ராமருக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் பெண்ணுக்கு ஃபத்வா கொடுக்கப்பட்டதா?

முஸ்லிம்

பட மூலாதாரம், FACEBOOK

சில தினங்களுக்கு முன்பு வாராணசியில் இஸ்லாமிய பெண்கள் இந்து முறைப்படி ஆரத்தி எடுக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

தீபாவளியின்போது வெளியான இந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நாஜ்னீன் அன்சாரி, இதற்கு எதிராக 'ஃபத்வா' நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறார்.

இதற்காக தனக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக கூறும் அவர், இஸ்லாமில் இருந்தே வெளியேற்றப்படலாம் என்றும் அச்சப்படுகிறார். தனது பேஸ்புக் பதிவில் மோசமான கருத்துக்களை பதிவிடும் நபர்கள், இஸ்லாம் என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக தன்மீது குற்றம் சுமத்துவதாகவும் வருத்தப்படுகிறார்.

ராமருக்கு ஆரத்தி எடுத்ததன் பின்னணி என்ன?

30 வயதாகும் நாஜ்னீன் முஸ்லிம் மகளிர் மன்றத்தின் (MMF) நிறுவனர் மற்றும் தலைவர். எம்.எம்.எஃப் மற்றும் விஷால் பாரத் அமைப்பு இணைந்து இந்த ஆரத்தி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நாஜ்னீனிடன் பேசிய பிபிசி செய்தியாளர், இதுபோன்ற ஆரத்தியில் கலந்துகொள்ளும் முடிவுக்கு காரணம் என்ன என்று கேட்டார்.

''நாங்கள் ஆரத்தி எடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 11 வருடங்களாக நாங்கள் ஆரத்தி எடுத்து வருகிறோம். சங்கட்மோச்சன் கோயிலில் நடந்த குண்டு வெடிப்புக்குப்பிறகு, நகரில் இயல்புவாழ்க்கை சீரழிந்து வருவதை உணர்ந்து அதை சீரமைக்க முடிவு செய்தோம். எனவே 70 முஸ்லிம் பெண்கள் ஒரு குழுவாக கோவிலுக்குச் சென்று ஹனுமான் சாலிஸா படித்தோம்" என்று பதிலளித்தார் அவர்.

நாங்கள் முதல்முறையாக ஆர்த்தியை எடுத்தபோதும், எங்களுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டது, ஆனாலும் நாங்கள் ஆரத்தி எடுப்பதை நிறுத்தவில்லை.

முஸ்லிம்

பட மூலாதாரம், Getty Images

அந்த சமயத்தில் நகரத்தின் முஃப்தி கோயிலுக்கு சென்று நடவடிக்கை எடுத்து, ஃபத்வாவை முடிந்துவைத்தார்" என்று நாஜ்னீன் கூறுகிறார்.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ராமநவமியின்போது நடைபெறும் ஆரத்தியில் தான் இணைந்துக் கொள்வதாக நாஜ்னீன் கூறுகிறார்.

"ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான அச்சுறுத்தல்கள் வருகின்றன. நேரடியாக வீட்டிற்கு வந்தும் எங்களை மிரட்டுகின்றனர். கொலை மிரட்டலும் வருகிறது. எங்களை கொல்வதற்காக வீட்டின்மீது வெடிகுண்டு வீசுப்போவதாகவும் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன" என்று கவலையுடன் சொல்கிறார் நாஜ்னீன்.

ஆனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கொலை மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து எந்தப் பதிவையும் அவர் பிபிசிக்கு காட்டவில்லை. ஆனால் ஆரத்தி எடுக்கும் அவரது புகைப்படத்தில் பல ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன, இஸ்லாமிற்கு நாஜ்னீன் ஒரு களங்கம் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

நாஜ்னீனுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டது பற்றி தாருல் உலுமத் தேவ்பந்தின் நிறுவகர் அஷ்ரப் உஸ்மானியிடம் பிபிசி கேட்டபோது, நாஜ்னீன் என்ற பெயர் கொண்ட எவர் மீதும் ஃபத்வா வெளியிடப்படவில்லை என்று அவர் கூறினார்.

உருவகப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உருவகப்படம்

''ஃபத்வா வாய்மொழியாக இல்லாமல், எழுத்துப்பூர்வமாக வழங்கப்படுவது. ஃபத்வாவை ஒரு மெளல்வி வெளியிடமுடியாது. ஃபத்வா வழங்குவதற்காக பிரத்யேக குழு ஒன்று உள்ளது. ஃபத்வாவில் நான்கு அல்லது ஐந்து பேர் கையெழுத்திடவேண்டும்''. என்று அஷ்ரஃப் கூறுகிறார்,

"எங்களுக்கு எதிராக இத்தகைய விஷயங்கள் பரப்பப்படுவது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். இஸ்லாமிய எதிரிகளால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன" என்று நாஜ்னீனின் குற்றச்சாட்டை மறுக்கிறார் அஷ்ரஃப்.

காணொளிக் குறிப்பு, வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்குமாம்

தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதற்காக நாஜ்னீன் இவ்வாறு செய்கிறாரா? என்று அஷ்ரஃப்பிடம் கேட்டோம். "நான் அவரை குற்றம் சொல்லமாட்டேன். அந்த பெண் உண்மை தெரியாமல், ஊடகங்கள் மற்றும் பிறர் சொல்வதை நம்பியிருப்பார்" என்று பதிலளிக்கிறார் அஷ்ரஃப்.

நாஜ்னீனுக்கு ஃபத்வா எப்படி கிடைத்தது என்று அவரிடம் கேட்டோம். அதற்கு, ''இதுவரை எனக்கு ஃபத்வா வரவில்லை. செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சியில் பார்த்துத்தான் தெரிந்துக்கொண்டேன்'' என்று பதிலளிக்கிறார் அவர்.

முஸ்லீம்

பட மூலாதாரம், FACEBOOK/NAZNEEN ANSARI

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு தான் முன்மாதிரியாக இருக்க விரும்புவதாக நாஸ்னீன் கூறுகிறார், "இந்துக்கள் தர்காவுக்கு செல்கின்றனர், இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்கின்றனர், அது போன்றே மத நல்லிணக்கத்திற்காக நாங்கள் ஆரத்தியெடுக்கிறோம்" என்று கூறுகிறார் இந்த முஸ்லிம் பெண்மணி.

அக்டோபர் 21ஆம் தேதியன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஜ்னீன் பதிவேற்றிய காணொளிப் பதிவுக்கு சாதகமாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

''முஸ்லிம் ஆண்கள் மது குடித்துவிட்டு மனைவியை அடிக்கும்போது இந்த மெளலானாக்கள் எங்கு செல்கிறார்கள்? தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை வாழ்க்கையை விட்டு விலக்குபோது என்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்? நான் ஆரத்தி செய்வதால் பலவீனமாகிவிடும் நிலையில் நம்முடைய இஸ்லாம் இல்லை.'' என்று தனது ஃபேஸ்புக் பதிவில் நாஜ்னீன் கேள்வி எழுப்பியுள்ளார்,

வாராணசியின் பல அமைப்புகள் நாஸ்னீனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இப்போது ஃபத்வா என்பது அச்சுறுத்தலுக்கான ஒரு வழி, வேறு ஒன்றும் இல்லை என்று விஷால் பாரத் அமைப்பின் தலைவர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தவ் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :