நடிகர் விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்டது ஏன்: எச்.ராஜா பிரத்யேகப் பேட்டி

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் குறித்து பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்த கருத்துகளும், நடிகர் விஜயின் மதத்தைச் சுட்டிக்காட்டி அவர் பேசியதும் பலத்த விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிவரும் வகையில் அவர் பேசிவருவது குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் பிபிசி தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பேட்டியளித்தார் எச். ராஜா. அந்தப் பேட்டியிலிருந்து:

கே. மெர்சல் திரைப்படம் குறித்தும் அதில் இடம்பெற்ற வசனங்கள் குறித்தும் சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட கடுமையான கருத்துகள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஒரு திரைப்படத்தை தேசியக் கட்சி ஒன்று இவ்வளவு பெரிய விவாதமாக்க வேண்டுமா?

ப. நான் மெர்சல் படத்தின் கதையைப் பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ பேசவில்லை. ஜி.எஸ்.டியைப் பற்றி தவறான புள்ளிவிவரங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டேன். சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் இல்லை. அங்கு ஒவ்வொருவரும் வருமானத்தில் 10 சதவீதம் மருத்துவத்திற்காக செலுத்த வேண்டும்.

ஆனால், இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் இலவசம். அதைச் சுட்டிக்காட்டினேன். சாராயத்திற்கு வரி இல்லை என்கிறார். அது தவறு என்று சுட்டிக்காட்டினேன். இதில் என்ன தவறு?

கே. சினிமாவில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் மக்களே கேலி செய்வார்கள், புறக்கணிப்பார்கள். ஒரு அரசியல் கட்சி அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேணடுமா? காட்சிகளை அகற்ற வேண்டுமென்பது வரை தமிழக பா.ஜ.க. கோரியது.

ப. ஒரு தப்பான கருத்து அதில் இருக்க வேண்டாமென தமிழிசை சவுந்தரராஜன் அப்படி கோரியிருக்கலாம். இந்தப் படத்தில் 'தமிழன் ஆள வேண்டுமென' பாட்டு வருகிறது. அப்ப, ஏதோ ஒரு அரசியல் செய்தியை விஜய் சொல்ல விரும்பிகிறார் என்பது புரிகிறது. அப்படிப்பட்ட படத்தில் பொய்யான தகவல்கள் இருக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு பொய்யைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும்போது, அதைச் சுட்டிக்காட்ட எனக்கும் உரிமை இருக்கிறது.

கே. ஆனால், இதற்காக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் ஒரு அரசியல் கட்சி கோர வேண்டுமா?

ப. இதற்கு முன்பாக விஜய் தன்னுடைய துப்பாக்கி படத்தில் பல காட்சிகளை அவரே நீக்கியிருக்கிறார். கமல் தன் விஸ்வரூபம் படத்தில் 15, 16 வெட்டுக்களை அவரே செய்திருக்கிறார். 'இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்' படம் எங்கோ வெளியானதற்காக இங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். 'டாவின் சி கோட்' படத்தை மத்திய அரசும் தி.மு.க. அரசும் தடைசெய்யவில்லையா?

கே. மதம் தொடர்பான படத்தில், புண்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோருவதற்கும் சாதாரணமாக அரசை விமர்சித்ததற்காக காட்சிகளை நீக்க வேண்டுமெனக் கோருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ப. ஆனால், அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் பொய் இருக்கிறதே.. அதற்காகத்தான் சுட்டிக்காட்டினோம். நாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்து பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால், இதை மேலும் வளர்க்க விரும்பவில்லை.

கே. நடிகர் விஜய்யை குறிப்பிடும்போது, ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு, அவருடைய மதத்தை சுட்டிக்காட்டினீர்கள்.

ப. அவருடைய பெயரைத்தானே சொன்னேன். அவருடைய அதிகாரபூர்வ ஆவணங்கள் எல்லாவற்றிலும் அந்தப் பெயர்தானே இருக்கிறது? அதனால், ஜோசப் விஜய்யின் படத்தில் இப்படி இருக்கிறது என்று சொன்னேன்.

கே. அவருடைய வாக்காளர் அட்டையை எடுத்து வெளியிட்டு, Truth is Bitter என்று எதற்கு சொன்னீர்கள்?

ப. பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர் போன்றவர்கள் எல்லாம், இதில் நான் மதத்தைக்கொண்டு வந்து உண்மையில்லாததைச் சொன்னேன் என்று கூறியதால், சமூக வலைதளங்களில் இருந்ததை எடுத்துப் பகிர்ந்தேன். நான் சுட்டிக்காட்டியது ஊடகங்களுக்குத்தானே தவிர விஜய்க்கு அல்ல. எச். ராஜா என்ற என் பெயரைக்கூட மாற்றிச் சொல்கிறார்கள்.

கே. உங்களுடைய பெயர் ஹரிஹர ராஜா சர்மா என சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ப. (குறுக்கிட்டு மறுக்கிறார். வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்காட்டுகிறார்) என் பெயர் எச். ராஜாதான். விக்கிபீடியா என்ற இணைய தளத்தில் பா.ஜ.க. தலைவர்களின் தகவல்களில் மிக மோசமான வார்த்தைகளை சேர்க்கிறார்கள். அப்படி நடந்ததுதான் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இதோ இருக்கிறது. இதில் எச். ராஜா என்றுதான் இருக்கிறது. விக்கிபீடியாவில் நான் பிஹாரைச் சேர்ந்தவர் என்று எழுதுகிறார்கள்.

சிலர் நான் டாக்டர் ஹெட்கேவாரின் சொந்தக்காரர் என்கிறார்கள். அவர்தான் என் தகப்பனாரை இங்கே அனுப்பி தமிழ் கற்றுக்கொண்டு ஆர்.எஸ்.எஸை ஆரம்பிக்கச் சொன்னார் என்கிறார்கள்.

இதெல்லாம் என்ன முட்டாள்தனம்? நான் பல தடவை தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். எல்லா வேட்பாளர் பட்டியலிலும் எனது பெயர் எச். ராஜா என்றுதானே இடம்பெற்றிருக்கிறது? இவ்வளவுக்கு அப்புறமும் டிவி டாக் ஷோக்களிலும் இம்மாதிரி என் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். இப்படிச் சொல்லும்முன் சரிபார்க்க வேண்டாமா?

கே. உங்களுடைய மூதாதையர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையா?

ப. நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரமாங்குடியைச் சேர்ந்தவன். அங்கிருந்து 3 கி.மீயில் உள்ள மெலட்டூரில் பிறந்தவன். நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு இருப்பவர்கள். வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுங்கள். உ.வே.சா, பாரதி ஆகியோரை தமிழர் இல்லை என சொல்லும் முட்டாள்கள் நிறைந்த மாநிலம் இது. இந்த மாநிலத்தில் அப்படி உளறல்கள் இருக்கத்தான் செய்யும்.

கே. மெர்சல் திரைப்படம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு அடுத்த நாள் ஒரு தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேசும்போது, கிறிஸ்தவர்கள் தமிழர்களே இல்லை என்று சொன்னீர்களே, அது சரியா?

ப. நீங்க கிராமத்தில் போய் பேசுங்க. இங்க மீடியால இருக்க மேட்டுக்குடிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது. நான் கிராமத்தான். ஊரில் உள்ள கிறிஸ்தவர்களைக் கேட்டால், அவர்கள் தங்களை வேதகாரங்க என்பார்கள். ஆரம்பத்தில் எனக்குக்கூட ஆச்சரியமாக இருந்தது.

கே. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 12,000 கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டிருப்பதாகச் சொன்னீர்கள். நீங்கள் எந்தப் புள்ளிவிவரத்தை அடிப்படையாக வைத்து இதைச் சொன்னீர்கள்?

ப. நான் தகவல் சேகரித்ததில், அனுமதி வாங்கி அத்தனை தேவாலயங்கள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கோவில்கள் கட்டுவது மிகக் குறைவு. இதைப் போய் ஒரு விஷயமாக படத்தில் சொல்ல வேண்டுமா? எங்காவது ஒரு இடத்தில் சர்ச் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்று நான் சொல்லியிருந்தால் அது பெரிய பிரச்சனை ஆகியிருக்காதா?

கே. நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 12,000 தேவாலயம் என்று சொல்கிறீர்கள். தமிழகத்தில் சுமார் 44 லட்சம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அப்படியானால், சுமார் 350 கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவாலயத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டிவிட்டார்களா?

ப. ஒரு பின்கோடிற்கு ஒரு தேவாலயம் கட்ட வேண்டும் என்பது, அவர்கள் கொள்கை முடிவு. நான் அதை எதிர்க்கவில்லை. ஒரு தகவலாகச் சொன்னேன். விஜய் கோவில் என்று சொன்னதால் இதைச் சுட்டிக்காட்டினேன். அந்தப் படத்தில் இன்னும் பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். "சமூக சேவை செய்ய நீ என்ன மதர் தெரஸாவா" என்கிறார்கள். அந்த மதத்தில் மட்டும்தான் சமூக சேவை செய்கிறார்களா என்று கேட்டால் தப்பில்லையே.. ஏன், ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல சேவை செய்கிறாயா என்று கேட்கலாமே?

கே. தமிழகத்தில் எப்போதுமே ஒரு சர்ச்சையை உருவாக்கும் நபராக இருக்கிறீர்கள். கரடு முரடாகப் பேசுகிறீர்கள்?

ப. சோனியா காந்தியும் கருணாநிதியும் பல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் பேசியது கரடுமுரடாக இல்லையா? அதற்கு மாறான கருத்தை நான் சொன்னால் உடனே கரடுமுரடாகப் பேசுவதாகச் சொல்வதா?

கே. நேற்றுக்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே இருக்கக்கூடாது என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறீர்கள்.

ப. திருமாவளவன் எப்போதுமே மோசமாகத்தான் பேசிவருகிறார். கரூரில் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்திற்கு ஏன் உருட்டுக்கட்டையுடன் வி.சி.க. ஆட்கள் வருகிறார்கள். அது ரவுடித்தனம் இல்லையா? தமிழிசையை தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். ஆகவே அப்படிப்பட்ட கட்சி இருக்கக்கூடாது என்று சொன்னேன். கிருஷ்ணசாமியும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக கட்சி நடத்துகிறார். அவர் இப்படியா பேசுகிறார்?

கே. பா.ஜ.க. தன்னை இழுக்க முயற்சித்தது. அது நடக்காததால் தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடக்கிறது என்கிறார் திருமாவளவன்.

ப. திருமாவளவனை பல முறை சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அவரை பா.ஜ.கவிற்கு வரும்படி அழைத்ததில்லை. அழைத்தவர்கள் பெயரை அவர் சொல்லட்டும்.

கே. பா.ஜ.கவிற்கு அழைத்ததாக அவர் சொல்லவில்லை. அரசியல் ரீதியான உடன்பாட்டிற்கு அவரை பா.ஜ.க. அழைக்கவில்லையா?

ப. நாங்கள் 2001ல் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது, அவரும் ஓரிடத்தில் நின்றிருக்கலாம். ஆனால், கூட்டணிக்கு வாருங்கள் என்று எனக்குத் தெரிந்து அழைக்கவில்லை.

கே. நீங்கள் சற்று முன்பு சுட்டிக்காட்டியபடி, திரு. கிருஷ்ணசாமி சமீப காலமாக பா.ஜ.கவின் கருத்துக்களை எதிரொலிப்பதைப் போலவே பேசுகிறார். அப்படித்தான் திருமாவளவனும் இருக்க வேண்டுமென விரும்பினீர்களா?

ப. அரசியல் நடத்தையில் அவரைப் போல இருக்க வேண்டும் என்று சொன்னேன். அவர்களுக்கு எதிர் கருத்து இருக்கட்டும். பா.ஜ.கவுக்கு எதிரான கருத்தே இருக்கட்டும். ஆனால், வன்முறையில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? கரூரில் ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் 6 பேர் உருளைக் கட்டையோடு வரலாமா? பதிலுக்கு நாங்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆனால், நாங்கள் அப்படி இறங்க மாட்டோம்.

கே. தமிழகத்தில் வளர நினைக்கும் பா.ஜ.க., தமிழக மக்களின் பொதுக் கருத்துக்கு எதிராகவே கருத்துக்களை தெரிவிக்கிறது; செயல்படுகிறது என்ற விமர்சனம் இருக்கிறது..

ப. தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தத்தின் வேர் வெட்டப்பட வேண்டும். அதைச் செய்யாமல் மாற்றம் கொண்டுவர முடியாது. மக்களிடம் பா.ஜ,கவுக்கு ஆதரவு கூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்களில் பிரிவினைவாதப் போக்குதான் தமிழர் நலன் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. அதனால், அவர்கள் victimo syndrome based on past injury என்பதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மீத்தேன், நெடுவாசல் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்தது காங்கிரசும் தி.மு.கவும். ஆனால், அதை நிறுத்தியது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. வளர்வதைப் பார்த்து எங்கள் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை அது தேவை என்று நினைக்கிறோம். நீட்டை எதிர்ப்பது கல்வி மாஃபியாவும் தி.மு.கவும்தான். மக்கள் விரும்புவதன் பின்னால் செல்வது தலைமைப் பண்பு அல்ல. நாட்டுக்கு எது தேவையோ அதை மக்களிடம் சொல்லவேண்டும். அது புரிய காலம் எடுக்கலாம். ஆகட்டுமே. பா.ஜ.க. சரியான திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறது.

கே. தமிழகத்தின் தற்போதைய அரசு குறித்து உங்கள் கருத்து என்ன?

ப. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக அரசே இல்லையே. ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டவுடனேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை. பிறகு காலமாகிவிட்டார். பிறகு கட்சியில் பல பிளவுகள். 2016 மே மாதத்திலிருந்தே இங்கு அரசு இல்லை.

கே. இருந்தபோதும் தற்போதைய தமிழக அரசுக்கு மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் மோதி ஆதரவாக இருந்துவருகிறார்.

ப. அது நிர்வாக ரீதியான ஆதரவு. அரசியல் ரீதியான ஆதரவு அல்ல. மத்திய அரசு இந்த அரசை தாங்கிப் பிடிக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் வரவில்லையென்பதால் அரசு நிற்கிறது. தீர்ப்பு வந்தவுடன் புதிய ஆளுனர் முடிவெடுப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :