ஆளுநருடன் தினகரன் தரப்பு மீண்டும் சந்திப்பு; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரிக்கை

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தார்.

டி.டி.வி.தினகரன்

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு, டி.டி.வி.தினகரன்

முதலமைச்சர் பழனிச்சாமி சட்டசபையைக் கூட்டி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் ஆளுநகர் வித்யாசாகர் ராவை இன்று நன்பகலில் ஆளுனர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

அவருடன் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் புதிதாக அவருக்கு ஆதரவளித்துள்ள கலைச்செல்வன், கருணாஸ், ரத்னசபாபதி ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்தனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி..வி. தினகரன், "எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏற்கனவே 19 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்திருக்கும் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினோம்.

கடந்த ஐந்தாம் தேதி எடப்பாடி கூட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 117 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

ஆகவே அவருக்குப் பெரும்பான்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

ஆகவே முதலமைச்சர் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென ஆளுனரிடம் கோரினோம்" என்று தெரிவித்தார்.

தற்போது தமிழக அரசின் பெரும்பான்மை தொடர்பாக ஏற்பட்டிருப்பது உட்கட்சிப் பிரச்சனை அல்ல என்று ஆளுனரிடம் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த ஆளுனர் நிலைமையைக் கூர்ந்து கவனித்துவருவதாகவும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகவும் தினகரன் கூறினார்.

ஜக்கையன் குறித்து

இதற்கிடையில், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த எஸ்.டி.கே. ஜக்கையன் இன்று சபாநாயகரைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்கையன், "எது பெரும்பான்மையோ அதன் பக்கமே இருக்க நினைத்தேன்.

ஒரு கட்சி ஆட்சிக்கு வர பல சிரமங்களைப்பட வேண்டியிருக்கிறது. அப்படி ஏற்பட்ட ஆட்சி கலைந்துவிடக்கூடாது. இந்த சூழல் தி.மு.கவுக்கு சாதகமாகிவிடக்கூடாது என்று நினைத்தேன்" என்று கூறினார்.

இது குறித்து தினகரனிடம் கேட்டபோது, "நேற்று இரவில் என்னிடம் பேசிய ஜக்கையன், தலைமைநிலையச் செயலர் பதவி கேட்டார். இன்று காலையில் ரயிலை விட்டு இறங்கியவுடன் அங்கே போய்விட்டார்.

எது பாதாளம்வரை பாயுமோ, அது பாய்ந்திருக்கிறது" என்று மட்டும் கூறினார்.

கவர்னரை சந்திக்க திமுக திட்டம்

இந்த நிலையில், வரும் பத்தாம் தேதியன்று ஆளுனரைச் சந்திக்க தி.மு.கவின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :