You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாஜ் மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள்? மத்திய அரசை சாடும் பிரகாஷ் ராஜ்
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோதி அரசாங்கத்தை எதிர்த்து காட்டமான கருத்துக்களை பதிந்து வருகிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மை தினங்களாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் #justasking என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஜி.எஸ்.டி, தாஜ் மஹால், மொழி திணிப்பு குறித்து தனது கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கெளரி லங்கேஷ் கொலை குறித்து திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து சமூக வலைத்தளங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும், கேலிகளுக்கும் உள்ளானார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், ''நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். அது என்னுடைய அடிப்படை உரிமை. நான் தனிபட்ட முறையில் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், என்னை தொடர்ந்து கீழ்தரமாக விமர்சித்து வருபவர்கள் உங்களது கருத்துகள் அருவருப்பாக இருக்கின்றன. உங்கள் ஒவ்வொருவரின் வசைபாடும் என்னுடைய கவலைகளை இன்னும் அழுத்தமாக தெரிவிப்பதற்கான பலத்தை கொடுக்கும்'' என்று கூறியுள்ளார்.
பின்னர், தாஜ் மஹால் குறித்து கூறுகையில், உலக அதிசயமாக கருதப்படும் தாஜ் மஹால் நம் எதிர்காலத்தின் கடந்தகால நினைவாக மாறிவிடுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தாஜ் மஹாலின் அடித்தளம் அருகில் நீங்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது அதை இடிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றும், குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகளை இறுதியாக தாஜ் மஹாலை காண அழைத்து செல்வோமோ என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், ஜி.எஸ்.டி, கைவினை கலைஞர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து வருவதாகவும், நவம்பர் மாதத்தில் நடைபெறும் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் கைவினை பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 0% ஆக மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரே மொழியை எங்கள் மீது திணிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவா அல்லது எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவா என்று மாநிலங்கள் மீதான மொழித்திணிப்பு குறித்து மத்திய அரசை பிரகாஷ் ராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர், 'இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு' என்ற நிகழ்ச்சியின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில், ''கெளரியை கொலை செய்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் நமது பிரதம மந்திரியை தொடர்கிறார்கள் என்றும், நமது பிரதமரோ, இந்த விசயத்தில் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேச அரசை வழிநடத்துபவர் ஒரு பூசாரியா அல்லது முதலமைச்சரா என்பதே தெரியவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்