கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் 42 குழந்தைகள் மரணம்

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்திருக்கும் சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் இந்த மருத்துவ கல்லூரியில் இறந்துள்ளன.

"இந்த குழந்தைகள் திடீரென இறந்துள்ளன. ஆனால், இந்தப் பருவத்தில் இது வழக்கமற்றது அல்ல" என்று பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிகே சிங் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் இறந்துள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதில் 7 குழந்தைகள் மூளை வீக்கத்தால் இறந்துள்ளன.

தீவிர நிலைமை

நோய் முற்றிய தீவிர நிலைமையில் குழந்தைகள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால். தேவையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், அவர்களை காப்பாற்றுவது கடினமாகிவிடுகிறது என்று டாக்டர் பிகே சிங் தெரிவித்திருக்கிறார்.

கோரக்பூரில் ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாடோ, மருந்துகள் தட்டுப்பாடோ கிடையாது என்று கூறியுள்ளார்.

ஆனால், சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் கொண்டுவரப்படும் குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் கொண்டுவரப்படுவதால், இயன்ற முயற்சிகள் எடுத்தாலும் மருத்துவர்களால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது என்று அவர் விளக்கியுள்ளார்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் காலமாக இருக்கிறது என்று டாக்டர் பிகே சிங் தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகள் இறப்பு

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடிய மூளை காய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுகள் இந்த காலத்தில் அதிகமாக உள்ளன.

இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய சிகிச்சைப் பிரிவில் இன்னும் 342 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, ஆகஸ்ட் 10 தேதி அதிக எண்ணிகையிலான குழந்தைகள் இந்த மருத்துவமனையில் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

ஐந்து நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கின்றன.

அந்நேரத்தில் மருத்துவமனையின் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் இந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணமாகியது என்று குற்றஞ்சாட்டு எழுந்தது.

அதிக குழந்தைகள் இறப்பு சம்பவத்திற்கு பொறுப்பாளராக கருதப்படும் இந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ராவையும். அவரது மனைவி பூர்ணிமாவையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :