You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு
விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
மெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, "சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை" என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள்.
"தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது," என்று தமிழிசை கூறினார்.
மேலும், "நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து மக்களிடம் நேர்மையாக சொல்ல முடியவில்லை. அதற்கு நேர்மையாக வரி கட்ட முடியவில்லை.
இப்படிப்பட்டவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் பிரதமரின் திட்டத்தை குறைகூற முடியாது," என்றும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் தமிழிசை கூறினார்.
மெர்சல் திரைப்படத்தில் இந்தக் காட்சி மட்டுமல்லாமல், வடிவேலு நடித்துள்ள மற்றொரு காட்சியில், வெளிநாட்டில் பர்ஸை திருடும் கொள்ளையர்களிடம் "ஐ ஆம் இந்தியா. அங்கே இப்போ டிஜிட்டல் மணி, சோ நோ மணி" என்று அவர் கூறுவதைப் போல உள்ள காட்சியும் பா.ஜ.கவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்