You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இவர்தான் ஆதிகால சுனாமியால் பலியான முதல் நபரா?
பப்புவா நியு கினியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித மண்டையோடு, இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1929 ஆம் ஆண்டு ஐடேப் என்ற நகர் அருகே இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது. நவீனகால மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் ஹோமோ எரக்டஸ் இனத்தின் சான்றுகளை இது கொண்டுள்ளது.
எனினும், ஐடேப் நகரம் முன்பு ஒரு கடற்கரை பகுதியாக இருந்ததாகவும், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் தாக்கப்பட்டதாகவும் தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்டையோடு சுனாமியால் பலியான நபர் ஒருவரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மண்டையோடு கிடைத்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணையும், அந்த பகுதிக்கு அருகே 1998-ஆம் ஆண்டு சுனாமியால் சின்னாபின்னமான பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணையும் கொண்டு சர்வதேச குழு ஒப்பிட்டு பார்த்ததையடுத்து இத்தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் சுனாமியை எதிர்கொண்டு வந்துள்ளார்கள் என்பது வண்டல் மண்ணிலிருந்து கிடைத்த புவியியல் ஒற்றுமைகள் காட்டியதாக நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் கோஃப் தெரிவித்துள்ளார்.
''நீண்ட நாட்களுக்குமுன் பலியான இந்த மண்டையோடுக்கு சொந்தமான மனிதர் உலகில் சுனாமியால் பலியான பழமையான நபர் என்று முடிவுக்கு வந்துள்ளோம்,'' என்றார் பேராசிரியர் கோஃப்.
மணல் படிமங்களின் அளவு மற்றும் கலவை குறித்த இந்த ஆய்வு தொடர்புடையது. அதனோடு, கடலிலிருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணிய உயிரினங்கள், 1998 ஆம் ஆண்டு 2,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட சுனாமியை தொடர்ந்து சேகரிக்கப்பட்ட நுண்ணிய உயிரினங்களும் ஒன்றாக இருந்தன.
தொல் பொருட்களின் வயதை துல்லியமாக கணக்கிடும் ரேடியோ கார்பன் டேட்டிங் முறையை விஞ்ஞானிகள் குழு செய்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்