கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த ஆஸ்திரேலிய சிறுவன்

சிலந்தி அளவிலான கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுவன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் காயத்தின் காட்சி நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை சாம் கனிசே (16) , மெல்போர்னின் பிரைட்டன் கடலில் கால்களை நனைத்த பிறகு, அவரது கால்களிலும் கணுக்கால்களிலும் ரத்தம் வழிந்துள்ளது.

``போரில் அடிப்பட்டது போல`` தன் மகன் வீட்டுக்கு வந்ததாகக் கூறும் சாம்மின் தந்தை ஜரோட் கனிசே, அவனது கால்களில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை என்கிறார்.

சதையை உண்ணும் பூச்சியை கண்டறிவதற்காக, நிபுணர்களின் கருத்துக்களை சாமின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

இவை சிறிய கடல் விலங்கான, கடல் பூச்சியாக இருக்கலாம் என கடல் உயிரியலாளர்கள் கூறியுள்ளனர்.

அன்று மாலை கால்பந்து விளையாடிய சாம், பிறகு தனது வீட்டின் அருகில் உள்ள கடற்கரையில் கால்களை நனைக்க முடிவு செய்திருக்கிறார்.

இடுப்பளவு தண்ணீரில் சாம் அரைமணி நேரம் நின்றிருந்தபோதும், அவர் எதையும் உணரவில்லை. ஆனால், கால்களில் ரத்தம் வழிய வழிய அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

`` போரில் குண்டு தாக்குதலில் அடிப்பட்டது போல சாம் வீடு திரும்பினான். நாங்கள் அவனது கால்களை கழுவினோம். ஆனால், கழுவிய பிறகு மீண்டும் ரத்தம் வழிய ஆரம்பித்தது`` என்கிறார் சாமின் தந்தை.

ஊசி குத்தியது போன்ற இந்த காயத்திற்கான காரணத்தை இரண்டு உள்ளூர் மருத்துவமனையால் கண்டுபிடிக்க முடியாததால், சாமின் தந்தையே இதற்கான காரணத்தை கண்டுபிடிக்கக் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

``சம்பவம் நடந்த அதே இடத்தில் இருந்து இந்த வித்தியாசமான உயிரினங்களை, வலை மூலம் பிடித்து சேகரித்தேன்`` என அவர் கூறுகிறார்.

``இந்த சிலந்தி அளவிலான சிறிய பூச்சிகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் எங்களுக்குக் கிடைத்தது. இதனை நிபுணர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்`` எனவும் தெரிவித்துள்ளார்.

மணல் நிற பூச்சிகள் எனது மகனுக்குப் பயத்தை ஏற்படுத்தாது என நம்புவதாகக் கூறும் ஜரோட் கனிசே, தனது மகன் முழுமையாக குணமடைவான் என எதிர்பார்க்கிறார்.

``சாம், உணவருந்திக்கொண்டிருந்த இந்தப் பூச்சிகளை தொந்தரவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த வகையான பூச்சிகள் தாக்குதல் நடத்துவதற்காகக் காத்திருக்கும் வகை அல்ல`` என கடல் உயிரியல் நிபுணர் டாக்டர் ஜெனிஃப் வாக்கர் ஸ்மித் கூறுகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :