தமிழ்நாடு: நதிகளின் நீர்மட்டம் உயரும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மத்திய நீர்வள ஆணையத்தின், வெள்ளக்கணிப்பு இயக்ககம் எச்சரித்துள்ளது.
ஒக்கி புயலின் காரணமாக கேரளத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரையில், வங்கக்கடலில், டிசம்பர் 2ஆம் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படும், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக டிசம்பர் 2, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால், வடதமிழகம் மற்றும் ஆந்திராவில் கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும்.
இந்த மழையின் காரணமாக, தமிழகம், கேரளா மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள நதிகளின் நீரமட்டம் உயரும் என மத்திய நீர்வள ஆணையத்தின், வெள்ளக்கணிப்பு இயக்ககம் எச்சரித்துள்ளது.
மேற்கு நோக்கி பாயும் தமிழகம் மற்றும் கேரள நதிகள்:

தென் கேரளாவில் உள்ள ,மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பந்தனந்திட்டா, இடுக்கி, கோட்டையம், ஆலப்புழா மற்றும் எர்னாகுளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, நீர் மட்டம் உயரும்.
காவிரி மற்றும் கன்னியாகுமாரிக்கு இடையே கிழக்கு நோக்கி பாயும் நதிகள்:
தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரையில், அடுத்த 24 மணிநேரங்களுக்கு அதிக வெள்ளத்திற்கான சூழல் நிலவும், மழை குறையும் போது, நீர்மட்டம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் பெய்யும் மழையின் காரணமாக, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளில் அதிக நீர்வரத்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 2-3 நாட்களுக்கு, நெல்லை மற்றும் தூத்துக்குடி வழியாக பாயும், தாமிரபரணி நதியின் நீரோட்டம் அதிகளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வைகை நதியில் நீரோட்டம் உயரும் என்றும், வைகை அணையில், நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும், அணையை திறந்துவிடுவதற்கான தேவை உடனடியாக இருக்காது என்றும் வெள்ளக்கணிப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












