அதிமுக அணிகள் இணைப்பு முட்டுக்கட்டைக்கு யார் காரணம்?
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக இருப்பது யார் என்பது பற்றி அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்று அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில், இணைப்பு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை மாலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்களும் செய்தியாளர்களும் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை குவிந்தனர்.
ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன், பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள் மாலை ஐந்து மணியளவில் வந்தனர்.
இதையடுத்து இணைப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், கூட்டத்தின் முடிவில் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக செய்தியாளர்களிடம் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Arun shankar
அதற்கேற்ப, ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கட்சியில் இருந்து விலகிச் சென்றார். அதே சமாதியில் அவர் விரைவில் இணையப் போகிறார்" என்று கூறினார்.
இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பதை அங்கிருந்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இணைப்பு பற்றிய முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு அணியில் கருத்து எட்டப்படவில்லை என்று அக்கட்சியினர் பரவலாக பேசத் தொடங்கினர்.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி விட்டு நேற்றிரவு அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூடியிருந்த அதிமுக கட்சி பிரமுகர்களும் கலைந்து சென்றனர்.

முன்னதாக, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தனர்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், சசிகலாவால் டி.டி.வி.தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது "செல்லாது" என அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மறைவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகளில் முக்கியமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இணைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் தாயாரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து வெள்ளிக்கிழமையன்று நலம் விசாரித்தனர்.
இது பற்றி எமது பிபிசி செய்தியாளர் முரளிதரன் கூறுகையில், "பன்னீர்செல்வம் அணியில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அல்லாதவர்களுக்கு கட்சியில் மீண்டும் இணையும்போது கிடைக்கக் கூடிய அங்கீகாரம், பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கக் கோருவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிரு்க்கலாம்" என்றும் அதிமுக பிரமுகர்கள் தரப்பில் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான நிர்மலா பெரியசாமி, "சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் தனித்தனியாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டார் என்றும், ஜனநாயக நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவர் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார் என்றும், முடிவு என்ன என்பதை அவரே நேரடியாக அறிவிப்பார்" என்றும் கூறினார்.
ஆனால், நள்ளிரவுக்குப் பின்பும் பன்னீர்செல்வமோ அவரது சார்பிலோ யாரும் வந்து ஊடகத்திடம் பேசவில்லை.
இந்நிலையில் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சனிக்கிழமையும் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
- விஷால் சிக்கா பதவி விலகல் குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனர் பதில்
- பின்லாந்து: பலரை கத்தியால் குத்தியவரை சுட்டுப்பிடித்த போலீஸ்
- இலங்கை கடற்படையின் தளபதியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நியமனம்
- காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா
- குஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












