இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ரகசிய உறவு இருக்கிறதா?

2003இல் இந்தியா வருகைதந்த இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனுடன் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2003இல் இந்தியா வருகைதந்த இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனுடன் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி

2003ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பிறகு, 2014ம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் இரு நாடுகளுக்கும் இடையே உயர்நிலைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது இந்தியப் பிரதமர் மோதியை சந்தித்தப்பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இனி இருதரப்பு உறவில் 'வானமே எல்லை' என்று குறிப்பிட்டார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் 'வானமே எல்லை' என்ற சொல், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ரகசிய உறவுகள் இருப்பதான ஊகங்களை கிளப்பிவிட்டன.

அடுத்த ஆண்டே 'வானமே எல்லை' என்பதன் பொருளும் வெளிப்படையாக தெரிந்தது. 2015 ஜூலை மாதத்தில், ஐ.நா மனித உரிமைகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவின் இந்திய பயணத்தின்போது அவரும், பிரதமர் மோதியும்

இந்தியாவின் இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய தூதர் டேனியல் கேர்மோன் வரவேற்றார்.

2006ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோதி முதல் முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமரான பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்தார்.

இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மோதியின் ஆட்சியில் வழக்கத்தைவிட மாறுபட்டதாக இருக்க போகிறது என்று இந்தியாவிலும் பேச்சு தொடங்கியது.

ஆனால், அண்மையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை மோதியின் கட்சியை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி போன்ற தலைவர்களும் விமர்சித்தார்கள். இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா பெரிய தவறு செய்து விட்டதாக கூறிய சுவாமி, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரே நாடு இஸ்ரேல்தான் என்று சுட்டிக்காட்டினார்.

புத்தாண்டில் அடுத்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கன்வால் சிபல் கூறுகையில், "இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகராக திடீரென அறிவித்ததுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார்.

டிரம்ப்பின் இந்த முடிவை அவருடைய அரசை சேர்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா ஆழ்ந்து சிந்தித்தே முடிவெடுத்திருக்கிறது. பாலத்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தத்தை ஏற்படுத்த தற்போது அரபு நாடுகளும் முயன்று வருகின்றன. இந்தியாவிற்கும் அத்தகைய ஒரு இடம் தேவை."

இந்தியா இஸ்ரேலுடன் ரகசிய காதல் கொண்டுள்ளதா?

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ரகசிய உறவு இருப்பதாக கூறப்படுவது தற்போது காலாவதியாகிவிட்ட விவகாரம் என்று கன்வல் சிபல் கூறுகிறார்.

"இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது வெளிப்படையான இணக்கமும், அன்பும் நிலவுகிறது, இந்தியப் பிரதமர் அங்கு செல்கிறார், இஸ்ரேலியப் பிரதமர் இங்கு வருகிறார். இருவரும் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரகசிய காதல் என்று எப்படி சொல்லமுடியும்?'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.

அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. இந்தியா உட்பட 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

இந்தியா, தனது வெளியுறவு கொள்கைகளின் அடிப்படையில் மிகவும் சிந்தித்தே ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தது.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் நேருவின் சாயல்

மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் அஹிம்சை கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேருவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், இந்தியா பாலத்தீனியர்களை உறுதியாக ஆதரித்து வருகிறது. 1950இல் இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தது.

1992இல் இஸ்ரேலுடன் ராஜாங்கரீதியிலான உறவுகளை இந்தியா ஏற்படுத்தி இருந்தாலும், அதை மேம்படுத்துவதில் அதிக ஆர்வத்தை காட்டவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா இஸ்ரேலுடன் வெளிப்படையாக சுமூக உறவுகள் கொண்டிருப்பதை இந்தியா தொடர்ந்து தவிர்த்தே வந்துள்ளது. அரபு நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ள இந்தியா, இஸ்ரேலுடனான உறவில் முன் அடி எடுத்து வைப்பதற்கு தயங்குவதற்கு காரணம், பெருமளவிலான இந்திய முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை செய்வதே.

சர்வதேச அளவில் இந்தியா வலுவடைந்து வரும்போது, நாட்டின் நலனுக்கு ஏற்றாற்போல் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டிருப்பதாக பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் 1990 வரை நீடித்த பனிப்போரின் முடிவில், உலக நாடுகள் ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்றன.

இந்தியாவும் சர்வதேச நாடுகளின் மத்தியில் தன்னை முன்னிறுத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் தன்னுடைய நலன்களுக்கு ஏற்றவாறு இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டது.

விவசாயம், பாதுகாப்பு, மின்சாரம் அரசியல் நலன்களுக்காக மத்திய கிழக்குடன் இந்தியாவின் உறவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின்படி, 2016-17இல் அரபு நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் 121 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 18.25% ஆகும். அதே நேரத்தில், இஸ்ரேலுடனான இந்தியாவின் வர்த்தகம் வெறும் 5 பில்லியன் டாலர்தான்.

இஸ்ரேலுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவு மிக ஆழமானது என்றாலும், அரபு நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி மற்றும் மின்சாரம் ஆகியவை அதைவிட மிக முக்கியமானவை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியும் இஸ்ரேலும்

மோதியின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கியது. இந்தியாவில் உள்ள வலதுசாரி சித்தாந்தவாதிகள் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலிடம் பரிவுணர்வு கொண்டிருந்தனர்.

இந்த முன்முயற்சியில், இந்தியா அணிசேரா நாடுகளுக்கு இடையே இஸ்ரேல் எதிர்ப்பு திட்டங்கள் ஆதிக்கம் செலுத்த இந்தியா அனுமதிக்கவில்லை. 2015இல், ஐ.நா தீர்மானம் ஒன்றில் இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

சென்ற ஆண்டு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியா வந்தபோது, பாலத்தீனத்தின் கவலைகளை பிரதமர் மோதி ஆதரித்தார். அமைதியான இஸ்ரேல் என்பதுடன் இறையாண்மை, சுதந்திரமான மற்றும் ஒன்றிணைந்த பாலத்தீனம் பற்றியும் மோதி பேசினார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற மோதிதான் இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் விவகாரத்தில் அப்போது தெளிவான குறிப்பை மோதி உணர்த்தினார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2003ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின்போது அந்நாட்டின் துணைப்பிரதமருடன் அப்போதைய இந்திய துணைப்பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி.

அரபுடன் இஸ்ரேலின் நட்பு

அரபு நாடுகளுடனான ராஜாங்க உறவுகளையும் சுமூகமாகவே வைத்துக்கொண்ட பிரதமர் மோதி, இஸ்ரேலுக்கு செல்வதற்கு முன்னதாக, கத்தார், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குடியரசு தினக் கொண்டாட்டாங்களில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான உறவை சுமூகமாக்கும் வாய்ப்புகள் இன்னமும் இருப்பதாக கூறியிருக்கிறது.

இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோதி பாலத்தீனிய பகுதியான ராமல்லாவிற்கு செல்லவில்லை.

கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்றே இந்தியாவும் ஐ.நாவில் டிரம்பின் அறிவிப்புக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் தவிர்த்திருக்க முடியாதா?

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இரகசிய உறவு இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச விவகாரங்களில் நிபுணரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான சேஷாத்ரி சாரி கூறுகிறார், "இந்தியா, அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இஸ்ரேலுடனான உறவை பார்க்க முடியாது. இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவில் எந்த பங்கமும் ஏற்படாது. ஆனால் அதற்காக பாலத்தீனம் மீதான அக்கறையையும் தவிர்க்க முடியாது."

"இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதோடு நமக்கான சொந்த நலன்களே நமக்கு முன்னுரிமையாக இருக்கமுடியும். ஜெருசலேம் பற்றி அமெரிக்கா சுதந்திரமாக எடுத்திருக்கும் முடிவை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?"

அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் ஒரே நாடு இஸ்ரேல் என்ற கருத்து பற்றி கூறும் சேஷாத்ரி சாரி, "ஐ.நா. சபையில், ரஷ்யாவும் காஷ்மீருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. வேறு பல நாடுகளும் நமக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இந்த முடிவு இஸ்ரேலுக்கோ, அமெரிக்காவுக்கோ அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்காது."

