அரசியல் சார்ந்த திரைப்படமா 'அருவி' - இயக்குநர் விளக்கம்

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெரும்பாலோனோர் புதியவர்கள் மற்றும் இளைஞர்களே.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வெளியாகும் இத்திரைப்படம் குறித்தும், அருவி குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் பிபிசி தமிழிடம் இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு உரையாடினார்.

அருவி ஒரு சமூக அரசியல் சார்ந்த படமா அல்லது பொழுதுபோக்கு திரைப்படமா என்று கேட்டதற்கு, ''அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு ஜனரஞ்சக திரைப்படம்தான் அருவி. மக்கள் சார்ந்த அரசியல் மட்டுமே இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

''ஆனால், இது அரசியல் சார்ந்த அல்லது நம்மை ஆள்பவர்களை பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களைதான் இந்த திரைப்படத்தில் அலசியுள்ளோம்'' என்று அருண் மேலும் கூறினார்.

அருவி திரைப்பட போஸ்டர் சர்ச்சை

அருவி திரைப்பட போஸ்டர் வெளியான போது எழுந்த சர்ச்சை பற்றி கேட்டதற்கு பதிலளித்த அருண், ''படத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிக்கொணரும் வகையில்தான் போஸ்டர் உருவாக்கப்பட்டது. படம் வெளியானவுடன், அதை பார்த்தவர்கள்தான் படத்தின் கருவை போஸ்டரோடு தொடர்பு கொள்ள முடியும். அப்போதுதான் முழுமையாக புரியும்'' என்று தெரிவித்தார்.

இது அன்பு குறித்து பேசும் படம். பிரசாரப் படமல்ல என்று அருவி குறித்து அருண், மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச பனோரமா பிரிவு விருது உள்பட பல விருதுகளை அருவி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ளது.

இந்நிலையில், அருவி மக்களுக்காக எடுக்கப்பட்ட படமா, விருதுக்காக எடுக்கப்பட்ட படமா என்று கேட்டதற்கு, ''அருவி மக்களுக்கான திரைப்படம்தான். மூன்றாவது நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி இந்த திரைப்படம் பேசுவதால் இந்த திரைப்படம் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றது'' என்று தெரிவித்தார்.

திரைப்படத்தின் சில வசனங்கள் இன்றைய நடைமுறையை, இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று கூறிய அருண், ''திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் முழு திரைப்படம் ஆகிய இரண்டும் வெவ்வேறு அனுபவங்களை தரும். முழுப்படமும் பார்த்தால்தான் சொல்ல வந்த கருத்து தெளிவாக புரியும்'' என்று தெரிவித்தார்.

பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார்.

''பிரதான கதாபாத்திரமான அருவியை தவிர 25 கதாபாத்திரங்களுக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் உள்ளது. படத்தேர்வுக்கு 7 அல்லது 8 மாதங்கள் ஆனது. அனுபவம் வாய்ந்த நடிகர்களை தேடாமல் கதாபாத்திரத்துக்கு பொருந்தும் எளிய மனிதர்களையே நாங்கள் தேர்வு செய்தோம்'' என்று அருண் குறிப்பிட்டார்.

''மக்களை மனிதில் வைத்து எழுதப்பட்டது அருவி திரைப்படம். இது மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும்'' என்று அருண் நம்பிக்கை தெரிவித்தார்.

அருவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?

திரைப்பட பின்னணி எதுவும் இல்லாத அதிதி பாலன், இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அருவி திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பிபிசி தமிழிடம் அதிதி பாலன் கூறுகையில், ''இந்த படத்தின் நடிகர், நடிகை தேர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் வந்த தகவல் மூலம் அறிந்து நான் விண்ணப்பித்தேன். அதன் பிறகு டெஸ்ட் ஷூட் நடந்தது. வசன ஒத்திகையிலும் தேர்வு பெற்று இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்'' என்று தெரிவித்தார்.

''இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பலரும் புதியவர்கள். அதனால் மூன்று மாதங்களாக இந்த திரைப்படத்தின் வசன மற்றும் காட்சி ஒத்திகை நடந்தது. அதனால் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாகவே உணர்ந்தோம்'' என்று அதிதி தெரிவித்தார்.

அருவி எப்படிப்பட்டவள்?

அன்பை பகிர்ந்து கொள்ளும் கதாபாத்திரம்தான் அருவி என்று தெரிவித்த அதிதி, படத்தின் டிரெய்லரில் அருவி ஆவேசமாக தோன்றுவார். ஆனால், முழுப்படத்தையும் பார்த்தால்தான் அந்த கோபத்தின் அர்த்தம் புரியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

முதல் திரைப்படத்திலேயே தனக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அதிதி, ''இனிவரும் திரைப்படங்களில் வெவ்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமுள்ளது'' என்று தெரிவித்தார்.

பார்வையாளர்களை ஈர்க்கும் திரைப்படமா அருவி?

அருவி திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திரைப்பட விமர்சகரான சரா சுப்ரமணியம், ''இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். ஆனால், இது விருதுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம் என்று ஒரு தவறான பார்வை உள்ளது'' என்று கூறினார்.

தனி மனித உணர்ச்சிகளுக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கியத்துவம் தந்துள்ளது என்று குறிப்பிட்ட சரா, ''படத்தின் ஆரம்பம் முதல் தொடர்ந்து பார்வையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஒரு முழுமையான அனுபவத்தை இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு தரும்'' என்று தெரிவித்தார்.

''ஒட்டுமொத்த சமூகத்தின் கோபம் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இந்த கோபத்தை தங்களுக்கு நெருக்கமாக உணர்வர்'' என்று அவர் கூறினார்.

'நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை'

''அருவி போல பல நல்ல திரைப்படங்கள் தமிழில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த போதிலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் வசதிகள் இல்லை. இதில் பல சிக்கல்கள் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''பல நல்ல திரைப்படங்களை பொது மக்கள் பார்ப்பதற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. திரைப்பட ஆர்வலர்கள் கொண்டாடும் பல திரைப்படங்களும் மக்களை சென்றடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம் இந்த நிலை மாறினால்தான் மக்கள் நல்ல திரைப்படங்களை காண இயலும்'' என்று சரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :