'ராகுல் காந்தியின் தேவை கீதையல்ல, இந்த ஏழு புத்தகங்களே'

ஆர்.எஸ்.எஸை எதிர்கொள்ள பகவத்கீதை மற்றும் உபநிஷத்துக்களை படித்து வருவதாக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் கிண்டலான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை கேலிக்குரிய விஷயமாக பார்க்காமல், இந்தியாவை புரிந்துக் கொள்வதற்காக, ராகுல் காந்தி எதுபோன்ற புத்தகங்களை படிக்கலாம் என்று அக்கறையுடன் சிந்திக்கவேண்டும்.

பிரபல பத்திரிகையாளர் மதுகர் உபாத்யாய் அவர்களிடம் இது குறித்து பேசினோம்.

ஒரு அமைப்பை எதிர்கொள்வதற்காக புத்தகங்கள் படிப்பது பலன் தருமா? ராகுல் காந்தி எதுபோன்ற புத்தகங்களை படிக்கலாம் என்று அவரிடம் கேட்டோம்.

மதுகர் உபாத்யாய்யின் கருத்து

உங்கள் முதல் கேள்விக்கான பதில் இல்லை என்பது தான். ஒருவர் முதலில் தன்னுடைய வாழ்விடத்தைப் பற்றி சுயமாக ஆராயவேண்டும்.

காங்கிரஸ் கட்சி, மக்களுடனான தொடர்பை இழந்துவருவதாக ராகுல்காந்திக்கு தோன்றினால், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக என்ன படிக்கவேண்டும் என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.

மற்றவர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது அவருக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால், எதிர்தரப்பினரின் புத்திசாலித்தனத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நெறிமுறைகள், தெற்காசியா, மதம், கலாசாரம் போன்ற முக்கியமான விஷயங்களுடன் தொடர்புடைய புத்தகங்களை படிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

இதன் அடிப்படையில் ராகுல் காந்தி இதுபோன்ற புத்தகங்களை படிக்கலாம்.

1. பஞ்சதந்திரக் கதைகள் - மக்களுடன் எப்படி சிறப்பாக தொடர்பு கொள்ளாலாம் என்பதை விஷ்ணு ஷர்மா எழுதிய பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நன்றாக விளக்கும்.

பஞ்சதந்திரக் கதைகளை படித்தால், தொடர்புகளுக்கு புத்துயிரூட்டுவது, அவற்றை மேம்படுத்துவது ஆகியவை வசப்படும்.

2. பெளத்த மதக் கதைகள் - புத்தரின் அறநெறிகளான திரிபிடகத்தின் பல பகுதிகளில் முக்கியமான ஒன்று, பெளத்த ஜாதகக் கதைகள். இது புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய கதைகளைக் குறிக்கும்.

அதிகாரங்களுடன் தொடர்புடைய இந்தக் கதைகளில் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். செயல்பாடுகள், நிர்வாக நுணுக்கங்களை கற்றுக் கொள்ள உதவும் புத்தகம் இது.

3. டிஸ்கவரி ஆஃப் இந்தியா - பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய இந்தப் புத்தக்கத்தை இந்தியக் குடிமக்கள் அனைவரும் படிக்கவேண்டும். எனெனில், உலக சரித்திரம் பற்றி ஒரு அழகான பார்வையை அளிக்கும் ஒரு சிறந்த புத்தகம் இது. உலகை, இந்தியாவைப் பற்றி நன்றாக புரிந்துக்கொள்ள இதைவிடச் சிறந்த புத்தகம் வேறு எதுவும் இல்லை.

4. மகாத்மா - தினாநாத் கோபால் டெண்டுல்கரின் 'மகாத்மா'. மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிய எட்டு தொகுப்புகளைக் கொண்ட நூலை ராகுல் காந்தி எப்போதும் தன்னுடன் வைத்திருக்கவேண்டும். புத்தகத்தில் இருந்து குறிப்புகளை எடுத்து பயன்படுத்தலாம்.

இந்த புத்தகம் இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. மக்கள் படித்து, வாழ்க்கையில் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

5. முனைவர். பாண்டுரங்க வாமன் காணே எழுதிய "தர்ம சாத்திரத்தின் வரலாறு". ஐந்து பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், இந்திய தத்துவத்தின்படி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணர்கள், பின்தங்கியவர்கள் என பல விஷயங்கள் குறித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தக்கத்தை வாசித்தால் நீங்கள் ஆன்மீகவாதியாகவோ அல்லது தத்துவஞானியாகவோ மாறிவிடுவீர்கள். இந்தப் புத்தகத்தை படித்தால், சரியான புரிதல் ஏற்படும்.

6. `த வொண்டர் தட் வாஸ் இந்தியா`. இந்த தலைப்பில், சையத் அத்ஹர் அப்பாஸ் ரிஜ்வி ஒரு புத்தகத்தையும், ஏ.எல்.பாஷம் ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்கள். இவற்றில் ரிஜ்வியின் புத்தகம் இந்தியக் கோணத்தில் இருந்து எழுதப்பட்டது, எனவே ரிஜ்வியின் புத்தக்கத்தை படிக்கலாம்..

1200 முதல் 1700 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான இந்திய வரலாற்றை அலசும் புத்தகம் இது. இது மிகவும் முக்கியமான புத்தகம்.

ரிஜ்வியின் மற்றொரு முக்கியமான புத்தகம், தெற்காசிய நாகரிகத்தின் அடையாளங்கள் (Landmarks of South Asian Civilization) என்ற புத்தகம், தெற்காசியாவின் வரலாறு பற்றிய சிறந்த புத்தகம். இதையும் படிக்கலாம்.

7. திருக்குறள் -இரண்டாம் நூற்றாண்டில் திருவள்ளுவரால், எழுதப்பட்ட திருக்குறள் எல்லா காலத்திற்கும் ஏற்ற நூல், உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுவது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் அறம், பொருள், இன்பம் என்று முப்பெரும் பிரிவுகளாய் அமைந்துள்ளது.

திருக்குறளை படிப்பதற்கும் பரிந்துரை செய்கிறேன்.

பொதுமக்களுடன் அடிப்படையாக இணைய பஞ்சதந்திரக் கதைகள்… பிறகு இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு என்ற வரிசையில் இந்த புத்தகங்களை ராகுல் காந்தி படிக்கலாம்.

தார்மீக போதனைகள் மற்றும் தத்துவத்திற்கு, திருக்குறள் மற்றும் தர்ம சாஸ்திர புத்தகங்களை படிக்கலாம்.

(மதுகர் உபாத்யாய் உடன் பிபிசி நிருபர் சுஷில்குமார் ஜா உரையாடியதன் அடிப்படையில் எழுத்தப்பட்டது)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்