You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எனது தாய்க்கும் தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்வேன்: கௌசல்யா
தமது கணவர் சங்கர் கௌரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தாய் உள்ளிட்ட மூன்று உறவினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, சங்கரின் மனைவி கௌசல்யா அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் விடுதலை அடைந்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கௌசல்யா கூறுகிறார்.
சங்கரின் கொலைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள அதேசமயத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கௌசல்யா திருப்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
"ஆணவக்கொலைகளை தடுக்கவும், கொலைகளுக்கு நியாயம் கிடைக்கவும் தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறையின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், கௌசல்யாவின் போராட்டத்தைப் பற்றி சாதிய அமைப்புகள் இழிவான கருத்துகளை பேசிவருவதாக எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.
''கௌசல்யாவைப் பற்றி சாதிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான கருத்துகளை சமூக வலைதளைங்களில் பதிவிடுகிறார்கள். இழிவான கருத்துகளை எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கௌசல்யாவுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் உள்ளது,'' என்று கூறினார்.
அவர் மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகவும், ஆணவ கொலைகள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கேட்டு பல மாதங்கள் ஆகியும், தமிழக அரசு அதை தாக்கல்செய்யவில்லை என்று கதிர் கூறினார்.
சாதி ஒழிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகக் கூறிய கௌசல்யா, ''சங்கரின் தம்பிகளுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு தேவையற்ற முறையில் விமர்சனம் செய்து, ஆபாசமாக கருத்துகளை எழுதும் அளவுக்கு சமூகத்தில் சாதிய நோய் முற்றிப்போய் இருக்கிறது. இதனால் தீர்ப்பு வந்த பிறகும்கூட எனக்கு பயம் உள்ளது. மேல்முறையீடு செய்து சங்கரின் கொலைக்கு நியாயம் கேட்பேன்,'' என்று கூறினார்.
சங்கர் தனிப்பயிற்சி மையம் ஒன்றை நடத்திவருவதாகவும், குழந்தைகள் மத்தியில் சாதி ஒழிப்பிற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவருவதாகவும் கௌசல்யா கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்