நிலவேம்பு குறித்த நடிகர் கமலின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பும், ஆதரவும்

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை தனது இயக்கத்தினர் நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்க வேண்டாம் என்ற நடிகர் கமலின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் நிலவேம்புக் குடிநீரை தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகளும், தன்னார்வத் நிறுவனங்களும் மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகின்றன.

இந்நிலையில், நிலவேம்பு குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படுமென்றும், அதன் பயன்பாடு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

நிலவேம்பு குறித்த புரளிகளை நம்ப வேண்டாமென்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று நிலவேம்பு குறித்து தனது இயக்க தொண்டர்களுக்கு நடிகர் கமல் எழுதிய இரண்டு பதிவுகள் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

கமலின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நிலவேம்பின் பயன்கள் குறித்து அலோபதி ஆராய்ச்சிகள் உண்டென்றும், அரசின் அதிகாரபூர்வமான விஞ்ஞான ரீதியான சிகிச்சை குறித்து வீண் வதந்தி பரப்பி வருவோரை கண்டிப்பதோடு நடவடிக்கை எடுப்போம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மற்றொரு பதிவில் கமலுக்கு மறைமுகமான கண்டனத்தையும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கமலின் ட்விட்டிற்கு மறுமொழியாக ஏராளமான கருத்துக்கள் மக்களால் பதியப்பட்டுள்ளன.

செல் முருகன் என்பவர், நிலவேம்பு குடித்து பக்கவிளைவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தர முடியுமா என்று கமலிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ட்ரிக்கர் என்ற பெயரில் கணக்குள்ள ஒருவர், சித்த மருத்துவத்தை போன்று மற்ற சிகிச்சை முறைகளையும் கேள்விகேட்க தைரியமுள்ளதா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஸ்கர் என்ற பயன்பாட்டாளர், உலக விஞ்ஞானத்தின் முன்னோடிகளான சித்தர்களாலேயே நிலவேம்பு உருவாக்கப்பட்டதென்று பதிவிட்டுள்ளார்.

கமல் ஒரு முன்னெச்சரிக்கையாகவே இதை தெரிவித்துள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரும் வரை டெங்கு காத்திருக்காது என்று மற்றொரு பயனர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை இதுபோன்ற ட்விட்டுகளால் குழப்ப வேண்டாமென்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயனர், கமல் தன் இயக்க உறுப்பினர்களுக்குதான் இதை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நிலவேம்பு குறித்த கமலின் கருத்துக்கு சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது மற்ற நிலைகளிலும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்