கர்நாடகத் தேர்தல்: திப்பு எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுக்கும் பாஜக

திப்பு சுல்தான்

பட மூலாதாரம், DD NEWS

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியலை இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் திட்டமாகப் பயன்படுத்த முயல்கிறது பாஜக.

சுதந்திரப் போராட்ட வீரராக திப்பு சுல்தானின் படத்தை டெல்லி சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், கர்நாடகாவில் தான் செய்த திப்பு எதிர்ப்பு பிரசாரத்தை பாஜக இங்கும் மறுபதிப்பு செய்துள்ளது.

''இது நிச்சயமாகத் தேர்தல் பிரச்சனை. சித்தராமையா அரசு வருவதற்கு முன்பு வரை, திப்பு ஒரு வரலாறு. திப்பு ஜெயந்திக்கு ஏற்பாடு செய்ததன் மூலம், காங்கிரஸ் அரசு சமூகத்தை உடைக்க முயற்சித்தது. இது முற்றிலும் தேவையற்றது'' என்கிறார் எம்.பியும், கர்நாடகா பாஜக பொதுச் செயலாளருமான ஷோபா கரண்ட்லஜே.

ஆகஸ்ட் மாத கடைசியில் இருந்து திப்பு சுல்தான் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே முதல், கீழ்மட்ட தலைவர்கள் வரை பலரும் திப்பு சுல்தானை தாக்கிப் பேசினர்.

தேர்தலுக்கு தயாராகுதல் குறித்து தனது கட்சிக்காரர்களுடன் பேசுவதற்காக அமித் ஷா பெங்களூரு வந்ததது முதல் திப்பு சுல்தானை ஒரு முஸ்லிம்களை திருப்திப்படுத்த சின்னமாக காங்கிரஸ் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு பாஜக-வால் எழுப்பப்பட்டது. திப்பு ஜெயந்தி கொண்டாடும் சித்தராமையா அரசு, திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக வெளிப்படுத்தத் தனது கட்சிக்காரர்களிடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

திப்பு சுல்தானுக்கும்

பட மூலாதாரம், Thinkstock

''திப்பு ஒரு கொலைகாரர், மோசமான கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்'' என கருதுவதால் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே, திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழில் தனது பெயரை அச்சிடவேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொண்டார்.

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா 2008-11 வரை முதல்வராக இருந்தபோது, திப்பு ஜெயந்தியில் பங்கேற்ற புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பிறகு, அது பாஜகவை சங்கடப்படுத்தியது.

''திப்பு சுல்தான் ஒரு வளர்ச்சியின் முன்னோடி, மைசூர் ராக்கெட்டை போரில் பயன்படுத்தினார். இந்த தொழில்நுட்பம் பின்னர் ஐரோப்பியர்களால் ஏற்கப்பட்டது'' என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறிய போது பாஜக முகம் சிவந்தது.

திப்பு

பட மூலாதாரம், BONHAMS

பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம், கர்நாடகா மக்கள் மீண்டும் ஹனுமான் மற்றும் ஆன்மீக தலைவர்களை வணங்கத் தொடங்குவர். திப்புவை அல்ல'' என யோகி ஆதித்யநாத் கூறியது மீண்டும் பிரச்சனையை கிளப்பியது.

திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி கான் ''மைசூர் ராஜ்ஜியத்தின் அபகரிப்பாளர்'' என ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.

'' திப்பு சுல்தான் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்று மதம் மாற்றினார். தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூர அட்டுழியங்களால், கூர்கு மக்கள் திப்புவுக்கு எதிராக இருந்தனர்'' என்கிறார் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கான ஆர் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்.

மராத்திகள் சிருங்கேரி கோயிலை சேதப்படுத்திய பிறகு, திப்பு இந்த கோயிலை மீண்டும் கட்டி எழுப்பினார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

திப்பு சுல்தான்

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

''சிருங்கேரி மடத்திற்கு திப்பு நன்கொடை கொடுத்தது ஒரு அரசியல் நகர்வு. தனது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்க அவர் பிரிட்டிஷுடன் சண்டையிட்டார். அவர் ஒரு முஸ்லிம் என்பதற்காக நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் செய்த அட்டூழியங்களுக்காக எதிர்க்கிறோம்'' என்கிறார் நாகராஜ்.

'' பி.ஜே.பி அதை ஒரு பிரச்சினையாக மாற்ற விரும்புகிறது மற்றும் வாக்குகளை சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அக்கட்சியினர் பயன்படுத்தலாம்'' என்கிறார் அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான சந்தீப் சாஸ்திரி.

''மதச்சார்பற்றவராக அவரை அழைக்க முடியாது. அவர் மதச்சார்புடையவர். ஒரு மதச்சார்பற்ற நபர் கேரளாவில் ஒரு கோயிலை கொள்ளையடித்துவிட்டு,சிருங்கேரியில் மற்றொரு கோயிலை கட்டி எழுப்ப மாட்டார். அவர் சுதந்திர போராட்ட வீரரும் அல்ல'' என்கிறார் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேந்த அடாண்டா காரியப்பா.

1783-1799 வரை இப்போதைய கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளை திப்பு சுல்தான் ஆண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: