You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எனது தேசப்பற்றை சோதிக்க வேண்டாம்: கமல்ஹாசன்
இந்தியாவிலுள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடமிடருந்து பதில் கேட்டுள்ள நிலையில், தனது தேசப்பற்றை சோதிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான, நீதிபதி டி.ஒய்.சந்தரசூட், "நாட்டுப்பற்று நம் தோள்களில் வேண்டியதில்லை. மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் மன அழுத்தத்தை போக்கவும் திரைப்படம் பார்க்க வருகின்றனர். டீ-சர்ட் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருப்பவர் தேசிய கீதம் இசைக்கப்படுவதால் திரையரங்குகளுக்கு வரக் கூடாது என்று சொல்லப்படலாம்," என்று கூறியிருந்தார்.
மேலும், தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்பதை மாற்ற விரும்பினால், இசைக்கலாம் என்று முந்தைய தீர்ப்பு மாற்றி எழுதப்படலாம் என்று அந்த அமர்வு கூறியிருந்தது. இதுகுறித்த சட்டம் இயற்றுவதற்காக மத்திய அரசின் பதிலையும் கேட்டிருந்தது.
என்னுடைய தேசப்பற்றை சோதிக்க வேண்டாம்
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு நள்ளிரவிலும் சிங்கப்பூர் அதன் தேசிய கீதத்தை இசைக்கிறது அதுபோல இந்தியாவும் தூர்தர்ஷனில் அவ்வாறு செய்யலாம் என்றும், பல் வேறு இடங்களில் என்னுடைய தேசப்பற்றை சோதிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து வெளியிட்ட, தன்னுடைய ட்விட்டர் பதிவில், சிங்கப்பூரை ஏன் தமது வாதத்தில் குறிப்பிட்டார் என்பதற்கு விளக்கம் அளித்துள்ள கமல், சிங்கப்பூர் இரக்கமுள்ள சர்வாதிகார நாடு என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள் என்றும், அதுபோன்ற ஆட்சிமுறை நமக்கு வேண்டுமா. தயவு செய்து வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளுக்கு மட்டும் ஏன்?
கமல்ஹாசனை போன்று நடிகர் அரவிந்த் சுவாமியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நம்முடைய தேசிய கீதத்தற்காக பெருமையோடு எப்போதும் எழுந்து நின்று பாடுவேன் என்றும், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களுக்குமுன்னரும், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தினமும் தேசிய கீதத்தை இசைக்காமல் திரையரங்குகளில் மட்டும் ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் தெளிவான ஒரு முடிவை எடுக்க உச்ச நீதிமன்றம் ஜனவரி 9 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்