You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ''ஒத்துழைப்பு உறவில்" இந்தியா கூட்டாளியாக இருப்பதாகக் கூறிய அவர், ஜனநாயம் இல்லாத சமூகமான சீனாவிடம் இதேபோன்ற உறவை அமெரிக்கா வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.
தென் சீன கடல் சர்ச்சையை எடுத்துக்காட்டாகக் கூறி, சீனா சில சமயம் சர்வதேச ஒப்பந்தங்களை மீறி நடந்துகொள்வதாக கூறினார்.
டில்லர்சன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள நிலையில் இக்கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்ல உள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் சிந்தனையாளர்கள் குழுவில் பேசிய டில்லர்சன் "சீனாவுடன் ஆக்கப்பூர்வமான உறவுகளை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால், விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைவுக்கு சீனா விடுக்கும் சவாலை கண்டு துவண்டுவிட மாட்டோம். அண்டை நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவது மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நண்பர்களுக்கும் பாதகம் ஏற்படுத்துவதே சீனா விடுக்கும் சவால்" எனக் கூறினார்.
இந்தியாவும், அமெரிக்காவும் உலக கூட்டாளிகளாக வளர்ந்துகொண்டிருப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் ஜனநாயகத்தில் மட்டும் இணக்கமாக இல்லை எனவும் எதிர்காலத்துக்கான லட்சியத்தையும் பகிர்ந்துகொள்வதாக கூறினார்.
உலகில் மைய இடத்தை எடுக்கும் புதிய சகாப்தத்தில் சீனா நுழைந்துள்ளது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய பிறகு, டில்லர்சன்னிடம் இருந்து இக்கருத்துக்கள் வந்துள்ளன.
"தென் சீன கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களை" விமர்சித்த அவர், அமெரிக்காவும் இந்தியாவும் மதிக்கும் சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளுக்குச் சீனா சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.
"பிற நாடுகள் தங்களது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு, அவர்களைத் தயார்படுத்தும் வேலையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட வேண்டும். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்கள் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு இருநாடுகளுக்கும் பிராந்திய கட்டமைப்பில் வலிமையான குரல் இருக்க வேண்டும்." எனவும் டில்லர்சன் கூறினார்.
டில்லர்சன்னில் பேச்சுக்குப் பிறகு அறிக்கை மூலம் பதிலளித்த வாஷிங்டனில் உள்ள சீனா தூதரகம்," சீனா மேலாதிக்கத்தையும் விரிவாக்கத்தையும் விரும்பவில்லை. மற்றவர்களின் நலன்களைப் பாதிக்கும் வளர்ச்சி எங்களுக்கு ஒருபோதும் தேவையில்லை" என கூறியுள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளைச் சீனா பாதுகாப்பதாவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்