You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிவிட்டரில் வைரலாகும் "ராகுலை காணவில்லை" சுவரொட்டிகள்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆறு மாதங்களில் ஒரு முறை கூட தனது மக்களவை தொகுதியான அமேதி தொகுதிக்கு செல்லாத நிலையில் அவரைக் காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அமேதியில் ஒட்டப்பட்டுள்ளன.
ஆனால், அந்த சுவரொட்டிகளை ஒட்டியதற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்வில்லை.
இந்நிலையில், அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் பரவலாக விமர்சனம் செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சுவரொட்டியின் படத்தை, ராகுல் காந்தி, சில காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் முகவரிகளுக்கும் குறியிட்டு, பயன்பாட்டாளர்கள் சிலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
சிவகுமார் குருமூர்த்தி என்ற பயன்பாட்டாளர், "அமேதியில் ராகுலை காணவில்லை என்ற சுவரொட்டிகள் வந்துள்ளன. ஐரோப்பாவுக்கு அமேதியை அனுப்பி வைத்தால் அத்தொகுதியை அவர் பார்ப்பார்" என்று கூறியுள்ளார்.
ஜெய்குமார் சர்மா என்பவர் , "ராகுலை காணவில்லை. அவர் எங்கே இருக்கிறார்? அமேதி மக்கள் அவரை தேடி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெகதீஷ் புயான், "ராகுலை காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அமேதியில் காணப்படுகின்றன. விரைவில் காங்கிரஸ் கட்சியை காணவில்லை என்ற சுவரொட்டிகள் இந்தியா முழுவதும் வரும்" என்று கூறியுள்ளார்.
இது பற்றி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற செயலில் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும்" என்றார்.
ஆனால் அக்குற்றச்சாட்டை மறுத்த மாவட்ட பாஜக தலைவர் உமா சங்கர் பாண்டே, "தொகுதிக்கு ஏதாவது ராகுல் செய்திருந்தால், இதுபோன்ற நிலைமை வந்திருக்காது" என்று கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி உள்ளார்.
சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றார்.
அதன் பிறகு பல்வேறு மாநிலங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, அமேதிக்கு செல்லவில்லை.
கடந்த வாரம் குஜராத் மாநிலத்துக்கு ராகுல் சென்றபோது அவரது வாகனத்தின் கண்ணாடியை சில விஷமிகள் உடைத்ததாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
அந்த விவகாரத்தை இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் இன்று எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
அதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் வேளைக்குப் பிறகு இன்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன.
பிபிசியின் பிற செய்திகள்:
- அரசியல் நெருக்கடியால் பள்ளிக்கல்வித்துறை செயலரை மாற்ற முயற்சியா?
- காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை
- கருவுற்றதை அறியாத 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு
- கடல் பூச்சிகள் கடியால் கால்களில் ரத்தம் வழிய தவித்த சிறுவன்
- தனது தளர்ந்த மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்