பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, 2017 ஆகஸ்ட்டில் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டு, ஜோலர்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனின் உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறி, மகன் அவருடன் இருக்க அனுமதி கோரி அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கைத் தொடர்ந்து தமிழக அரசு பரோலை நீட்டித்துள்ளது.

அதே மனுவில் பேரறிவாளனின் உடல்நலனையும் கவனிக்க வேண்டும் என்பதால் பரோலைஒரு மாத காலம் நீடிக்கவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

அரசுக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள், பேரறிவாளனின் இருப்பு அவரது தந்தைக்கு ஆறுதல் தருவதாக உள்ளது என்றார்.

அற்புதம் அம்மாள்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, அற்புதம் அம்மாள்

''பல ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு சிறையில் இருந்த மகன் எங்களுடன் இருப்பது எங்களுக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது. என் கணவரின் உடல்நலம் சீராக மகன் உடன் இருக்கவேண்டும் என்று கேட்டோம். அரசு எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தற்கு நன்றி,'' என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மகனின் விடுதலைக்காக போராடிய தாயான அற்புதம்மாள், பரோலில் உள்ள மகனுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.

''நிரந்தர விடுதலை கொடுத்தால் மட்டுமே கல்யாணம் செய்து கொள்வேன்னு மகன் சொல்லிவிட்டான். ஆனா, ஒரு தாயாக அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கணும்னு மனசு தவிக்குது,'' என்றார் அற்புதம்மாள்.

பேரறிவாளின் வழக்கறிஞர் சிவக்குமார் பேசுகையில் பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன் தனது இல்லத்தில் மட்டுமே தங்கவேண்டும் என்பதால் அவரது குடும்ப உறவினர்கள் அவரை வீட்டில்வந்து சந்திப்பதாக கூறினார்.

''நண்பர்கள், உறவினர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனை சந்திக்கிறார்கள். எங்கள் மனுவை அரசு பரிசீலித்துள்ளதால் மகிழ்ச்சியோடு உள்ளோம்,'' என்றார் சிவக்குமார்.

பரோலில் உள்ள பேரறிவாளன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :