கோரக்பூர்: பல உயிர்களை பலி வாங்கிய மருத்துவமனையில் பதட்டத்துடன் பெற்றோர்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வார்டு எண் 100ஐ யாருக்குதான் தெரியாது?

என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டாக கட்டப்பட்டுள்ள இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது.

30 குழந்தைகள் இறந்த பின்னர் சனிக்கிழமை காலையில், பிபிசி செய்தியாளர் அந்த மருத்துவமனையை சென்றடைந்தபோது, அந்த மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் தரையிலும், மாடிப்படிகளிலும் படுத்துக்கிடந்தனர்.

தீவிர நோயுற்றிருந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்ற நிலையில், அந்த குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் பதட்டமும், எமாற்றமும் தென்பட்டன.

மருத்துவமனையின் வெளியில் இருந்தோரிடமும், அவசரப் பிரிவில் இருந்தோரிடமும் பிபிசி செய்தியாளர் பேசியபோது, அனைவருமே அங்கு நடப்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் கடும் கவனக்குறைவை பற்றி சூசகமாக குறிப்பிட்டனர்.

குஷி நகரிலிருந்து வந்த சாமினா தன்னுடைய பேரனோடு நான்கு நாட்களாக இந்த மருத்துவமனையில் இருக்கிறார்.

"நான் மும்பையில் இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய மகளின் 3 வயது மகன் தீடீரென நோயுற்றான். அவனை நான் இங்கு கொண்டு வந்தவுடன் அவனுக்கு மூளை காயச்சல் வந்திருப்பது தெரிய வந்தது. இந்த நான்கு நாட்களும் அவனுடைய வாயிலும், மூக்கிலும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதற்கு, என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்று யாரும் கூறவில்லை" என்று சாமினா தெரிவித்தார்.

சாமினா மட்டுமல்ல, மக்கள் பலரும் இதே புகாரைதான் தெரிவித்தனர்.

நிர்வாக குளறுபடியின் காரணமாக 30 குழந்தைகள் இறந்த வெள்ளிக்கிழமையன்று இந்த மருத்துவமனையின் பெயர் தலைப்பு செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது. .

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெரிந்த பின்னரும் மருத்துவமனை அதிகாரிகள் கூடுதலான ஆக்ஸிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், உள்ளூர் செய்தித்தாள் இறந்தோரின் எண்ணிக்கையை 50 என்று குறிப்பிட்டுள்ளது.

"10 முதல் 20 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வெள்ளிக்கிழமையன்று இறந்த உடல்களுக்கு மேல் உடல்கள் கிடக்கும் அளவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்து விட்டன" என்று பொருள்படும் வகையில் மூத்த பெண்ணொருவர் உள்ளூர் போஜ்புரி மொழியில் தெரிவித்தார்.

"நேற்று 50 குழந்தைகள் இறந்துவிட்டன. யாரும் கேள்வி கேட்பதற்கில்லை" என்று அந்த பெண்ணோடு நின்றிருந்தோர் சூசகமாக தெரிவித்தனர்.

இதேவேளையில், குழந்தைகளின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுத்துள்ளது.

ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானவை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருவதற்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் கடிதத்தை ஆக்ஸிஜன் விநியோக நிறுவனம் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு எழுதியுள்ளது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கடன்களை அடைக்காத பட்சத்தில் ஆக்ஸிஜன் விநியோகம் வழங்க முடியாமல் போகும் என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முன்னி தேவி வயிற்றுப்போக்கால் துன்புற்ற தன்னுடைய குழந்தையை கொண்டு இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

"குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதற்கு குழாய் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

தற்போது தன்னுடைய குழந்தையின் உடல்நிலை முன்னேறி வருவதால், முன்னி தேவி திருப்பதி அடைந்துள்ளார்.

ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதயங்களை நொறுங்க செய்த குழந்தைகளின் இறப்பு சம்வத்தை நினைத்து அவர் கண்ணீர் வடிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :