You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா?
மின்னணு பணமான பிட்காயின் வளர்ந்த நாடுகளை விட அதிக மின்சாரம் பயன்படுத்துகிறது என்ற கூற்று சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டது. எனவே, பிபிசியின் உண்மையை கண்டறியும் அணியானது அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அது உண்மைதானா? என்பதை ஆராய்ந்தது.
பிட்காயின் என்பது 2009 ஆம் ஆண்டு முதல் இருந்தபோதிலும், மின்னணு நாணயம் அல்லது கிரிப்டோகரன்சியானது, சமீபத்தில் அதில் ஏற்பட்ட மதிப்புயர்வின் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது.
உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தாள்கள் அல்லது நாணயங்களைப் போலல்லாமல், பிட்காயின் அரசாங்கங்களாலும் அல்லது பாரம்பரிய வங்கிகளாலும் அச்சிடப்படாது, பெருமளவில் ஆன்லைனையே இருப்பிடமாக கொண்டுள்ளது.
"மைனிங்" என்று அழைக்கப்படும் ஒரு சிக்கலான செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு நாளும் 3,600 புதிய பிட்காயின்கள் உருவாக்கப்படுகிறது. சிறப்பு மென்பொருளால் கணித சமன்பாடுகளை செயல்படுத்தி கணினிகளின் மூலம் செயற்படுத்தி பிட்காயின் உருவாக்கப்படுகிறது.
இந்த சமன்பாடுகளை செயலாக்கும் ஒரு சில கணினிகளை தவிர, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் பிட்காயின்களின் செயல்பாட்டிற்காக இயங்கி வருகிறது. மேலும், அதற்கு அதிகளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது.
பிட்காயின்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மைனிங் செயற்பாட்டின் மூலம் பிட்காயின்களை பெறுவதற்காக துறை சார்பற்றவர்களும், தொழில்முறையில் இதை மேற்கொள்பவர்களும் புதிய கணினிகளையும், இயந்திரங்களையும் பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர்.
மின்னணு செயற்பாட்டை அடிப்படையாக கொண்ட பிட்காயின்களை உருவாக்குவதற்கும், அதை நிர்வகிப்பதற்கும் உண்மையிலேயே எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அறிவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர்.
'டென்மார்க் பயன்படுத்தும் அளவுக்கு ஈடாக"
திகைப்பிற்கு இடமின்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிட்காயின்களின் எரிசக்தி பயன்பாட்டை பற்றிய கூற்றுகள் வளம் வர ஆரம்பித்தன.
இதுபோன்ற ஒப்பீடுகள் சரியானவையா?
பிட்காயின் போன்ற மின்னணு நாணயங்களின் எரிசக்தி பயன்பாட்டின் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை என்பதால், இதற்கான கூறிய பதிலை கூறுவதென்பது மிகவும் கடினமாகும்.
மின்னணு நாணயத்தின் மதிப்பைக் காட்டிலும் வேறு எந்தவொரு கண்ணோட்டத்தையும் சரிபார்ப்பதென்பது மிகவும் கடினமானது. ஏனெனில், பிட்காயின்கள் செயல்படுவதற்கு மூலக் காரணியாக உள்ள கணினிகள் ஒன்றுடொன்று பிண்ணிப் பிணைந்து இணையத்திலேயே செயல்படுகிறது.
செயல்பாட்டு செலவுகள்
ஆனால், இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு பலர் முயற்சித்தனர். பொதுவான மைனிங் தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறிப்புக்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் கிரிப்டோகரன்சி வலைத்தளமான டிஜிகோனிஸ்ட் அளிக்கும் தரவுகளை கொண்டே பிட்காயின்களின் எரிசக்தி பயன்பாடு தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
மைனிங் மூலம் திரட்டப்படும் வருவாயை ஒரு தொடக்க புள்ளியாக எடுத்துக் கொண்டு, அதன் செயல்பாடு சார்ந்த விடயங்களுக்காக செலவிடப்படும் தொகையுடன் அதை வகுக்கும்போது எரிசக்தி பயன்பாட்டுக்காக செலவிடப்படும் தொகை மற்றும் எரிசக்தியின் அளவுக்கான சராசரி கிடைக்கிறது.
இந்த மதிப்பீட்டு முறையின்படி, பிட்காயின்களின் நிகழாண்டு எரிசக்தி பயன்பாடு கிட்டத்தட்ட 32.56 டெராவாட் மணிநேரங்கள் (TWh) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறுதான் மற்ற நாடுகளுடனான ஒப்பீடும் செய்யப்படுகிறது.
உதாரணத்திற்கு யூரோஸ்டாட்டிடமிருந்து பெறப்பட்ட தரவின்படி 2015ல் டென்மார்க் 30.7 TWh எரிசக்தியையும், அயர்லாந்து 25.07 TWh எரிசக்தியையும் உபயோகித்துள்ளது.
எனவே, இம்மேற்கண்ட முறையை நீங்கள் பயன்படுத்தினால், ட்விட்டரில் நீங்கள் பார்த்த ஒப்பீடுகள் பரந்தளவில் சரியானவை என்று கூறலாம்.
ஆனால், இம்முறையானது ஊகங்களையும், மதிப்பீடுகளையும் பயன்படுத்துவதால், டிஜிகோனிஸ்ட் தெரிவிக்கும் விடயங்களுக்கு விமர்சகர்கள் இருக்கிறாரகள் என்பது ஆச்சரியமல்ல.
ஆய்வாளரான மார்க் பெவன்ட், இந்த முறை தவறானது என்று வாதிடுகிறார். ஏனெனில் மைனிங் செய்பவர்கள் பயன்படுத்தும் புதிய மற்றும் அதிக சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இதுபோன்ற மதிப்பீட்டை செய்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், "மைனிங் மூலம் கிடைக்கும் வருவாயில் 60% எரிசக்தி பயன்பாட்டுக்காக செலவிடப்படுவதாக கூறப்படும் ஊகம் தவறானதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அக்டோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், பிட் காயினின் மதிப்பீட்டு சந்தை மூலதன மதிப்பானது கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் ஈபே போன்ற நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்புகளை கடந்துவிட்டது. இந்நிலையானது, விரைவில் கிரிப்டோகரன்சிகள் ஒரு ஒட்டுமொத்த நாட்டுடன் ஒப்பீடு செய்யுமளவுக்கு செல்லுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு அல்லது பொருள்சார்ந்த தயாரிப்பாக இருந்தாலும், ஒரு தயாரிப்பின் எதிர்காலமென்பது அது எவ்வளவு குறைவான தொகையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பொறுத்தே உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த பிட்காயின்களின் எண்ணிக்கை 16.7 மில்லியனாக உள்ளது. மேலும், இது தனது உச்சபட்ச எண்ணிக்கையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 21 மில்லியனை எட்டும் வரை தொடரும்.
மின்சாரம் மலிவானதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் இருக்கும் வரை, தொழில்நுட்பம் உடனடியாக பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. மேலும் மின்னணு நாணயத்தின் மதிப்பு, உற்பத்தி செலவுகளை சமாளிப்பதற்கு போதுமானதாக உள்ளது. பிட்காயின் அதன் அதிகபட்ச எண்ணிக்கையான 21 மில்லியனை அடையும் வரை தொடர்ந்து தலைப்பு செய்தியை ஆக்கிரமிக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்