விலை கொடுத்து வாங்கப்பட்ட தினகரன் வெற்றி: அதிமுக வாதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று, 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கோப்புப் படம்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48306 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது.

7 முறைகள் ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றிய அதிமுக, சுயேச்சை வேட்பாளரும் அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்துள்ளது.

அதிமுகவின் இந்தத் தோல்வி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமக்கல் சுந்தரம் கூறுகையில், ''கடைசி நேரத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்ததுதான் தேர்தல் முடிவை மாற்றியுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.

''10,000 ஆயிரம் தருகிறோம் என்று கூறித்தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால்தான் வாக்குப்பதிவு நடந்த நாளில் 5 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு செய்ய கூட்டம் வாக்குச்சாவடியில் இருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.

அதிமுக வேட்பாளர் பணம் கொடுத்தாரா?

தினகரனின் ஆதரவாளர்கள் பொய் பிரசாரம் செய்து, மக்களை திசைதிருப்பியுள்ளனர். சில இடங்களில் இவ்வாறு பணம் தந்தவர்கள் பிடிபட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுந்தரம் எம்.பி.
படக்குறிப்பு, சுந்தரம் எம்.பி.

பணம் கொடுத்ததாக அதிமுக வேட்பளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதே என்று கேட்டதற்கு பதிலளித்த நாமக்கல் சுந்தரம், ''அதிமுக வேட்பாளர் எங்குமே பணம் கொடுக்கவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டு தவறு'' என்று சுந்தரம் மேலும் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் தோல்வி பற்றி குறிப்பிட்ட சுந்தரம், 2ஜி வழக்கின் தீர்ப்பு வாக்குப்பதிவு நடந்த நாளான 21-ஆம் தேதி வெளிவந்தாலும், திமுகவினர் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டதை மக்கள் நம்பவில்லை. அதனாலே தனது டெபாசிட்டை அக்கட்சி இழந்துள்ளது என்று தெரிவித்தார்.

சசிகலா இனி அதிமுகவினரால் ஏற்றுக் கொள்ளப்படுவாரா?

சசிகலாவின் வாரிசாக கருதப்படும் தினகரன் வெற்றி பெற்றதால், சசிகலா அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்று கேட்டதற்கு ''சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது'' என்று கூறினார்.

ஓர் இடைத்தேர்தலை வைத்து தினகரனை மக்கள் ஏற்றுக் கொண்டதாக பொருள் இல்லை என்று கூறிய சுந்தரம், ''அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலைமையில் உள்ள அணிதான் வெற்றி பெறும்'' என்று தெரிவித்தார்.

'10,000 ரூபாய் தருவதாக கூறி தினகரன் அணி வெற்றி பெற்றது'

பட மூலாதாரம், Getty Images

அதிமுக அரசு நிச்சயம் தனது முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யும் என்று தெரிவித்த நாமக்கல் சுந்தரம், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைப்பு நிச்சயம் கட்சிக்கு நன்மை பயக்கும் விஷயம்தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''அண்ணா, காமராஜர் போன்றோரே தோல்வியடைத்துள்ளனர். தலைவர்களின் தோல்விகள் பின்னர் வெற்றியாக மாறியுள்ளது. ஆகவே, இந்த ஒரு தோல்வியை வைத்து எந்த விஷயத்தையும் முடிவு செய்ய முடியாது'' என்று சுந்தரம் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, உலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :