You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒகி புயல்: கன்னியாகுமரியில் தொடரும் சோகம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதற்கிடையில் விவசாயிகள், தங்களுக்கு போதுமான இழப்பீடுகளைக் கோரி போராட்டங்களைத் துவங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்றவர்களில் இன்னும் 345 பேர் வீடு திரும்பவில்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் சஜ்ஜன்குமார் சவான், 13 வல்லங்களில் சென்ற 35 மீனவர்கள், 34 விசைப் படகுகளில் சென்ற 310 மீனவர்கள் என 345 பேர் இன்னும் கரை திரும்பவில்லையெனத் தெரியவந்திருப்பதாகக் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை புயல் தாக்கிய பிறகு, அம்மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வீடு திரும்பாதது கண்டுபிடிக்கப்பட்டது. 5ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 855 மீனவர்கள் காணவில்லையெனக் கூறப்பட்டது.
இதற்கிடையில் படிப்படியாக மீனவர்கள் கரைதிரும்பிவந்தனர். பல மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 2 மீனவர்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
தொடர்ந்து தேடுதல் பணிகள் மாவட்ட நிர்வாகத்தாலும் கடலோரக் காவல்படையாலும் நடத்தப்பட்டுவருவதாக கூறும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அனைவரும் கரை திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஆனால், காணாமல் போனதாக மாவட்ட நிர்வாகம் கூறும் எண்ணிக்கைக்கும் மீனவர்கள் கூறும் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்துவருகின்றன.
"இங்கிருந்து மீன் பிடிக்கச் செல்பவர்களைக் கணக்கெடுக்க சரியான முறைகள் இல்லையென்பது உண்மைதான். மானிய விலை டீசலைப் பெறுவதற்கான டோக்கனைப் பெறுபவர்கள் குறித்த விவரங்கள் நம்மிடம் இருக்கும்.
ஆனால், பல படகுகள் அவ்வாறு டோக்கன் பெறாமலேயே மீன் பிடிக்கச் செல்வார்கள். சிலர் இங்கு பதிவுசெய்துவிட்டு, கேரள கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச் செல்வார்கள். அதேபோல, எந்தப் படகில் எத்தனை பேர் செல்கிறார்கள் என்ற விவரத்தைக் கணிப்பதும் கடினமாக உள்ளது. ஆகவே, மீனவர் அமைப்புகள் கொடுக்கும் எண்ணிக்கை, வீடு வீடாகச் சென்று எடுத்த எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்" என்கிறார் சஜ்ஜன் குமார்.
ஒகி புயல் கன்னியாகுமரியை நெருங்குவது குறித்து முறையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் விடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டுவருகிறது.
"இது உண்மையல்ல. 29ஆம் தேதி எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடனேயே மீனவர்களுக்குத் தெரிவிக்கும் பணியைத் துவங்கிவிட்டோம். கடலுக்குச் சென்ற பலர் திரும்பிவிட்டனர். ஆனால், எவ்விதத்திலும் தொடர்புகொள்ள முடியாதவர்களே புயலில் சிக்கிக்கொண்டனர்" என்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் இரு நாட்களுக்கு முன்பாக தங்கள் போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுவதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த ஒக்கி புயலின் காரணமாக விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கான இழப்பீட்டை அதிகரித்துத் தர வேண்டுமென விவசாய அமைப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமையன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனால், நாகர்கோவில் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. மார்த்தாண்டம் பகுதியில் சில அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதற்கிடையில், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள், இழப்பீடுகளை ஒப்பிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
ஆனால், இதற்கும் தங்களுடைய போராட்டங்களுக்கும் சம்பந்தமில்லையென பிபிசியிடம் தெரிவித்தார் கோதையாறு நீர்ப்பாசனப் பகுதியின் சேர்மன் வின்ஸ் ஆண்டோ.
"தேசிய நெடுஞ்சாலைத் துறை மரங்களை அகற்றும்போது அளிப்பதற்கு இணையான இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டுமெனக் கோருகிறோம். ஒக்கி புயலால் 8,000 ஏக்கரில் ரப்பர் மரங்கள் அழிந்துள்ளன. 25,000 தென்னை மரங்கள் விழுந்துவிட்டன. 12,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 80 லட்சம் வாழை மரங்கள் வீழ்ந்துவிட்டன.
அதேபோல, வீடு இடிந்து விழுந்து, மின்சாரம் தாக்கி பல விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தர வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை" என்கிறார் வின்ஸ் ஆண்டோ.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்