுங்க வேண்டும்?` என்று அக்கறையோடு கேட்டார் பணியாளர் பிரமோத் குமார்.

பிரமோத் குமார்

பொதுவாக மால்களில் காணப்படும் கடைகளைப் போலவே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பொருட்கள். பல்வேறு வண்ண விளக்குகள் என்று மிகவும் இயல்பாக தோற்றமளித்தது இந்தக்கடை. பெண்கள் உட்கார்ந்து பேச ஒரு நீண்ட இருக்கையும் போடப்பட்டிருந்தது.

இருகடைகளுக்கும் பின்னால் ஒரு சிறிய பாதை உள்ளதால், எங்களுக்கு முன்னால் அங்கு வந்து சேர்ந்தார் பிரமோத் குமார்.

நாங்கள் சென்ற நேரம் கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. அங்குள்ள மதுபானங்களை எடுத்துப்பார்க்க எங்களுக்கு நேரம் கிடைத்தது.

முதன்முதலாக மதுபான கடைக்கு சென்ற பெண்கள் என்பதை விளக்கும்வகையில் நாங்கள் நிறைய புகைப்படங்கள் எடுத்தோம்.

அங்கு நின்று மதுபானங்களின் விலையை பார்ப்பதோ பிற விவரங்களை கேட்பதோ கடினமாக இல்லை. மற்ற கடைகளில் நடந்துகொள்வது போலவே இருந்தது.

`இங்கு வரும் பெண்களுக்கு உதவ பெண் ஊழியர் உள்ளார். பெண்களால் சுலபமாக மதுபானங்களை வாங்கி செல்ல முடிகிறது` என்று கூறிய பிரமோத் குமார், `இந்தியாவின் முதல், பெண்களுக்கான பிரத்யேக மதுபானக்கடை இது!`என்றார்.

நாங்கள் மதுபானம் வாங்க சென்ற கதை

இந்த கடை காலை முதல் இயங்குகின்றது. பெண்களுக்கான கடை என்பதால், பெண்களுடன் வரும் ஆண்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு ஒரு பெண்மணியுடன் வந்த ஆலன் கான் என்பவரிடம் பேசினோம்.

"இங்கு மதுபானம் வாங்குவது பெண்களுக்கு மிக வசதியாக உள்ளதால், அவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் குடிப்பதை யாரும் தடுக்க முடியாது. மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய கடைகள் தேவை" என்று இந்தக் கடையின் அவசியத்தை நியாயப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இந்த கடைக்கு சில முறை சென்றுள்ள(பெயர் குறிப்பிட விரும்பாத) ஒரு பெண்ணிடம் பேசினோம். அங்குள்ள சில சிக்கல்களை அவர் விவரித்தார்.

"கடையிலுள்ள பெண் ஊழியருக்கு இந்த மதுபானங்கள் குறித்து பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. அதனால், ஏதேனும் மதுபானம் குறித்து நாங்கள் சந்தேகம் கேட்கும்போது அவரால் உதவ முடிவதில்லை. இதை தவிர்க்க நான் சில நேரங்களில் பொதுகடைகளுக்கு செல்வேன். அங்குள்ள ஆண் ஊழியர்கள் எனக்கு உதவுவார்கள்" என்றார்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில்தான் இரு பெண்கள் மதுபானம் வாங்க வந்தார்கள். அவர்களின் கருத்தை கேட்க முற்பட்டபோது, காதில் விழாததுபோல அவர்கள் லாவகமாக விலகிச் சென்றுவிட்டனர்.

இந்தியாவில், மது அருந்துதல் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசுவது என்பது எதிர்மறையான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஒரு சாதாரண மதுபானக்கடைக்கு சென்றோம். உடன் சில ஆண் நண்பர்களும் இருந்தனர்.

ஆனால், அங்கு பெண்கள் மது வாங்க நேரடியாக வருவதில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர்.

நாங்கள் மதுபானம் வாங்க சென்ற கதை

"ஆண் நண்பர்களுடன் வருவார்கள். அல்லது, கடைக்கு சற்று தள்ளி நின்றுகொண்டு, அங்குள்ள ஆண் யாரிடமாவது வாங்கித்தருமாறு கேட்பார்கள்" என்று கூறினார், பப்பு சிங் என்னும் ஊழியர்.

பின்னர் நாங்கள் பேசுவதைக் கேட்டு, எங்களிடம் வந்து பேசிய ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர், என் வாகனத்தில் பயணித்த ஒரு பெண்மணி, அவருக்காக மதுபானம் வாங்கிக்கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாக கூறினார் என்று தெரிவித்தார்.

பெண்கள் பலரும், பொதுவெளியில் தனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது, அல்லது நான் இதுவரை மது அருந்தியுள்ளேன் என்பதை வெளிப்படையாக கூறுவதில்லை.

`பெண்களுக்கான கடை` என இருந்தாலும், அதிலும் பெண்கள் சங்கடப்படும் சில விஷயங்கள் உள்ளன.

பெரிய அங்காடியில் இது அமைந்துள்ளதால், அந்தக்கடையில் அதிக நேரம் செலவிடுவது சற்று சங்கடமான ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. கடைக்கு சென்று மதுபானத்தை வாங்கும் வரையில் பரவாயில்லை என்றாலும், அவற்றை வெளியே கொண்டுவந்தவுடன், சமூகத்தின் பார்வை தீவிரமடைவதையும் உணர முடிகிறது.

இதனால்கூட அந்த இரு பெண்கள் எங்களிடம் பேசாமல் சென்றிருக்கலாம்!?!

மது அருந்தும் பழக்கம் என்பது, இரு பாலினத்திவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைத் தாண்டி, மது அருந்தும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதும், அவர்களை தவறான கோணத்தில் பார்ப்பதுமே சமூகத்தில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :