2017: உலக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிறைந்த ஆண்டு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த டிரம்ப்பின் பதவியேற்பில் தொடங்கி, ரோஹிஞ்சா முஸ்லிம்களின் அகதிச் சிக்கல், வடகொரியா-அமெரிக்க உறவில் ஏற்பட்ட பதற்றம், இர்மா புயல், மெக்சிகோ நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்ள் போன்ற பல முக்கிய உலக நிகழ்வுகள் 2017ம் ஆண்டின் நீங்காத அடையாளங்களாகியுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
டிரம்ப் பதவியேற்பு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மனைவியுமான ஹிலரி கிளின்டனை தோற்கடித்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.
அதிபர் தேர்தலில் ஹிலரிக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்திலான பிரசாரத்தில் ரஷ்யா ஈடுபட்டதாக அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டு, முந்தைய அதிபர் ஒபாமா கொண்டுவந்த ஒபாமா கேர் என்ற பொது சுகாதாரத் திட்டத்தை ரத்து செய்ய டிரம்ப் எடுத்த முயற்சிக்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்து அந்த முயற்சி தோல்வியடைந்தது, இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே சர்ச்சையில் இருக்கும் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்தது, அலபாமா செனட் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர் தோற்றது, முக்கிய வரிச் சீர்திருத்த மசோதா செனட்டில் வெற்றி பெற்றது ஆகியவை டிரம்பின் கடந்த ஓராண்டு கால கால ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், அந்நாட்டின் ஃபுளோரிடா மாகாணத்தைத் இர்மா புயல் தாக்கி பலத்த சேதம் ஏற்படுத்தியதும், கலிஃபோர்னியா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ நகரங்களுக்குள் பரவியதும் இந்த ஆண்டில்தான்.
இளம் வயது அதிபர்: பிரான்சின் மக்ரோங்

பட மூலாதாரம், Getty Images
பிரான்சில் வங்கியாளராக இருந்து, பிறகு ஒல்லாந்தே தலைமையிலான சோஷியலிஸ்ட் கட்சி ஆட்சியில் பொருளாதார ஆலோசகராகி, அதே அரசில் பொருளாதார அமைச்சராக உயர்ந்த இம்மானுவல் மக்ரோங் திடீரென 'என் மார்சே' என்ற பெயரில் 2016 ஏப்ரலில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். பிறகு ஆகஸ்டில் அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார்.
அரசியலில் இடதுசாரியும் அல்லாத, வலது சாரியும் அல்லாத மையவாதக் கட்சியாக மக்ரோங்கின் 'என் மார்சே' அறியப்பட்டது. கட்சி தொடங்கி சுமார் ஓராண்டில், 2017ம் ஆண்டின் மே மாதத்தில், பிரான்சில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 39.
நாட்டை ஒற்றுமைப்படுத்தப்போவதாகக் கூறிய மக்ரோங், தமது ஆட்சிக் காலத்தில், இனி நாட்டில் தீவிர நிலைப்பாடு உடையவர்களுக்கு வாக்களிக்க, மக்களுக்குக் காரணங்கள் இல்லாமல் செய்வேன் என்று கூறினார். இவர் ஆட்சியை விட்டு அகற்றியது சோஷியலிஸ்ட் கட்சியின் ஒல்லாந்தே. தேர்தலில் இவருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகள் பெற்ற, முதன்மைப் போட்டியாளர் லீ பென் தீவிர வலது சாரி.
சீன கம்யூனிஸ்ட் மாநாடு: பிடியை இறுக்கிய ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images
உலகின் மிகவும் சக்தி மிக்க அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபரில் நடந்தது. இந்த மாநாட்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஷி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
அத்துடன் ஷி ஜின்பிங் தமது கருத்துகளை `ஜின்பிங்கின் கோட்பாடுகள்` என்ற தத்துவ ஆவணமாக வடித்து, அதை அரசியலமைப்பு சட்டத்தில் சேர்ப்பதற்கான வாக்கெடுப்பும் நடந்தது. இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் தனது பிடியை ஜின்பிங் இறுக்கினார்.
வடகொரியா: ஏவுகணையும் சொற்போரும்

பட மூலாதாரம், Getty Images
வட கொரியா அடுக்கடுக்காக நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகள் அமெரிக்காவை சீண்டிது. ஏறத்தாழ அமெரிக்க நாடு முழுவதையும் தாக்கும் வல்லமை மிக்க ஏவுகணையை வெற்றிகரமாக நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. இதனால், அமெரிக்கா எடுத்த முயற்சியினால் ஐ.நா. அடுத்ததடுத்து பொருளாதாரத் தடைகளை வடகொரியாவுக்கு எதிராக விதித்தது. வட கொரியா உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கு இடையே மூண்ட வார்த்தைப் போர் இரு தரப்பு உறவில் வீழ்ச்சியையும், உலக அரசியலிலும் சலனத்தையும் உண்டாக்கியது.
கேட்டலோனியா/ குர்திஸ்தான்: எழுந்து வீழ்ந்த விடுதலை முழக்கம்

பட மூலாதாரம், Getty Images
ஸ்பெயினின் தன்னாட்சி பிராந்தியமான கேட்டலோனியாவும், இராக்கின் குர்திஸ்தானும் தனி நாடாவதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தின. இந்த வாக்கெடுப்புக்கு அந்தந்த பிராந்திய மக்கள், பெரும் ஆதரவு அளித்தனர்.
ஆனால் ஸ்பெயினும், இராக்கும் இந்த வாக்கெடுப்புகளைப் புறக்கணித்து இது சட்டவிரோதமானது என்று கூறின. கேட்டலோனியா பிராந்திய அரசை கலைத்த ஸ்பெயின் அரசு, வாக்கெடுப்புக்குக் காரணமான முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்தது. கேட்டலன் தலைவரான கார்லஸ் பூஜ்டிமோன் பெல்ஜியத்திற்கு தப்பி சென்றார்.
ஸ்பெயினை போலவே குர்திஷ் பகுதிகளை இராக் ராணுவம் கைப்பற்றியது. இதன் மூலம் இரு பகுதிலும் சுதந்திர அறிவிப்புகள் முடக்கப்பட்டன.
ஜிம்பாப்வே: வீழ்ந்தது முகாபே ஆட்சி

பட மூலாதாரம், Getty Images
1980 முதல் ஜிம்பாப்வே அதிபராக இருந்த ராபர்ட் முகாபே துணை அதிபராக இருந்த எமர்சன் முனங்காக்வாவை பதவி நீக்கம் செய்தததை அடுத்து, அந்நாட்டு ராணுவம் தலையிட்டு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது. முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆளும் ஜானு பிஎஃப் கட்சியையும், ஆட்சியையும் தன் மனைவி கிரேசுக்கு மாற்றிக் கொடுக்கவே முகாபே இப்படி செயல்பட்டார் என்று கூறப்பட்டது.
நாடாளுமன்றம் முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையைத் தொடக்கிய நிலையில், முகாபே தாமாக முன்வந்து பதவி விலகினார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த முனங்காக்வா திரும்பி வந்து அதிபராகப் பதவியேற்றார். ஆனால், முகாபே கைது செய்யப்படவில்லை. முகாபே, முனங்காக்வா இருவருமே அந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ரோஹிஞ்சா: எல்லை தாண்டும் துயரம்

பட மூலாதாரம், Getty Images
2017-ம் ஆண்டு மியான்மரின் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு துயரமான ஆண்டாக அமைந்தது. மியான்மர் ராணுவத்திற்கும், அர்சா என்ற ரோஹிஞ்சா தீவிரவாத குழுவிற்கு ஏற்பட்ட மோதல் அனைத்துக்கும் தொடக்கமாக இருந்தது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்ததாக சொல்லப்பட்ட நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசம் சென்றனர்.
இதனை மியான்மரின் இனச்சுத்திகரிப்பு என கூறி ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்: புனிதமும் அரசியலும்

பட மூலாதாரம், Getty Images
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தார்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, பாலத்தீனியர்களின் பெரும் போரட்டத்திற்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகள் உட்பட, பெரும்பான்மையான உலக நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தன. அத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.
ஐ.எஸ்: வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியதாக ஜூலை மாதம் இராக் அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான 3 வருட சண்டையில் இராக் வெற்றிபெற்றதாக இராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி அறிவித்தார்.
அதேபோல ஐஎஸ் குழுவின் தலைநகராக கருதப்பட்ட சிரியாவின் ரக்கா நகரத்தையும், சிரியா ஜனநாயக படையினர் அக்டோபர் மாதம் கைப்பற்றினர்.
புரட்டிப்போட்ட இர்மா, மெக்சிகோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், AFP
முதலில், கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய இர்மா சூறாவளி, அடுத்ததாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஏராளமான சேதங்களை உருவாக்கியது.
செப்டம்பர் மாதம் மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி உள்பட பல இடங்களில் உள்ள கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்தன.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












