முகாபே பதவி விலக வேண்டும்: பதவி நீக்கப்பட்ட துணை அதிபர்
எமர்சன் முனங்காக்வா. ஜிம்பாப்வேயின் துணை அதிபராக இருந்த இவரை அதிபர் ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்துதான் அந்நாட்டின் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. தற்போது முகாபேயின் பதவி ஊசலாட்டத்தில் உள்ள நிலையில், அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முனங்காக்வா.

பட மூலாதாரம், AFP
தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதை அறிந்தவுடன் இரண்டு வாரங்கள் முன் தாம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், தம் உயிருக்கு பாதுகாப்பு உறுதி ஏற்படும்வரை நாடு திரும்பப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரகசியமான இடத்தில் இருந்து குரல் கொடுத்துள்ள முனங்காக்வா மக்களின் அறைகூவலுக்கு மதிப்பளித்து முகாபே பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் இன்று, செவ்வாய்க்கிழமை, தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரது பதவி பறிக்கப்படும் என்றும் அவரது கட்சியான சானு-பி.எஃப் கட்சி தெரிவித்துள்ளது.
அவர் பதவி விலக கட்சி விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது மனைவி கிரேஸ் முகாபேவை 'அரசியல் சாசன அதிகாரத்தைக் கைப்பற்ற' அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளாகியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறிய, முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனங்காக்வாவை முகாபே சந்திப்பார் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனங்காக்வா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அரச நிர்வாகத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த ராணுவம், முகாபேவை வீட்டுச் சிறையில் அடைத்தது.
பதவி விலகுமாறு கடுமையாக அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முகாபேவுடன் இணைந்து வருங்காலத்துக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
பதவி விலக மறுத்துள்ள முகாபே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது கட்சியின் மாநாட்டுக்கு தலைமை தாங்கப்போவதாகவும் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முறைகேட்டில் ஈடுபடுதல், அரசியலமைப்பை மீறி செயல்படுதல், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவும், நிலைநாட்டவும், பாதுகாக்கவும் தவறுதல், அரசு நிர்வாகம் செய்யத் திறன் இன்றி இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஒருவரை பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்துக்கு ஜிம்பாப்வே சட்டம் அனுமதி அளிக்கிறது.
"அவர் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டத் தவறிவிட்டார். மாகாண அவைகளுக்கு ஏற்கனவே தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், வெற்றிபெற்றவர்கள் யாரும் இன்னும் பதவியில் அமர்த்தப்படவில்லை," என்று நாடாளுமன்ற உறுப்பினர் பால் மனங்காக்வா கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தின் இரு அவைகளான தேசிய சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றில் முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.
அந்த வாக்கெடுப்பில் 50%-க்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அக்குழு அதிபரை விசாரணை செய்யும்.
அந்தக் கூட்டுக் குழு அவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரை செய்தால், மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றி அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
இதே வழிமுறைகளைப் பின்பற்றி முகாபேவை பதவியில் இருந்து நீக்க முயன்று, கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன. ஆனால், முகாபே தற்போது தனது சொந்தக் கட்சியினரின் ஆதரவையே இழந்துள்ளதால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் இப்போது சாத்தியமான ஒன்றாக உள்ளது.
அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அந்தப் பொறுப்புக்கு துணை அதிபர் வருவார். பதவி நீக்கம் செய்யப்பட்ட முனங்காக்வா அப்பதவிக்கு வர வேண்டும் என்று ராணுவம் விரும்புகிறது.
அவர் முகாபேவால் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு, கிரேஸ் முகாபேவின் ஆதரவாளரான பெல்லெகாசேலம் போக்கோ அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
முனங்காக்வா மீண்டும் துணை அதிபர் பொறுப்பில் அமர்த்தப்படுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. முகாபே உடனான அவரின் பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