இஸ்ரேல் விவகாரத்தில் தந்தையின் பாணியையே இந்திரா காந்தியும் பின்பற்றினார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் விவகாரத்தில் தந்தையின் பாணியையே இந்திரா காந்தியும் பின்பற்றினார்

ஆட்சிகள் மாறினாலும் மாறாத வெளியுறவுக் கொள்கை

இஸ்ரேல் தொடர்பான கொள்கைகளில் காங்கிரஸ் ஆட்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியிலும் மாற்றங்கள் இருந்ததா? சாரியின் கருத்துப்படி, ''ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும், வெளியுறவு, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.

இஸ்ரேலுடன் சுமூகமான உறவை மேற்கொள்வது என்பது முஸ்லிம் விரோத போக்கு என்று அர்த்தமில்லை என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு யதார்த்தமானதாக இருப்பதாக கூறும் அவர்கள், இந்துத்துவாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை என்றும் சொல்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துடனும் இந்தியா சுமூக உறவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பனிப்போரின் ஆரம்ப காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு 1955 பாண்துங் மாநாட்டில் (Bandung conference) இஸ்ரேலை அழைப்பதற்கு யோசித்தாலும், பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

பனிப்போருக்கு பிறகு, உலகின் சமன்பாடுகள் மாறியபோது, இந்தியா இஸ்ரேலுடனான ராணுவ உறவை அதிகரிக்கத் தொடங்கியது.

இஸ்ரேல் பிரதமர் ஒருவரை சந்தித்த முதல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் ஒருவரை சந்தித்த முதல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி

1960 முதல் இஸ்ரேலுடன் நெருக்கம்

1960 முதல் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகள் நெருக்கமாயின. 1962, 1965 மற்றும் 1971 இல் இஸ்ரேல் இந்தியாவுக்கு ராணுவரீதியாக உதவியது. பாகிஸ்தானுடனான இந்தியப் போருக்கு பிறகு, பங்களாதேஷ் தனிநாடாக உருவெடுத்தபோது அதற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு இஸ்ரேல்தான்.

1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொரார்ஜி தேசாயின் ஆட்சியில், இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமானது.

வெளியுறவுக் கொள்கைகளில் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார் இந்திரா காந்தி. தாயின் தடத்தை ஒட்டியே நடந்த ராஜீவ் காந்தி, ஐ.நா சபை பொதுக்கூட்டத்தின்போது அப்போதைய இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார்.

அதுதான் இந்தியப் பிரதமரும், இஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் முதன்முறையாக சந்தித்த சரித்திர நிகழ்வு. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தது. எனவே இஸ்ரேலுடனான உறவு பற்றிய தனது தயக்கத்தை கைவிட்டு, நட்புரீதியில் கைகுலுக்குவதே உசிதம் என்று கருதியது இந்தியா.

மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்

1991இல் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை மேற்கொண்டபோது, இஸ்ரேலுடன் முறையான ராஜாங்க உறவுகளும் உருவாகின. பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்போதெல்லாம், இஸ்ரேலுடனான உறவுகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அரேபியர்களுக்கு கோபம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தியா தனது உறவை விரிவுபடுத்தியதில்லை.

1992இல் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டபிறகு, 2000ஆம் ஆண்டில், எல்.கே. அத்வானி இஸ்ரேலுக்கு சென்றதுதான் மூத்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த ஒருவர் அந்த நாட்டிற்கு மேற்கொண்ட முதல் அரசு முறைப் பயணமாகும். அந்த ஆண்டில்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தோ-இஸ்ரேலிய கூட்டு குழு உருவாக்கப்பட்டது.

2003ல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, அமெரிக்க யூத குழுவில் உரையாற்றியபோது, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.

2004ல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, இஸ்ரேல்-இந்தியா உறவுகள் தலைப்புச் செய்திகளில் இருந்து இறங்கிவிட்டன. இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்தவித கசப்பும் ஏற்படவில்லை.

மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆழமாகின. இஸ்ரேல் பிரதமர் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான அன்பும் காதலும் ரகசியமானதா என்ற கேள்வியை எழுப்புபவர்களுக்கு அப்போது உரிய பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :