பெரிதும் கவனத்தை ஈர்த்த `சீதக்காதி` - எந்த வகை திரைப்படம்?

விஜய் சேதுபதி முதுமையான வேடத்தில் நடித்து வரும் `சீதக்காதி` திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் இயக்கிய முதல் படம், `நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்`. அந்தப் படத்தின் நாயகனும் விஜய் சேதுபதிதான்.

விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக கை கோர்த்து இருக்கும் பாலாஜியிடம்,இந்த படத்தின் கதை கரு என்ன? வள்ளல் சீதக்காதிக்கும் இந்தப் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? விஜய் சேதுபதியின் பாத்திரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து பேசினோம்.

அந்த உரையாடலில் இருந்து,

நாடகக் கலைஞன்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி எழுத்தாளர் கீரா தோரணையில் அமர்ந்து இருக்கிறார், படத்தின் பெயர் சீதக்காதி... என்ன பேச வருகிறது இந்தப் படம் என்ற கேள்விக்கு, "வரலாற்றிலிருந்து `சீதக்காதி` என்ற பெயரை மட்டும்தான் கடன் வாங்கி இருக்கிறோம். இந்தப் படம் அவரின் வாழ்க்கையை பற்றி பேசும் படம் அல்ல. கீராவும் கதையில் இல்லை. இது ஒரு முதுமையான நாடக கலைஞனின் வாழ்வையும், அந்த கலைஞன் நாடக கலை மீது கொண்ட பெருங்காதலையும் உயிர்ப்புடன் பேசும் படம் " என்று தன் உரையாடலை தொடங்கினார் பாலாஜி தரணிதரன்.

ஏற்கெனவே நாடகக் கலையை மையப்படுத்தி `காவியத் தலைவன்` என்ற படம் வந்திருக்கும் சூழ்நிலையில், இந்த படம் அதிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பது குறித்துப் பேசினார் பாலாஜி.

"முதலில் இது `பிரீயட்` ஃபிலிம் அல்ல. இது நம் காலகட்ட கதை. நாடக கலையை பெரிதும் நேசித்தவன். அதில் இயங்கியவன் இப்போது எப்படி இருக்கிறான் என்பது குறித்த படம். அதை எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கேன்." என்றார்.

"இந்தப் படத்திற்கு பெரும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு தேவை. இதெல்லாம் தேவைதான் என்பதாலோ என்னவோ, விஜய் சேதுபதி இயற்கையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்."

மேக்-அப்

விஜய் சேதுபதிக்கு மேக் அப் போடுவதற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் கலைஞர்களை அழைத்து வந்திருக்கிறார்கள்.

இது குறித்து பாலாஜி, "வயதானவர் வேடம் என்பதால், இயல்பாக மேக்கப் அப் இந்தப் படத்தில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் செய்து பல மேக்கப் டெக்னீஷியன்களை சந்தித்து பேசினோம். இறுதியாக, ஹாலிவுட்டில் பல படங்களில் பணியாற்றிய கெவின் வடிவமைத்து கொடுத்த மேக்கப் எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரும், அவரது குழுவும் இந்தப் படத்திற்காக பணியாற்றுகிறார்கள்" என்றார்.

மேக்கப் அப் போடுவதற்கு மட்டுமே 4 மணி நேரமாகிறது. காலையில் 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்க வேண்டுமானால், நள்ளிரவே விஜய் சேதுபதிக்கு மேக்கப் போட தொடங்க வேண்டும். மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார் என்கிறார் பாலாஜி.

தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 25 வது படம் என்பதால், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இப்போதே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :