You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை”
ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் குழப்பம் தொடர்கிறது. இதற்கு, முறையாக கணிப்பதற்கான வழிகாட்டு முறைகள் இல்லாததே காரணம்?
மத்திய - மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்க வேண்டுமா? என்று கேட்டு நேயர்கள் தங்கள் கருத்துக்களை “வாதம் விவாதம்” பகுதியில் பதிவு செய்யலாம் என்று பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் கேட்டிருந்தோம்.
அவற்றில் நேயர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம். முதலில் ஃபேஸ்புக் நேயர்களின் கருத்துக்களை பார்க்கலாம்.
நான்கு பேராக இந்த கடுமையான புயலில் சிக்கி இருவர் தன்னுடைய கண்முன் இறந்ததை பார்த்தாக எழுதியுள்ள தமிழ்வானன் (Tamil Va Nan), “எந்த எலெக்ட்ரானிக் கருவிகளும் இல்லாமலே கடலின் தன்மையை அறிந்து டன் கணக்கில் சுறா மீன்களை பிடித்து அந்நிய செலாவணியை ஈட்டுபவர்களுக்கு இந்த அரசுகள் ஒரு தனி அமைச்சகம், ஒரு தனித்தொகுதி, ஒரு தனி மீன் வள சட்டம், இதுவரை இயற்றாததது ஏன்??? இனிமேலாவது நடவடிக்கை எடுங்கள்” என்று ஆலோசனை அளித்துள்ளார்.
சக்தி சரவணன் டி என்ற நேயர் கடற்கரையை ஒட்டிய கடற் பயணத்தோடு நில்லாமல் பெருங்கடலின் நடுவே கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி கடற் பயணம் செய்து கிரேக்கம், உரோமம், பாரசீகம், எகிப்து, சீனம், கிழக்கு தீவுகளில் வணிகம் செய்த தமிழர்க்கு மூன்று அரசு (சேர, சோழ, பாண்டிய) வீரர்கள் உள்ளடக்கிய பொதுக் கடற்படையை கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வலிமையான கடற்படை, ராணுவபடை கொண்ட "டிஜிட்டல் இந்தியா", தொடர்பு எல்லைக்கு உட்பட்ட தொலைவு செல்லும் மீனவர்க்குச் சரியான வானிலை ஆலோசனை வழங்காமலும், புயலில் சிக்கியவரை பத்து நாட்களாகியும் மீட்காமலும் தட்டிக் கழிப்பதன் பின்னால் மீனவரைக் கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தி பெரும் வணிகத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆயத்தம் செய்வதாகவே தோன்றுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
வெற்றி வெற்றி என்ற நேயர், “எண்ணிக்கையை கணிப்பதற்க்கு வழிகாட்டு முறைகள் இருக்கின்றன. அதிகாரிகள் சோம்பேறிகளாக இருப்பதால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்று தனது கருத்தை கூறுகிறார்.
பால குமரன், “மத்திய மாநில அரசுகள் எங்களை, மீனவ சொந்தங்களை காக்க தவறியதற்காக வெட்கி தலைகுனிந்து மாண்டு இருக்க வேண்டும். 2000 ,3000 கோடி செலவு பண்ணி செயற்கைகோள் அனுப்பும் நாட்டில் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களை காக்க தவறியது ஏன் ? அன்டை மாநிலமான கேரளாவுக்கு இருக்கும் அக்கறை ஏன் தமிழக அரசுக்கு இல்லாமல் போனது ? தென் கடைக்கோடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் காணாமல் தவிக்கும் இந்த நேரத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அவ்வளவு முக்கியமானதாக ஆகிவிட்டதா? மத்திய அரசும் மாநில அரசும் துன்பத்தில் இருக்கும் மீனவ சொந்தங்களை காக்க உதவாது என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை” என்கிறார்.
ஏன் அலட்சியம் என்பதற்கான காரணத்தை சரோஜா பாலசுப்பிரமணியன், “இறந்த ஏழை மீனவர்களால் அரசியல்வாதிகளுக்கு ஆகப் போவது எதுவுமில்லை. அதுதான் அலட்சியம்” என்கிறார்.
அமலுல்லா அஜ் என்பவரோ, “அவுட் ஆப் சைட் ...... அவுட் ஆப் மைன்ட் ....... ஆட்சியாளர்களின் பார்வை படும்படியாக இல்லை...அதனால் அவர்களின் மனதிலும் இல்லை இந்த மீனவர்கள் .... என்று குறிப்பிட்ள்ளார்.
டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிட்டுள்ள நேயர்களின் கருத்துக்களை இனி பார்க்கலாமா!
புயலை கணித்து சொல்வதில் மத்திய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததே இந்தப் பேரிடர் நிலை ஏற்பட காரணம் என்கிறார் ராஜசேகர் குறிச்சி.
ஆதாரை போன்ற நடைமுறையை பயன்படுத்தலாமே என்பது கந்த விஷ்ணுவின் ஆலோசனை
“அரசிடம் கணக்கில்லாதது அநியாயமுன்னு வச்சிக்குவோம். இதற்குள் மீனவக்கிராமம் ஒவ்வொன்றிலும் எத்தனை மீனவர் குறிப்பிட்டநாளில் மீன் பிடிக்க போனார்கள் எத்தனை பேர் திரும்பலை. எத்தனை பேர் மீட்கபட்டு உள்ளார்கள் எத்தனை பேர் உடல் கிடைத்தது என மீனவ சங்கங்கள்/பாதர்கள் தெரிவிக்கலாமே. எங்கேயோ இடிக்குது” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார் சுச்பி என்ற நேயர்.
மணிகண்டன் என்ற நேயர் மீனவர் வருகையை பதிவு செய்து கடற்படைக்கு கொடுக்கும் வழக்கம் உதவும் என்கிறார்.
“இரண்டு அரசுகளும் ஒருங்கிணைஞ்சதாலதான் மீனவனை கடலில் சாக விட்டுவிட்டார்கள்” என்பது ‘கனல் பறவை‘ என்ற பெயரில் பதிவிட்டுள்ள நேயரின் கருத்தாக உள்ளது.
மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை என்பது தான் உண்மை என்று ‘நான் பொல்லாதவன்‘ (@mepollathavan) என்ற பெயரில் பதிவிட்டுள்ள நேயர் கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
- 40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை
- "ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்"
- 'அருவி' : யாரைக் குறிவைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்?
- கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை எவை? 7 சுவாரஸ்ய தகவல்கள்
- பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்